பிரதமர் மோடி தலைமையில் இன்று ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு

புதுடெல்லி,

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் உச்சி மாநாடு செப்டம்பர் 9-ந் தேதி (இன்று) நடக்கிறது. 2012 மற்றும் 2016-ம் ஆண்டுக்கு பிறகு 3-வது முறையாக இந்த ஆண்டின் உச்சி மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது.

‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குவது இது 2-வது முறையாகும். முன்னதாக 2016-ம் ஆண்டு கோவாவில் நடந்த மாநாட்டுக்கு அவர் தலைமை தாங்கினார். இதனை தொடர்ந்து 13-வது ‘பிரிக்ஸ்’ உச்சிமாநாடு பிரதமர் மோடி தலைமையில் காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜின்பிங், பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனாரோ, தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு, ‘தொடர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் ஒருமித்த கருத்துக்கான பிரிக்ஸ் உள் ஒத்துழைப்பு’ என்ற கருப்பொருளை மையமாக கொண்டு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், புதிய வளர்ச்சி வங்கி தலைவர் மார்கோஸ் டிரோஜோ, பிரிக்ஸ் வணிக கவுன்சிலின் தற்காலிக தலைவர் ஓங்கர் கன்வார், பிரிக்ஸ் மகளிர் வணிக கூட்டணியின் சார்பு தலைவர் டாக்டர் சங்கீதா ரெட்டி ஆகியோர் அறிக்கை சமர்ப்பிக்கின்றனர்.

பன்முக அமைப்பு சீர்திருத்தம், பயங்கரவாத எதிர்ப்பு, மக்கள் பரிமாற்றங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட 4 முன்னுரிமை துறைகளை இந்தியா தனது தலைமைத்துவத்தில் கோடிட்டுக்காட்டி இருந்தது. இந்த துறை சார்ந்த விவாதங்கள் இந்த உச்சி மாநாட்டில் நடைபெறுகிறது. அதைப்போல கொரோனாவின் தாக்கம் மற்றும் தற்போதைய உலகளாவிய, பிராந்திய பிரச்சினைகள் குறித்தும் தலைவர்கள் தங்கள் கருத்துகளை பரிமாறிக்கொள்கிறார்கள்.

(நன்றி Dailythanthi)