பள்ளிகளில் கல்வி கட்டண நிர்ணயம்: கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழ்நாட்டில் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் உற்சாகமாக சென்று வருகின்றனர். மாணவர்களைவிட பெற்றோர்களே எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற ஆவலில் இருந்தனர்.

அந்த வகையில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆரம்ப, நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் விரைவில் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் முழு கட்டணத்தையும் வசூலிக்க கூடாது 75 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் முழு தொகையையும் வசூலிக்க பள்ளி நிர்வாகம் முயல்வதாக கூறப்படுகிறது.

அனைவருக்கும் கட்டாய மற்றும் இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தனியார் பள்ளிக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிக்கும். தமிழ்நாட்டில் சுயநிதியில் செயல்படும் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ, மற்றும் ஐ.சி.எஸ்.இ பள்ளிகளின் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான சுயநிதி பள்ளிகள் கல்வி கட்டண கமிட்டி செயல்படுகிறது.

கல்வி கட்டணம் குறித்து விவரங்கள் அனுப்புவதற்கான கால அவகாசம் முடிவடைந்துள்ளது. கொரோனா காலம் என்பதால் குறிப்பிட்ட நேரத்தில் அனுப்ப முடியாமல் போனது என்று தனியார் பள்ளிகள் சார்பில் கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து வரும் 30ம் தேதி வரை கூடுதலாக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக கல்வி கட்டண கமிட்டி தனி அலுவலர் கூடுதல் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

(நன்றி Tamil Samayam)