விமானப்படைக்கு 350 போர் விமானங்கள் வாங்க திட்டம்: தளபதி பதாரியா

அண்டை நாட்டு அச்சுறுத்தல்

சீனா, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக விமானப்படையை நவீனப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதன் ஒரு பகுதியாக பிரான்சில் இருந்து ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த விமானங்கள் படையிலும் இணைத்து வலுவூட்டப்பட்டு வருகின்றன.

தற்சார்பு இந்தியா

இது ஒருபுறம் இருக்க பாதுகாப்பு துறையிலும் தற்சார்பு நிலையை பின்பற்ற மத்திய அரசு விரும்புகிறது. குறிப்பாக முப்படைகளுக்கும் தேவையான தளவாடங்கள் மற்றும் கருவிகளை இந்தியாவிலேயே தயாரிக்கும் பணிகளை முடுக்கி விட்டு உள்ளது.மத்திய அரசின் இந்த தற்சார்பு இந்தியா திட்டத்தின் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா, பாதுகாப்புத்துறைக்கான உற்பத்தி தளமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமானப்படை தளபதி

இதை கருத்தில் கொண்டு, இந்திய விமானப்படைக்கு உள்நாட்டில் இருந்தே போர் விமானங்கள் வாங்குவதற்கு திட்டமிட்டு இருப்பதாக விமானப்படை தளபதி பதாரியா கூறியுள்ளார்.

இந்திய விமானப்படை சார்ந்த மாநாடு ஒன்றில் பேசும்போது அவர் கூறியதாவது:-

கடினமான திட்டம்

வடக்கு அண்டை நாடுகளைப் பார்க்கும்போது, பாதுகாப்பு காரணங்களுக்காக பாதுகாப்புத்துறை தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டிய முக்கிய தொழில்நுட்பங்கள் நம்மிடம் இருக்க வேண்டும். பாதுகாப்புத் துறையில் இந்தியா தற்சார்பை எட்டுவதற்கு பல்வேறு சவால்களை சமாளிக்க வேண்டியது மிகவும் முக்கியம். அடுத்த 20 ஆண்டுகளில் உள்நாட்டில் இருந்து 350 விமானங்களை வாங்க விமானப்படை திட்டமிட்டு உள்ளது. அதேநேரம் இது ஒரு கடினமான திட்டமும் ஆகும்.

தேஜாஸ் போர் விமானம்

சீனாவின் சவால்களைக் கருத்தில் கொண்டு விமனப்படையின் ஒட்டுமொத்த வலிமையை அதிகரிக்கவும், திறன்களை வளர்க்கவும் வேண்டியது அவசியம் ஆகும். தேஜாஸ் இலகுரக போர் விமானத் திட்டம் இந்தியாவில் விமானப்படை துறையில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இது மேலும் வளரும் ஆற்றலையும் கொண்டுள்ளது.

இவ்வாறு பதாரியா கூறினார்.

(நன்றி Dailythanthi)