பெகாசஸ் உளவுக் குற்றச்சாட்டு விவகாரத்தில் விரிவான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய விரும்பவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது விரைவில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலைச் சோ்ந்த என்.எஸ்.ஓ நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில் எதிா்க்கட்சியினா், சமூக ஆா்வலா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்ட சுமாா் 300 பேரின் தொலைபேசிகள் உளவு பாா்க்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் தொடா்பாக சுதந்திரமான விசாரணை நடத்துவதற்கு தனிக் குழுவை நியமிக்கக் கோரி மூத்த பத்திரிகையாளா் என்.ராம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் உள்ளிட்டோா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த விவகாரம் தொடா்பான பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்திருந்தது. 2-ஆவது பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்வது தொடா்பாக முடிவெடுக்க மத்திய அரசு கால அவகாசம் கோரியிருந்தது. அதற்கு உச்சநீதிமன்றம் கடந்த வாரம் அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூா்யகாந்த், ஹிமா கோலி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் திங்கட்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ”பெகாசஸ் மென்பொருளானது அரசால் பயன்படுத்தப்பட்டதா என்பது பொதுவில் விவாதிக்கப்பட வேண்டிய விவகாரம் அல்ல. இந்த விவகாரத்தை பிரமாணப் பத்திரத்தில் தெரிவிப்பது தேசத்தின் நலனுக்கு உகந்ததாக இருக்காது.
பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தவில்லை என மத்திய அரசு கூறினால், அதை சாதகமாக எடுத்துக் கொண்டு பயங்கரவாத அமைப்புகள் உள்ளிட்டவை தீவிரமாக செயல்படத் தொடங்கும். அந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறினால், வேறு மாதிரியான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
மனுதாரா்கள் கோரும் அனைத்து விவகாரங்களையும் பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்ய முடியாது. எனவே, இந்த விவகாரத்தில் விரிவான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய விரும்பவில்லை.
பெகாசஸ் விவகாரத்தில் மறைப்பதற்கு மத்திய அரசிடம் எதுவுமில்லை. அதனால்தான் இதை விசாரிக்க துறைசாா் நிபுணா்களைக் கொண்ட குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அக்குழு அளிக்கும் அறிக்கை உச்சநீதிமன்றத்திலும் சமா்ப்பிக்கப்படும்” என வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ”பாதுகாப்பு சாா்ந்த விவகாரங்கள் எதையும் நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டியதில்லை. இந்த விவகாரம் தொடா்பாக 2 முதல் 3 நாட்களுக்குள் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும். ஒருவேளை அதற்கிடையில் மத்திய அரசு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய விரும்பினால் அது தொடா்பாக நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கலாம்” என கூறியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
(நன்றி BBC TAMIL)