புதுடில்லி : ‘தீர்ப்புகள் உத்தரவுகள் வாயிலாக மட்டுமே நீதிபதிகள் பேச வேண்டும். மாறாக வாய்மொழி உத்தரவுகளை பிறப்பிக்க கூடாது’ என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
குஜராத்தை சேர்ந்த சலீம்பாய் ஹமித்பாய் மேனன் என்பவர் மீது மோசடி போலி ஆவணம் சமர்ப்பித்தல் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் சலீம்பாய் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வருவதற்கு முன் சலீம்பாய் கைதானார்.
கைதுக்கு பின் அவரது மனு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரை கைது செய்ய இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் அதை வாய்மொழி உத்தரவாக பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ‘வாய்மொழியாக உத்தரவிடுவதை நீதிபதிகள் தவிர்க்க வேண்டும். தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளின் அடிப்படையிலேயே நீதிபதிகளின் உரை அமைய வேண்டும்’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
(நன்றி Dinamalar)