சரகர்ஹி யுத்தம்: சீக்கியர்களுக்கு பிரிட்டிஷார் தலை வணங்குவது ஏன்?

1897-ஆம் ஆண்டு சரகர்ஹி போரில் ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் பழங்குடியினருக்கு எதிராகச் சண்டையிட்ட 20 சீக்கிய வீரர்களின் தலைவர் ஹவில்தார் இஷார் சிங்கின் சிலை பிரிட்டனில் திறக்கப்பட்டுள்ளது.

இந்த 10 அடி உயர வெண்கல சிலை, சரகர்ஹி போரில் இறந்த வீரர்களின் நினைவாகக் கட்டப்பட்ட பிரிட்டனின் முதல் நினைவுச்சின்னமாகும். 6 அடி மேடையில் கட்டப்பட்ட இந்த சிலை, இங்கிலாந்தின் வால்வர்ஹாம்ப்டனில் உள்ள வாடன்ஸ்ஃபீல்டில் நிறுவப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பிரம்மாண்ட தொடக்க விழாவில் பல பிரிட்டிஷ் எம்.பி.க்கள், உள்ளூர் கவுன்சிலர்கள், பல ராணுவ அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சரகர்ஹி நினைவுச் சின்னத்தில் பல பகுதிகள் உள்ளன. அதில் எட்டு மீட்டர் எஃகு தகடு உள்ளது, அதில் மலை மற்றும் பாதுகாப்பு நிலைகள் மற்றும் நினைவுகூரத்தக்க சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த வெண்கல சிலையும் அதில் நிறுவப்பட்டுள்ளது.

சரகர்ஹி போரில் என்ன நடந்தது?

சரகர்ஹி போர் சரியாக 124 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது செப்டம்பர் 12, 1897 அன்று நடந்தது. ஒரு பக்கத்தில் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் 36 வது (சீக்கிய) படையின் 21 சீக்கிய வீரர்கள் மட்டுமே இருந்தனர், மறுபுறம் 10 ஆயிரம் ஆப்கன் பழங்குடியினரைக் கொண்ட ஒரு பெரிய ராணுவம் இருந்தது. இந்தப் போர் இன்றைய பாகிஸ்தானின் கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் நடந்தது.

ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த போரில், 21 சீக்கிய வீரர்கள் தங்களது உயிரைத் தியாகம் செய்யும் வரை அற்புதமான துணிச்சலை வெளிப்படுத்தினர். இந்த மோதலில் சுமார் 180 முதல் 200 பதான் பழங்குடியினரும் கொல்லப்பட்டனர்.

அன்றிலிருந்து ஒவ்வோர் ஆண்டும், இந்திய ராணுவத்தின் சீக்கிய படைப்பிரிவின் 4 வது பட்டாலியன் செப்டம்பர் 12 -ஆம் தேதியை சரகர்ஹி தினமாகக் கொண்டாடுகிறது. பிரிட்டிஷ் ராணுவ நிலைகளைப் பாதுகாக்க கடைசி மூச்சு இருக்கும் வரை எதிரிகளுடன் போராடிய 21 துணிச்சலான சீக்கிய வீரர்களின் வீரத் தியாகத்தை இந்த நாள் நினைவுகூர்கிறது.

“40 ஆண்டுக் கனவு இறுதியாக நனவாகியுள்ளது”

இந்த 21 துணிச்சலான சீக்கிய வீரர்கள் மற்றும் சரகர்ஹி போரின் கதையை உலகத்துக்குக் கூற வேண்டும் என்பது வாடன்ஸ்ஃபீல்ட்டின் கவுன்சிலர் பூபிந்தர் காகலின் நீண்டகால கனவு.

இந்த நினைவுச்சின்னத்தின் மீதான தனது ஆர்வம் 41 ஆண்டு பழமையானது என்கிறார் காகல். 14 வயதில் இந்தியாவுக்குச் சென்றபோது பாரத ஸ்டேட் வங்கியின் ஒரு கிளையில், நாள்காட்டியைப் பார்த்திருக்கிறார். அதில் பல சீக்கியர்கள் இடிபாடுகளுக்கு இடையே நிற்கும் படம் இருந்தது. அதைப் பற்றி வங்கி மேலாளரிடம் கேட்டபோது, “மகனே, இது உன் வரலாறு. அதைப்பற்றி ஆராய்ச்சி செய்” என்று அவர் கூறியிருக்கிறார்.

அப்போதிருந்து, சரகர்ஹி போரின் நினைவாக ஒரு நினைவுச்சின்னத்தை அமைப்பது மற்றும் இந்த 21 துணிச்சலான வீரர்களை கெளரவிப்பது ஆகியவை அவரது கனவாக இருந்தது.

இந்த சிலை திறப்பு விழாவிற்கு சில நாட்களுக்கு முன்பு, காகல் பிபிசியிடம் பேசினார். “இது சீக்கிய சமூகத்திற்கு பெருமை அளிக்கும் தருணம், ஏனென்றால் இது கட்டப்பட்டால், அது தலைமுறை தலைமுறையாக இருக்கும்” என்றார்.

அந்த 21 சீக்கியர்கள் நினைத்திருந்தால் தப்பி ஓடியிருக்கலாம், ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை, கடைசி சிப்பாய் வரை துணிச்சலாகப் போராடினார்கள்.

பர்மிங்காமில் வசிக்கும் 21 வயதான தாரைன் சிங், வாடன்ஸ்ஃபீல்டில் வசிக்கும் போது கட்கா எனப்படும் வாள்சண்டையைக் கற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் கட்கா சண்டையைச் செய்து காட்டினார்.

“இந்த சிலை பிரிட்டனில் நிறுவப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சீக்கியர்கள் மட்டுமல்ல, அனைத்து இந்தியர்களும், பிரிட்டிஷ்காரர்களும் இந்த போரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அளவுக்கு இது வரலாற்றில் முக்கியமான போர்களில் ஒன்றாகும்” என்று அவர் கூறினார்.

இந்த சிலை மிகவும் அழகாக இருக்கிறது என்றும் தான் பார்த்த மிகச் சிறந்த சிலைகளில் ஒன்று என்றும் தரைன் சிங் கூறினார்.

மறுபுறம், வாடன்ஸ்ஃபீல்டில் இருந்து 20 நிமிட பயணத் தொலைவில் வசிக்கும் 26 வயதான சண்முக் கவுர், பிரிட்டனில் ஒரு சீக்கிய பெண்ணாக இந்த சிலையை பார்த்து மிகவும் பெருமைப்படுவதாகக் கூறுகிறார்.

சிலையை உருவாக்கியது யார், செலவு என்ன?

இந்த 10 அடி உயர சிலை வாடன்ஸ்ஃபீல்டின் குரு நானக் குருத்வாராவால் கட்டப்பட்டது. இது வெஸ்ட் மிட்லாண்ட்ஸின் பிளாக் கன்ட்ரியைச் சேர்ந்த 38 வயது கலைஞரான லூக் பெர்ரியால் உருவாக்கப்பட்டது. இந்த சிலையின் கட்டுமானத்திற்காக ஒரு மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சுற்றியுள்ள கட்டுமானங்களை அமைப்பதற்கு கூடுதலாக 36,000 பவுண்டுகள் செலவழிக்கப்பட்டிருக்கிறது.

தொடக்க விழாவிற்கு சில நாட்களுக்கு முன்பு பிபிசியிடம் பேசிய சிற்பி லூக் பெர்ரி, “இந்த போர் பிரிட்டிஷ் வரலாற்றின் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது, ஆனால் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பள்ளிகளில் இதைப் பற்றிக் கற்பிக்கப்படாததால் அது பலருக்குத் தெரியவில்லை. இந்தத் திட்டத்தில் பங்களித்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

லூக் பெர்ரி அமைத்த முதல் நினைவுச்சின்னம் இதுவல்ல. முதல் உலகப் போரின்போது பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய சீக்கிய வீரர்களின் நினைவாக போர் நினைவிடத்தில் உள்ள புகழ்பெற்ற சிங்கங்களையும் பெர்ரி வடிவமைத்துள்ளார்.

சரகர்ஹி நினைவிடத்துக்குச் செலவு செய்தது யார்?

இந்த நினைவிடத்திற்கான பணம் வாடன்ஸ்ஃபீல்டில் உள்ள குருநானக் குருத்வாராவைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் மற்றும் பக்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வால்வர்ஹாம்ப்டன் கவுன்சிலும் 35,000 பவுண்ட் அளித்திருக்கிறது.

இருப்பினும், இந்த சிலை ஹவில்தார் இஷார் சிங் அல்லது மற்ற 20 சீக்கிய வீரர்களைப் போன்றது அல்ல. ஏனென்றால், இந்த வீரர்களின் படங்கள் எங்கும் கிடைக்கவில்லை. அதனால் சிற்பியின் கற்பனையை அடிப்படையாகக் கொண்டு இது அமைக்கப்பட்டிருக்கிறது.

“இந்த சிலையை உடனடியாக அடையாளம் காண முடியாது” என்று பெர்ரி கூறினார்.

“தங்களது தாத்தாவைப் போல இருப்பதாக பலர் சொல்கிறார்கள். அந்த வகையில் மக்கள் இந்த சிலையுடன் தங்களை எளிதாகத் தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள்”

(நன்றி BBC TAMIL)