பெரியார் சிலைக்கு ரூ. 100 கோடி செலவிடுகிறதா தமிழக அரசு? உண்மை என்ன?

திருச்சியில் பெரியாருக்கு 100 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு அரசு சிலை வைப்பது ஏன் என சில அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக வலைதளங்களில் சிலரும் விமர்சனங்களையும் கேள்விகளையும் முன்வைக்கின்றனர். உண்மையில், பெரியாருக்கு சிலை வைப்பது யார்?

கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதியன்று திராவிடர் கழகம் சார்பில் விடுக்கப்பட்ட அறிக்கையில், “பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பில் திருச்சி சிறுகனூர் ‘பெரியார் உலகம்’ என்ற தந்தை பெரியாரின் 95 அடி உயர சிலை அமைக்கப்படுவதற்குத் தேவைப்படும் தமிழ்நாடு அரசின் ஆணையை அளித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை முதலமைச்சர் அவர்களின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நன்றி தெரிவித்தார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, தமிழ்நாடு அரசின் சார்பிலேயே பெரியாருக்கு 95 அடி உயர சிலை அமைக்கப்பட போவதாக பலரும் புரிந்துகொண்டனர். சிலர் இதனை வாழ்த்தினர். சிலர் இதனை விமர்சித்தனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாருக்கு சிலை அமைப்பதைக் கடுமையாக விமர்சித்தார்.

“இங்கே பேருந்து கட்டணமில்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கிறீர்கள். அதற்கு என்ன காரணம்? அவர்கள் வறுமையில் இருக்கிறார்கள் என அர்த்தம். குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் தருவதாக அறிவிக்கிறீர்கள். காரணம் என்ன? அவருக்கு கைச்செலவுக்கு காசில்லை. அங்கும் வறுமை. அரிசி இலவசம் என்கிறீர்கள். காரணம், அதை விலை கொடுத்து வாங்கவும் வசதியில்லை.

இந்த நிலையை எல்லாம் மாற்றுவதற்கு சீர்திருத்தவாதி, முற்போக்குவாதி, அதற்கான தலைவர் என்று பேசப்பட்ட ஐயா பெரியாருக்கு ரூ. 100 கோடியில் சிலை வைப்பதாக பேசுவது எப்படி இருக்கிறது?

குஜராத்தில் சர்தார் வல்லபபாய் படேலுக்கு ரூ. 3,000 கோடியில் மோதி சிலை வைத்ததற்கும், நீங்கள் ரூ. 100 கோடியில் பெரியாருக்கு சிலை வைப்பதாக அறிவிப்பதால் உங்களிருவருக்கும் என்ன பெரிய மாறுபாடு இருக்கிறது? தமிழ்நாட்டில் பெரியாருக்கு போதும் என்ற அளவுக்கு சிலைகள் உள்ளன. இப்படி செய்வதற்குப் பெயர்தான் பணக்கொழுப்பு, அதிகாரத் திமிரு” என இதனைக் கடுமையாக விமர்சித்தார்.

சமூக வலைதளங்களிலும் இதனை அரசோ, தி.மு.கவோ வைப்பதாகச் சொல்லி, பலரும் எதிர்த்தனர்.

“பாஜக பட்டேல் சிலைக்கு கொதித்தெழுந்த திமுக, பெரியார் சிலை வைக்கிறதே?” என ஒருவர் கேள்வி எழுப்பினார்.

“மக்கள் நலத்திட்டங்கள் எல்லாம் நிதி இல்லை என்று ஒப்பாரி , சிலை அமைக்க , கல்லறை அமைக்க, நினைவகம் அமைக்க நூறு நூறு கோடியாக திட்டத்திற்கு தொகை ஒதுக்கும் அவலம்” என சிலர் கருத்துத் தெரிவித்தனர்.

ஆனால், பெரியாருக்கு 95 அடி உயரத்தில் சிலை வைப்பது தமிழ்நாடு அரசோ, தி.மு.கவோ இல்லை.

பெரியார் சுயமரியாதைப் பிரசார அறக்கட்டளையே இந்த சிலையை வைக்க திட்டமிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டத்தில் சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள சிறுகனூரில் இந்த சிலையை அமைக்கத் திட்டமிட்டிருக்கிறது பெரியார் சுயமரியாதைப் பிரசார அறக்கட்டளை.

இந்த அறக்கட்டளையைச் சேர்ந்தவரும் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவருமான கலி. பூங்குன்றன் இது தொடர்பாக பிபிசியிடம் பேசினார்.

“பெரியார் சிலையை அரசு அமைப்பதாகச் சொல்வது தவறு. இதற்கான முழுச் செலவையும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார அறக்கட்டளையே செய்யவிருக்கிறது,” என்கிறார் அவர்.

பெரியாரின் 95 அடி உயர சிலை என்பது, “பெரியார் உலகம்” என்ற மிகப் பெரிய வளாகத்தின் ஒரு பகுதி என்கிறார் கலி பூங்குன்றன். “சிறுகனூரில் பெரியார் உலகம் என்ற மிகப் பெரிய வளாகம் ஒன்றை 27 ஏக்கர் நிலத்தில் அமைக்கவிருக்கிறோம். இங்கு அமையவிருக்கும் பெரியார் சிலை, 95 அடி உயரம் கொண்டது. அதன் பீடத்தின் உயரம் 40 அடி. ஆகவே மொத்தமாக 135 அடி உயரம் இருக்கும். சிலைக்குள் ஒரு லிஃப்டும் இருக்கும். இது தவிர, அந்த வளாகத்தில் மிகப் பெரிய நூலகம், கோளரங்கம், ஒலி – ஒளி காட்சி, குழந்தைகள் பூங்கா, உணவகம், வாகன நிறுத்தம் போன்ற அமைப்புகளும் இருக்கும். இதன் ஒட்டுமொத்தச் செலவு சுமார் 100 கோடி ரூபாயாக இருக்கலாம்.” என்கிறார் அவர்.

இந்த வளாகம் அமைப்பதற்கான மத்திய அரசின் அனுமதிகள் அனைத்தும் பெறப்பட்ட நிலையில், மாநில அரசின் அனுமதிக்காக விண்ணப்பித்தபோது, அதற்கு கடந்த மூன்று ஆண்டுகளாக அனுமதி அளிக்கப்படவில்லை. “இப்போது மு.க. ஸ்டாலின் முதல்வரான பிறகு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இப்போது பெரியார் பிறந்து 143 ஆண்டுகளாகின்றன. 150 ஆண்டுகளுக்குள் இந்தப் பணிகளை முடிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். முதல்கட்டமாக சிலையின் பணிகள் முடிவடையும். பிறகு படிப்படியாக அடுத்தடுத்த பணிகள் நடக்கும்” என்கிறார் பூங்குன்றன்.

 

(நன்றி BBC TAMIL)