இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு சமநிலை உறுதியாகுமா? – நீதித்துறை தலையீடும் வழக்குகளும்

இந்திய ராணுவத்தில் நிரந்தர கட்டளை பணியில் சேர ஏதுவாக பெண்கள் தேசிய ராணுவ கல்லூரி மூலம் நிரந்தர கமிஷனில் சேர அனுமதிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கில் இன்று ஆஜரான இந்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டீ, “ஒரு நற்செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன். இந்திய முப்படை தளபதிகளும் அரசாங்கமும் நிரந்தர கட்டளை பணியில் பெண்களை நியமிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். தேசிய பாதுகாப்பு கல்லூரி மற்றும் கடற்படை பயிற்சிக் கல்லூரியில் சேரும் அவர்களுக்கு பின்னர் நிரந்தர கட்டளைப் பணி வழங்கப்படுவதற்கான முடிவு நேற்று மாலை எடுக்கப்பட்டது,” என்று கூறினார்.

உச்ச நீதிமன்றத்தில் அரசின் நிலைப்பாடு தெரிவிக்கப்பட்ட அதே சமயம், தேசிய ராணுவ கல்லூரிகளில் பெண்கள் சேருவதற்கும், கூட்டு பாதுகாப்புப்படை பயிற்சி நிறுவனத்தில் சேருவதற்கும் தேவையான வழிகாட்டுதல்களை வகுக்க அவகாசம் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல், “இந்த விவகாரத்தில் நீண்ட காலமாகவே நாங்கள் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறோம். தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பெண்களை சேர்க்க முடிவெடுத்திருப்பதை வரவேற்கிறோம். ஆனால், வழிகாட்டுதல்களை வகுக்க எவ்வளவு கால அவகாசம் தேவை என்பதையும் எங்களிடம் தெரிவியுங்கள்,” என்று கூறினார்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்திய ராணுவத்தில் குறுகிய கால பணியில் சேரும் பெண்களை நிரந்தர கட்டளை பணியில் எவ்வித பாலின பாகுபாடும் இல்லாமல் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு ஒன்றை விசாரித்தபோது மத்திய அரசுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இதே விவகாரம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தபோது, பெண்கள் நிரந்தர கட்டளை பணியில் சேராத வகையில் பிற்போக்கான மனப்போக்குடன் அரசு செயல்படுவதாக உச்ச நீதிமன்றம் கண்டித்தது. அது பாலின பிரிவினையை தூண்டும் கொள்கை என்றும் நீதிபதிகள் விமர்சித்தனர்.

இந்திய ஆயுத படைகள் மிகவும் மிக்கியமானவை. அதில் பாலின சமத்துவம் ஏற்பட மேலதிக நடவடிக்கை தேவை. இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவிடும் வரை காத்திருக்காமல் அரசே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

தற்போது பெண் வீரர்களுக்கு என்ன பணி தரப்படுகிறது?

10 லட்சத்து 10 ஆயிரம் பேர் கொண்ட இந்திய ராணுவத்தில் பெண் வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை ஒரு சதவீதத்துக்கும் குறைவாக 0.56 சதவீதமாக உள்ளது. இதுவே இந்திய விமானப்படையில் 1.08 சதவீதம், கடற்படையில் 6.5 சதவீதம் ஆக உள்ளது.

தற்போது இந்திய ராணுவத்தில் விதிவிலக்காக, கல்விப்பிரிவு, சட்டப்பிரிவு ஆகியவற்றில் சேரும் பெண்கள் மட்டுமே அதிகாரிகளாகவும் நிரந்தர பணியிலும் பதவி வகிக்கிறார்கள். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மத்திய அரசு வழிகாட்டுதல்களை வகுத்த பிறகு அவர்களால் நிரந்தர பணியில் சேரும் வாய்ப்பு உருவாகும்.

இதன்படி, இந்திய ராணுவத்தில் பெண்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், பொறியாளர்கள், சிக்னல் பிரிவு அதிகாரிகள், நிர்வாகப் பணி, வழக்கறிஞர் பணி போன்றவற்றில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர். போர்க்களத்தில் அவர்கள் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை தரலாம் அல்லது கண்ணி வெடிகளை அகற்றலாம் அல்லது தொலைத்தொடர்பு வசதிகளை சரி செய்யலாம். ஆனால், போர்க்களத்தில் எதிரியுடன் சண்டை போட முடியாது. பிரதேச ராணுவ படையணிகள் மற்றும் தளவாட பணியில் அவர்கள் ஈடுபட முடியாது.

2019இல் பெண்களுக்கு நிரந்தர பணி வழங்க இந்திய அரசு ஒப்புக் கொண்டது. ஆனால், அது ராணுவ பணியில் 14 வருடங்களுக்கும் குறைவாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் உடல் கூறு காரணங்களுக்காக வயதான பெண் அதிகாரிகளுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படாது என்றும் இந்திய ராணுவம் கூறியிருந்தது.

இருப்பினும் கட்டளை பணியில் பெண்கள் ஈடுபட அனுமதிக்கும் நடவடிக்கையின் பெரிய படியாக இதை பெண் வீரர்கள் கருதினர்.

“நாங்கள் 2008ல் இதற்கான போராட்டத்தைத் தொடங்கியபோது, இந்த நாள் உண்மையில் வரும் என்று நான் நினைக்கவில்லை. பெண்களுக்கு நிரந்தர கமிஷன் (கட்டளைப் பணி) பெறுவது எளிதல்ல, ஆனால், முயற்சி பலன் தரும் என்பது நிரூபணமாகியுள்ளது. இது பெண்களுக்கு அதிக உற்சாகத்தை அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும்,” என்று இந்த விவகாரத்தில் வழக்கு தொடுத்தவர்கள் தெரிவித்தனர்.

ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கர்னல் டாக்டர் அனுபமா முன்ஷி, மேலும் பதினோரு பெண் அதிகாரிகளுடன் சேர்ந்து, பெண்களின் நிரந்தர கமிஷன் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு மீதான விசாரணையில், இந்திய ராணுவத்தில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர கமிஷன் வழங்க கடந்த ஆண்டு பிப்ரவரி 17 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இப்போது இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு நிரந்தர கமிஷன் வழங்க பாதுகாப்பு அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக முறையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிரந்தர கமிஷன் என்பது என்ன?

குறுகிய கால சேவை கமிஷனின் கீழ் பெண்கள் 10 அல்லது 14 ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற முடியும். இதற்குப் பிறகு, அவர் ஓய்வு பெறுகிறார்கள். ஆனால் இப்போது அவர்களுக்கு நிரந்தர கமிஷனுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் அவர்கள் ராணுவத்தில் தமது சேவைகளை மேலும் தொடரவும், தரவரிசைப்படி ஓய்வு பெறவும் முடியும். அவர்களுக்கு ஓய்வூதியமும் மற்ற அனைத்துப் பயன்களும் கிடைக்கும்.1992 முதல் பெண்கள் குழு குறுகியகால சேவைக்கு நியமிக்கப்பட்டது. அப்போது அது ஐந்து ஆண்டுகளாக இருந்தது. பின்னர் இந்தச் சேவையின் காலம் 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது. 2006 இல், இது 14 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது.

ஆண் அதிகாரிகள் 10 ஆண்டு குறுகிய சேவை கட்டளைப் பணியை நிறைவு செய்த தகுதி அடிப்படையில் நிரந்தர கமிஷனுக்கு விண்ணப்பிக்கலாம், ஆனால் பெண்கள் அவ்வாறு செய்ய முடியாத நிலை இருந்தது. தற்போது, குறுகியகாலச் சேவை மூலம் பெண்கள் ராணுவத்தில் சேர்க்கப்படுகிறார்கள், ஆனால், ஆண்களை நிரந்தர ஆணையம் மூலம் நேரடியாக நியமனம் செய்யலாம்.

10 பிரிவுகளிலும் நிரந்தர கமிஷன்

இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் அமன் ஆனந்த் கூறுகையில், அரசாங்கத்தின் இந்த முடிவு, பெண் அதிகாரிகளுக்கு ராணுவத்தில் அதிக பங்கு வகிக்க அதிகாரம் அளிப்பதற்கு வழி வகுக்கும் என்றார்.கர்னல் அமன் ஆனந்த் செய்தி நிறுவனமான பி.டி.ஐ-யிடம், “இந்திய ராணுவத்தின் மொத்த 10 பிரிவுகளிலும் குறுகிய சேவை கமிஷனில் உள்ள பெண் அதிகாரிகளை நிரந்தரமாக நியமிக்க இந்த உத்தரவு வழி வகுக்கிறது.”

ராணுவ விமானப் பாதுகாப்பு (ஏஏடி), சிக்னல்கள், பொறியாளர்கள், ராணுவ விமானப் போக்குவரத்து, மின்னணுவியல் மற்றும் இயந்திர பொறியாளர்கள் (ஈஎம்இ), ராணுவ சேவைப் படை (ஏஎஸ்சி), ராணுவ கட்டளைப் படை (ஏஓசி) மற்றும் புலனாய்வுப் பிரிவு என 10 பிரிவுகளிலும் பெண்களுக்கு நிரந்தர கமிஷன் அறிமுகப்படுத்தப்படுவதாக கர்னல் ஆனந்த் தெரிவித்தார். தற்போது, நீதிபதி மற்றும் அட்வகேட் ஜெனரல்( ஜே ஏ ஜி) மற்றும் ராணுவ கல்விப் படை (ஏ.இ.சி) ஆகியவற்றில் பெண்களுக்கு நிரந்தர கட்டளைப் பணி நடைமுறையில் உள்ளது.

ராணுவ செய்தித் தொடர்பாளர், “அதே போல் தகுதியுடைய அனைத்து எஸ்.எஸ்.சி பெண் அதிகாரிகளும் தங்கள் விருப்பத்தைத் தெரிவு செய்து தேவையான ஆவணங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பித்தவுடன், அவர்களின் தேர்வு குறித்துத் தேர்வு வாரியம் தீர்மானிக்கும்” என்றும் கூறினார்.

இதன் மூலம், இந்திய ராணுவத்தில் பணியாற்ற விரும்பும் பெண்களுக்கு மட்டுமல்ல, ராணுவத்தில் பணியிலிருக்கும் பெண்களுக்கும் ஒரு புதிய பாதை திறக்கப்பட்டுள்ளது, இதில் சமத்துவமும் மரியாதையும் உள்ளது.ஒரு முடிவால் பல மாற்றங்கள்.

நிரந்தர கமிஷன் தொடர்பான முதல் மனு 2003 இல் தாக்கல் செய்யப்பட்டது. இதன் பின்னர், 11 பெண் அதிகாரிகள் இது தொடர்பாக 2008 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். இந்த மனுவில், பெண் அதிகாரிகளுக்கு ஆதரவாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் அரசாங்கம் இந்த முடிவை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. பிப்ரவரி 2020 இல், உச்சநீதிமன்றமும் பெண் அதிகாரிகளுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது.

மனுதாரர்களில் ஒருவரான, முன்னாள் ராணுவ அதிகாரி அங்கிதா ஸ்ரீவாஸ்தவா, இது ஒரு பெரிய முடிவு என்றும், இது வரும் காலங்களில் பல சாதகமான மாற்றங்களைக் கொண்டு வரும் என்றும் கூறுகிறார். கட்டளைப் படையில் 14 ஆண்டுகள் சேவை செய்த பின்னர் அங்கிதா ஸ்ரீவாஸ்தவா எஸ்.எஸ்.சி.யில் இருந்து ஓய்வு பெற்றார். இது பெண்களுக்கு எவ்வாறு பயனளிக்கும் என்று அவர் கூறினார்.

இதனால் ஏற்படும் முதல் விளைவு என்னவென்றால், பெண் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு கிடைக்கும் என்று அவர் கூறுகிறார். குறுகிய சேவை கமிஷனில் லெப்டினன்ட் கர்னலுக்கு மேல் ஒரு பெண் அதிகாரியால் உயர முடியாத நிலை இருந்தது. ஆனால் இப்போது பெண்கள் மேம்பட்ட கற்றல் துறை சார்ந்த படிப்புகளுக்கும் அனுப்பப்படுவார்கள். சிறப்பான செயல்பாடு பதவி உயர்வுக்கு வழி வகுக்கும். நிரந்தர கமிஷனுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் பெண்கள், கர்னல்கள், பிரிகேடியர்கள் மற்றும் ஜெனரல்களாக உயர்வு பெற முடியும்.

இரண்டாவது நன்மை என்னவென்றால், அரசாங்க உத்தரவு வரும்போது, இப்போது பெண்களைச் சேர்ப்பதற்காக வரும் விளம்பரங்களில், தகுதியின் அடிப்படையில் நிரந்தர கமிஷன் வழங்கப்படும் என்று தெளிவாகக் குறிப்பிடப்படும். முந்தைய விளம்பரங்களில் 14 வருட குறுகிய சேவை மட்டுமே குறிப்பிடப்பட்டன.

இந்த 10 பிரிவுகளிலும் நிரந்தர கமிஷன் மூலம் ராணுவத்தில் மிக உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதை இப்போது புதிதாக வரும் பெண்கள் அறிந்து கொள்வார்கள். இதற்கேற்றாற்போல், அவர்கள் தங்கள் கல்வித் தகுதிகளையும் பிற தகுதிகளையும் வளர்த்துக்கொள்ள முடியும்.

மூன்றாவதாக, எஸ்.எஸ்.சி.யின் 14 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு, பெண்கள் ஓய்வுபெறும் போது 37-38 வயதை எட்டுகிறார்கள். 38 வயதில் ராணுவத்திலிருந்து வெளியே வரும்போது, பிற துறைகளில் வேலை வாய்ப்புகள் தேட வேண்டும். அவர்களுக்கு ஓய்வூதியமும் கிடைப்பதில்லை. ஆனால் இப்போது பெண்களுக்கு 54 வயது வரை பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும்.

அனுபமா முன்ஷியும் இதற்கு உடன்படுகிறார். “அந்த வயதில், ராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் வாழ்க்கையில் ஒரு தேக்க நிலை உருவாகிறது. பல பெண்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்லவோ அல்லது ஆசிரியப் பணி செய்யவோ வாய்ப்புள்ளது. ஆசிரியப் பணிக்கும் பி.எட் அல்லது பி.எச்.டி. படித்திருக்க வேண்டும். கல்லூரி மாணவர்களைப் போல் மீண்டும் கல்வி பயில வேண்டும். தனியார் நிறுவனங்களில் கூட, ஆரம்பத்திலிருந்தே தொடங்க வேண்டும்.” என்று அவர் கூறுகிறார்.

அனுபமா இப்போது பிஎச்டி முடித்து ஆசிரியர் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிரந்தர கமிஷனுக்கு எதிர்ப்பு ஏன் இருந்தது?

பெண்கள் நீண்ட காலமாக இந்திய ராணுவத்தில் நிரந்தர கமிஷன் கோரி வந்தனர். இருப்பினும், இது ராணுவம் மற்றும் அரசாங்க மட்டத்தில் எதிர்க்கப்பட்டு வந்தது. திருமணம், குழந்தைகள் போன்ற காரணங்களும் ஆண்களின் எதிர்ப்பும் இதற்குக் காரணங்களாகக் கூறப்பட்டது.

அங்கிதா ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், “பெண்கள் சோதனை முறையில் தான் குறுகிய கால சேவைக்கு நியமிக்கப்பட்டு வந்தனர். ஆனால், பெண் அதிகாரிகள் தங்கள் திறமையை நிரூபித்தனர். பெண்கள் உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ பலவீனமானவர்கள் இல்லை என்றும் எங்களால் இந்திய ராணுவத்திற்குப் பலமூட்ட முடியும் என்றும் நாங்கள் பாராட்டப்பட்டோம். ஆனால், சிறிது சிறிதாக, பல ஆண் அதிகாரிகளின் மனதில் பாதுகாப்பின்மை உணர்வு வந்தது. தாங்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையில், பெண்கள் அதிகாரம் பெறுவதாக அவர்கள் உணரத் தொடங்கினர். ”

“அதன் பிறகு, பெண்களின் குடும்ப நிர்ப்பந்தங்கள் ஒரு பிரச்சினையாக உருமாற்றப்பட்டன. அவர்கள் களத்துக்குச் செல்ல முடியாது, அவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள், குழந்தைகளைப் பெறுவார்கள், அதற்காக விடுமுறை எடுப்பார்கள். இது வேலையை பாதிக்கும், எனவே அவர்களுக்கு நிரந்தர கமிஷன் வழங்கப்படக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது.”

அனுபமா முன்ஷி மேலும் கூறுகிறார், “எங்கள் ஜவான்கள் கிராமப்புறங்களிலிருந்து வருவதால், அவர்கள் ஒரு பெண் அதிகாரியின் கீழ் பணிபுரிவதும், அவரிடமிருந்து உத்தரவுகளைப் பெறுவதும் சங்கடமாக நினைக்கிறார்கள் என்பதும் ஒரு காரணம். ஆனால், அது ஆரம்ப காலத்தில் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இப்போது அவ்வாறு இல்லை. ஆண் சிப்பாய்கள் தங்களைப் போலவே ராணுவத்தில் பெண்களும் கடுமையாக உழைப்பதைக் கண்டதும், யாரும் இங்கு குறுக்குவழிகளில் வரவில்லை என்று உணர்ந்து அவர்களை மதிக்கத் தொடங்கினர்”.

அவர் கூறுகிறார், “நானே ஆண் வீரர்களுடன் பலமுறை பேசியிருக்கிறேன். மேடம் ஆணையை நாங்கள் கடைபிடிக்க வேண்டும், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அது ஒரு பொருட்டல்ல என்று அவர்கள் கூறினார்கள். எனக்குக் கீழ் பணிபுரியும் பல இளைஞர்கள் கூட வந்து தங்கள் பிரச்னைகளை என்னிடம் சொல்வார்கள், ஆனால் ஆண் அதிகாரிகளிடம் சொல்லவில்லை. ஒரு பெண்ணாக இருந்தால், மிகவும் உணர்ச்சியுடன் கேட்பார் என்று அவர்கள் நம்பினார்கள். ”

ஓய்வுபெற்ற இரண்டு அதிகாரிகளும், பெண்கள், தங்களுக்கு முன் இருந்த வருங்காலப் பாதை மூடப்பட்டிருந்தாலும், ஐந்தாண்டு குறுகிய சேவையின் போது கடினமாகவும் விடாமுயற்சியுடனும் பணியாற்றியதாகக் கூறுகிறார்கள். இனி வரும் பெண்கள் பல மடங்கு கடினமாக உழைப்பார்கள், ஏனென்றால் அவர்கள் ராணுவத்தில் எவ்வளவு உயரத்திற்கு செல்ல முடியும் என்பதை அவர்கள் அறிவார்கள். இது ஒரு பெரிய உத்வேகம் அளிக்கும்.

வரும் காலங்களில் சில பெண்கள் பிரிகேடியர்களாவதை நாம் பார்க்கலாம். ஒரே ஒருவர் தான் அப்படி உயர்வடைகிறார் என்றே வைத்துக்கொண்டாலும், அந்த ஒருவருக்குச் சம வாய்ப்பு கிடைக்கும்.

(நன்றி BBC TAMIL)