மத்திய மந்திரிகளுடன் போர் விமானம், நெடுஞ்சாலையில் தரை இறங்கியது

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை 925, ககாரியா, பாவோரி கலன், செர்வா, பகாசர் நகரங்களை ஒருங்கிணைக்கிறது.

இந்த நெடுஞ்சாலையில், பார்மர் அருகே போர் விமானங்களை அவசரமாக தரை இறக்க வசதியாக சட்டா-காந்தாவ் பகுதியில் 3 கி.மீ. தொலைவிலான சிறப்பு ஓடுபாதையை இந்திய விமானப்படைக்காக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உருவாக்கி உள்ளது.

தரை இறங்கிய போர் விமானம்

இந்த நெடுஞ்சாலை ஓடுபாதையை, மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி ஆகியோர் ‘ஹெர்குலிஸ் சி-130 ஜே’ போர் விமானத்தில் வந்திறங்கி, நேற்று முறைப்படி தொடங்கி வைத்தனர்.

இந்திய போர் விமானம் ஒன்று, இப்படி நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஓடுபாதையில் வந்து தரை இறங்கியது இதுவே முதல் முறை.

இதே விமானத்தில் மத்திய மந்திரிகளுடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தும் வந்தார்.

இந்த விமானம் தரை இறங்கியதைத் தொடர்ந்து, சுகோய்-30 எம்கேஐ போர் விமானம் தரை இறங்கியது. அதில் இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.பதாரியா வந்தார்.

இதேபோன்று ராணுவ போக்குவரத்து விமானமும், ‘எம்.ஐ.-17 வி5’ ரக ஹெலிகாப்டரும் தரை இறங்கின.

ராஜ்நாத் சிங் பெருமிதம்

இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பெருமிதமாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பார்மர் போன்று அவசர தரையிறங்கும் ஓடுபாதைகள், நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

மத்திய சாலைகள் அமைச்சகத்தின் உதவியுடன் பல்வேறு இடங்களில் ஹெலிபேடுகளும் உருவாக்கப்படுகின்றன. நமது பாதுகாப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு இது ஒரு முக்கிய நடவடிக்கை ஆகும்.

கைகோர்த்துச்செல்ல முடியும்

பாதுகாப்புக்காக அதிகளவில் செலவிட்டால், நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்ற எண்ணம் இருந்தது உண்டு. ஆனால் இன்றைக்கு நாம் தேசிய நெடுஞ்சாலையில் விமானம் அவசர தரை இறங்கும் ஓடுபாதையைப் பார்க்கிறோம். பாதுகாப்பும், வளர்ச்சியும் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்துச்செல்ல முடியும் என்று நான் சொல்வேன்.

சர்வதேச எல்லைக்கு வெகு அருகிலேயே இப்படி போர் விமானங்கள் அவசரமாக தரை இறங்கும் ஓடுபாதையை உருவாக்கி இருப்பதின்மூலம், நாம் நாட்டின் ஒற்றுமைக்காக, பன்முகத்தன்மைக்காக, இறையாண்மைக்காக என்ன விலை கொடுக்கவும் ஒன்றுபட்டு நிற்போம் என்ற செய்தியை விடுத்து இருக்கிறோம்.

போர் விமானங்கள் அவசரமாக தரை இறங்க நெடுஞ்சாலைகளில் உருவாக்கப்படும் இத்தகைய பிரிவுகள், போரின்போது மட்டுமல்ல, இயற்கை பேரிடர்களின் போதும் மிகவும் உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாதுகாப்பில் முக்கிய பங்கு

மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி பேசுகையில், தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஓடுபாதை, நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் என குறிப்பிட்டார்.

மேலும், இதே போன்று மேலும் 19 ஓடுபாதைகளை நெடுஞ்சாலைகளில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

(நன்றி Dailythanthi)