கொரோனா பரவல் காரணமாகக் கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அவற்றில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கிடையில், சமீபத்தில் சில ஊரடங்கு விதிமுறைகள் தளர்வுகள் செய்யப்பட்ட நிலையில், நாளை முதல் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. இந்நிலையில், பள்ளிகளில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பகிர்ந்துகொண்டார்.
பள்ளிகள் திறக்கப்படுவதனால், கடந்த சில தினங்களாகக் கிருமிநாசினி தெளித்து பள்ளிகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன என்றும் ஒவ்வொரு வகுப்பிலும் கட்டாயம் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும் என்றும் செய்தியாளர்களின் சந்திப்பின்போது பொய்யாமொழி கூறினார். மேலும், தங்களின் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பப் பெற்றோர் அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறினார்.
பள்ளிகளில், ஒரு நாளில் 5 வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும் என்றும் விளையாட்டு நேரம் ஒதுக்கப்படாது என்றும் தெரிவித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிக்கு வருவதால், மாணவர்கள் உளவியல் ரீதியாகத் தயாரான பிறகு மட்டுமே வகுப்பெடுக்க வேண்டும். உடனே பாடம் எடுக்க ஆரம்பிக்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், வாரத்தில் 6 நாட்கள் காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை பள்ளிகள் இயக்கப்படும் என்றார். பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டாய மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். பள்ளியிலும் கிருமிநாசினி, மாஸ்க்குகள் வைத்திருக்க வேண்டும். ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்ட பிறகுதான் பள்ளிக்கு வர வேண்டும்.
மேலும், தற்போதைய சூழலில் அடிப்படை விஷயங்களை மட்டுமே கற்றுக்கொடுக்கப்படும் என்பதால், மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என்கிற கட்டாயமில்லை என்றும் தெரிவித்த பொய்யாமொழி, பள்ளி திறந்த நாளே படி படி என சொல்வது அவர்களுக்கு மேலும் வெறுப்பையும் மன அழுத்தத்தையும் தரும் என்றும் குறிப்பிட்டார்.
தற்போது 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்கவில்லை என்பதால், அந்த வகுப்பறைகளை 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பயன்படுத்தலாம் என்று தெரிவித்தார். மேலும், கல்வி தொலைக்காட்சி வழக்கம் போல் இயங்கும் என்றும் கூறினார்.
(நன்றி Indianexpress)