கர்நாடகத்தில் 3 மாநகராட்சிகளுக்கு இன்று தேர்தல் வாக்குப்பதிவு

மைசூரு,

கர்நாடகத்தில் காலியாக இருந்த உப்பள்ளி-தார்வார், கலபுரகி, பெலகாவி ஆகிய 3 மாநகராட்சிகளின் உறுப்பினர்கள் பதவிக்காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து செப்டம்பர் 3-ந் தேதி (அதாவது இன்று) தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வந்தது.

இந்த தேர்தலுக்கான பகிரங்க பிரசாரம் நேற்று முன்தினம் ஓய்ந்திருந்தது. உப்பள்ளி-தார்வார் மாநகராட்சியில் உள்ள 82 வார்டுகளுக்கும், கலபுரகி மாநகராட்சியில் 55 வார்டுகளுக்கும், அதுபோல், பெலகாவி மாநகராட்சியில் இருக்கும் 58 வார்டுகளுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடக்கிறது. ஒட்டு மொத்தமாக 3 மாநகராட்சிகளிலும் 195 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.

பெலகாவி மாநகராட்சியில் 385 வேட்பாளர்களும், உப்பள்ளி-தார்வார் மாநகராட்சியில் 420 வேட்பாளர்களும், கலபுரகி மாநகராட்சியில் 300 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். ஒட்டு மொத்தமாக 3 மாநகராட்சிகளுக்கும் நடைபெறும் தேர்தலில் 1,105 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த 3 மாநகராட்சிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதேபோல் மைசூரு மாநகராட்சி முன்னாள் மேயர் ருக்மணி மாதேகவுடா கவுன்சிலராக இருந்த 36-வது வார்டு இடைதேர்தல் ஓட்டுப்பதிவும் இன்று நடக்கிறது. பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்), சுயேச்சை என 5 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 36-வார்டில் மொத்தம் 10,656 வாக்காளர்கள் உள்ளனர். 11 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஓட்டுப்பதிவுக்கான தளவாட பொருட்களை நேற்று தேர்தல் ஊழியர்கள் கொண்டு வந்தனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட்டுபோட வாக்காளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக வாக்குசாவடியில் சானிடைசர் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன. தேர்தலையொட்டி 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

 (நன்றி  Dailythanthi)