காங்கிரஸை விட்டு வெளியேற பாஜக பண சலுகை – முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேச்சு

பா.ஜ.கவில் சேருவதற்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார்கள் எனக்கு பணம் வேண்டாம் மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு மட்டுமே வேண்டும் எனக் கேட்டதாக சர்ச்சையை கிளப்பியுள்ளார் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஸ்ரீமந்த் பாட்டீல்.

காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜகவினர் விலைக்கு வாங்கிவிட்டதாக காங்கிரஸ் கட்சிக்காரர்கள் குற்றஞ்சாட்டி வந்த நிலையில் ஸ்ரீமந்த் பாட்டீல் பேச்சு தற்போது கர்நாடக அரசியலில் புகைச்சலை கிளப்பியுள்ளது. இவர் 2019-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவியவர். இதன்காரணமாக அவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. சமீபத்தில் எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து கர்நாடக மாநில புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றுக்கொண்டார். இவரது அமைச்சரவையில் ஸ்ரீமந்த் பாட்டீல் -க்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. இந்நிலையில் தான் தற்போது இவர் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

2019-ம் ஆண்டு காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி கர்நாடகத்தில் கவிழ்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இந்த ஸ்ரீமந்த் பாட்டீல். இவர் 2018 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காக்கவாடா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்றார். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்கும் அளவுக்கு போதிய இடங்கள் கிடைக்கவில்லை. பாஜக 104 இடங்களும், காங்கிரஸ் 78 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களும் பிடித்தது. தேர்தலில் அதிக இடங்களை பிடித்ததால் பாஜகவின் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். 15நாளில் மெஜாரிட்டியை நிரூபிக்க ஆளுநர் அழைப்பு விடுத்த நிலையில்  நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னர் எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்தியா முழுவதும் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மாநிலங்களை இழந்துவந்த நிலையில் கர்நாடகத்தில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள மஜத கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தது.  எந்தவித நிபந்தனையும் இன்றி மஜதவுக்கு ஆதரவு அளிப்பதாக ராகுல்காந்தி அறிவித்தார். முதல்வராக மஜத-வைச் சேர்ந்த குமாரசாமி தேர்வு செய்யப்பட்டார். ,மே 21, 2018-ல் கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் அதிருப்தியில்  இருந்த காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏக்கள் 12 பேரும் 2019-ம் ஆண்டு தங்களது ராஜினாமா கடித்ததை ஆளுநரிடம் அளித்தனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. காங்கிரஸ், மஜத கட்சியினர் தங்களது கட்சி எம்.எல்.ஏக்களை நட்சத்திர ஹோட்டலில் தங்கவைத்து பாதுகாத்தனர். காங்கிரஸ் எம்.எல்.ஏவாக இருந்த ஸ்ரீமந்த்பாட்டீல் பாதுகாப்புகளை மீறி மும்பை பயணமானார். எங்கள் கட்சி எம்.எல்.ஏவை கடத்திவிட்டதாக காங்கிரஸ் கொதித்தது. உடல்நிலை சரியில்லை இதயநோய் சிகிச்சைக்காக மும்பை மருத்துவமனையில் இருப்பதாக ஒரு  வீடியோ வெளியிட்டார் ஸ்ரீமந்த் பாட்டீல்.சட்டப்பேரவை தலைவருக்கு கடிதம் அனுப்பி வைத்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை இல்லாததால் கர்நாடகத்தில் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சியும் கவிழ்ந்தது.பாஜக மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வந்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்திருந்த ஸ்ரீமந்த் பட்டீல், பெலகாவி காகவாட் சட்டசபைக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2020 – 2021 (பசவராஜ் பொம்மை  அமைச்சரவைக்கு முன்பு) -வரை ஜவுளி மற்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்தார். தற்போது இவரிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீமந்த் பாட்டீல், “ நான் எந்த பணமும் வாங்காமல்  பாஜகவில் சேர்ந்தவன். எனக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று அவர்கள் என்னிடம் கேட்டார்கள். ஆனால் நான் ஒரு பைசாக்கூட வாங்கவில்லை. நான் அவர்கள் அளிக்கும் பண சலுகையை நிராகரித்தேன். கட்சி ஆட்சியில் இருக்கும் போது நான் மக்களுக்கு சேவை செய்ய விரும்பினேன் நல்ல பதவியை கொடுக்க வேண்டும் என்று கேட்டேன். அவர்கள் என்னை இப்போது புதிய அமைச்சரவையில் இருந்து நீக்கிவிட்டார்கள். அமைச்சரவை இலாகா குறித்து மூத்த தலைவர்களுடன் பேசினேன். புதிய அமைச்சரவையில் சேர்க்க கோரி மராட்டிய சமூகம் எனக்கு ஆதரவு அளித்து வருகிறது. வருங்காலங்களில் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது எனக் கூறியுள்ளார்.

ஸ்ரீமந்த் பாட்டீல் பேச்சை காங்கிரஸை சேர்ந்த டி.கே.சிவக்குமார் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள டி.கே.சிவக்குமார்,  ‘ஸ்ரீமந்த் பாட்டீல் உண்மையை பேசியுள்ளார். ஆபரேஷன் கமலா மூலம் பாஜக அவரை கவர்ந்தது. இந்த விஷயத்தை பேசியதற்காக அவரை வரவேற்கிறேன். இதுகுறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

(நன்றி News18)