இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட மூன்று புதிய பெண் நீதிபதிகள். உடன் ஏற்கெனவே நீதிபதியாக உள்ள இந்திரா பானர்ஜி.
இந்திய உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் மூன்று பெண் நீதிபதிகளின் நியமனங்கள் நடந்தேறின. அவர்களில் ஒருவரான நீதிபதி பி.வி நாகரத்னா, ஒருநாள் இந்தியாவின் முதலாவது பெண் தலைமை நீதிபதி ஆகலாம் என குறிப்பிட்டு செய்திகள் வெளியாயின. சிலர் இதை “ஒரு வரலாற்றுத் தருணம்” என அழைக்கிறார்கள்.
மூன்று பெண்களான நீதிபதி ஹிமா கோலி, நீதிபதி பெலா எம். திரிவேதி மற்றும் நீதிபதி பி.வி.நாகரத்னா செப்டம்பர் 1ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டனர்.
தலைமை நீதிபதி என்.வி ரமணா சக நீதிபதிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். உடன் 2018ஆம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் இந்திரா பானர்ஜியும் இருந்தார். இவர்களின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவின. இந்திய நாளிதழ்கள் பலவற்றில் இந்த செய்தி முதல் பக்கத்தில் இடம்பிடித்தது.
இந்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு இதை “பாலின பிரதிநிதித்துவத்திற்கான வரலாற்று தருணம்” என்று அழைத்தார்; அமெரிக்காவுக்கான இந்திய தூதர், இது “பெருமைமிக்க தருணம்” என்றார். வேறு சிலர் புதிய நீதிபதிகளுக்கு வாழ்த்து செய்திகளை ட்வீட் செய்தனர்.
இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் பாலின இடைவெளி குறைவதைக் குறிக்கும் விதத்தில் அமைந்த இந்த நியமனங்கள் வரவேற்கத்தக்கவையே. ஆனால் விமர்சகர்களோ இந்தியாவின் நீதித்துறை முழுவதும் இதுபோன்ற பாலின சமநிலை ஏற்படவில்லை என்று கூறுகின்றனர். சமீபத்தில் ஓய்வு பெற்ற பெண் நீதிபதியொருவர், உச்ச நீதிமன்றத்தை “வயோதிக சிறார்களின் மன்றம்” என்று அழைத்ததை இங்கே நினைவுகூரலாம்.
மூத்த வழக்கறிஞர் சினேகா கலிதா, முதல் பெண் தலைமை நீதிபதி ஆக நாகரத்னாவுக்கு வாய்ப்புள்ளதாக கொண்டாடுவதற்கு காட்டப்படும் உற்சாகம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்கிறார். எல்லாம் நினைத்தபடி நடந்தாலும், 2027இல் நாகரத்னாவுக்கு தலைமை நீதிபதி ஆகும் காலம் வரும். ஆனால், தனது பதவிக்காலத்தின் கடைசி ஒரு மாதத்திலேயே அவருக்கு அந்த வாய்ப்பு வரும் என்று சினேகா கலிதா கூறுகிறார்.
“ஒரு பெண், இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகப்போகிறார் என்பது கொண்டாட்ட விஷயமாக இருக்கலாம். ஆனால் அந்த நியமனம் வெறும் அடையாளமாகவே இருக்கும். நீதித்துறையில் அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என்பது சினேகாவின் வாதம்.
“தலைமை நீதிபதி பதவியை ஏற்பவுக்கு, அந்த பொறுப்புக்குரிய பணிகளை ஆற்ற சில அவகாசம் தேவைப்படும். குறிப்பாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு வருபவர், தமது பணிக்கான நடைமுறைகளை அறிந்து கொள்ளவே இரண்டு மாதங்கள்வரை பிடிக்கும். அவை பெரும்பாலும் பொதுவான நிர்வாக விவகாரங்களாக இருக்கும். ஆனால், நாகரத்னா தமக்கு கிடைத்த கடைசி ஒரு மாதத்தில் அந்த பதவியில் இருந்து கொண்டு எதை செய்து விட முடியும்? அவர் வெறும் பெயரளவுக்கே தலைமை நீதிபதியாக இருப்பார்,” என்கிறார் வழக்கறிஞர் சினேகா.
வழக்கறிஞர் சினேகா கலிதா உச்ச நீதிமன்றத்தில் பெண்களுக்கு வெளிப்படையான வகையில் பிரதிநிதித்துவம் இருக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மனு தாக்கல் செய்த பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ளார்.
உச்ச நீதிமன்றம் 1950ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அதன் பிறகு 1989ஆம் ஆண்டில்தான் இந்திய உச்ச நீதிமன்றத்துக்கு முதல் பெண் நீதிபதியாக ஃபாத்திமா பீவி நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்துக்காக இந்திய உச்ச நீதிமன்றத்துக்கு 39 ஆண்டுகளாயின. இது குறித்து 2018இல் பிரபல இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் ஃபாத்திமா பீவி, “பெண்களுக்கு இதுநாள்வரை மூடப்பட்ட கதவை நான் திறந்தவளானேன்” என்று கூறியிருந்தார்.
ஆனால் இப்போதும் தடங்கல்கள் தொடர்கின்றன. கடந்த 71 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட 256 உச்ச நீதிமன்ற நீதிபதிகளில், 11 பேர் (அல்லது 4.2%) மட்டுமே பெண்கள்.
34 உறுப்பினர்களைக் கொண்ட தற்போதைய இந்திய உச்சநீதிமன்றத்தில் நான்கு பெண் நீதிபதிகள் உள்ளனர் – இதுவரை இல்லாத அளவுக்கு. மாநிலங்களில் உள்ள 25 உயர் நீதிமன்றங்களில் 677 நீதிபதிகளில் 81 பெண்கள் உள்ளனர் – அவர்களில் ஐந்து பேருக்கு ஒரு பெண் நீதிபதி கூட இல்லை.
“உயர் நீதித்துறையில் பெண்களின் பிரதிநிதித்துவம் கிட்டத்தட்ட மோசமானதாக இருக்கிறது,” என்கிறார் சினேகா கலிதா. “இந்திய மக்கள்தொகையில் பாதி பேர் பெண்கள். ஆனாலும் எங்களுடைய பிரதிநிதித்துவம் நீதித்துறையில் சமமாக இருக்காதது ஏன்?” என்று கேட்கிறார் அவர்.
நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை செய்யும் தேர்வுக்குழுவான ‘கொலீஜியம்’ – மாவட்ட நீதிமன்றங்களில் போதுமான தகுதியுள்ள நீதிபதிகளை கண்டுபிடிக்க முடியாவிட்டால், அது உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் பட்டியலில் உள்ள “திறமையான பெண் வழக்கறிஞர்களை” தேர்வு செய்ய வேண்டும் என்கிறார் அவர்.
தற்போதைய தலைமை நீதிபதி ரமணா உட்பட பல்வேறு சட்ட வல்லுநர்கள் மற்றும் நீதிபதிகள் இந்திய நீதித்துறையில் அதிக பெண் நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என குரல் கொடுத்துள்ளனர்.
“இந்தியா சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுகளுக்குப் பிறகு, நீதித்துறையில் அனைத்து நிலைகளிலும் பெண்களுக்கு குறைந்தபட்சம் 50% பிரதிநிதித்துவத்தை எதிர்பார்க்கலாம். ஆனால் மிகுந்த சிரமத்துடன், நாங்கள் இப்போது உச்சநீதிமன்றத்தில் வெறும் 11% பெண்களின் பிரதிநிதித்துவத்தை அடைந்துள்ளோம்,” என்று தலைமை நீதிபதி ரமணா கூறினார்.
பிரிட்டனில் உள்ள நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளில் 32% பெண்கள். அமெரிக்காவில் இது 34% சதவீதம். சர்வதேச நீதிமன்றத்தின் மொத்த உள்ள 15 நீதிபதிகளில் 3 பேர் பெண்கள். அதாவது 20% பேர் பெண் நீதிபதிகள்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், இந்திய அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் கருத்து தெரிவிக்கும்போது, “பாலியல் வன்முறை சம்பந்தப்பட்ட வழக்குகளில் அதிக சமநிலையான மற்றும் அனுதாபமான அணுகுமுறைக்கு” அதிக பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
ஒரு பெண்ணை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை இனிப்புடன் வீட்டிற்கு சென்று அவரிடம் மன்னிப்பு கேட்குமாறு உயர் நீதிமன்றத்தின் ஆண் நீதிபதி ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்ட விவகாரம் உச்ச நீதிமன்றம்வரை வந்ததையடுத்து இந்த கருத்தை வேணுகோபால் பதிவு செய்தார்.
பாலியல் வல்லுறவு வழக்கில், பாதிக்கப்பட்டவர்களை அவமானப்படுத்தும் வகையிலோ அல்லது சமரசம் செய்ய பரிந்துரைக்கும் வகையிலோ இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிப்பதை பல சமயங்களில் பெண் வழக்கறிஞர்கள் எதிர்த்துள்ளனர்.
இதுபோன்ற சூழலில், பெண் நீதிபதிகளை அதிகமாக கொண்டிருப்பதால் மட்டும் ஒரு சில நீதிபதிகளின் தவறான மனப்பான்மை முடிவுக்கு வராது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
“பெண் நீதிபதிகள் எப்போதும் தங்களுடைய பாலினத்தை மையப்படுத்தியே இருக்க மாட்டார்கள்,” என்று நமீதா பந்தாரே, தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் கட்டுரையொன்றில் எழுதியிருந்தார்.
“39 வயதுடைய ஒருவரை பாலியல் வன்கொடுமையில் இருந்து விடுவித்ததும் ஒரு பெண் நீதிபதிதான். ஏனெனில் இரு தரப்பு உடல்களும் உறவாடியதற்கு சான்று இல்லை என்று கூறி அந்த பெண் நீதிபதி தீர்ப்பளித்திருந்தார்.
இதேபோல, ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் அவரை விடுவித்த விசாரணை குழுவில் இடம்பெற்ற மூன்று உறுப்பினர்களில் இருவர் பெண்கள்.”
ஆனால், நீதித்துறை “மேல் வர்க்கம், ஆதிக்க சாதி, பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள்” என்ற வகையில் இருக்க முடியாது. நமது ஜனநாயகத்தின் துடிப்பான குரல்கள் பல தரப்பட்ட இடத்தில் இருந்து ஒலிக்க ஏதுவாக வாய்ப்புகள் திறக்கப்பட வேண்டும்,” என்கிறார் பந்தாரே.
மேலும், “எல்லா பெண்களும் சிறந்த நீதிபதிகளாவார்கள் என்பது அவசியமில்லை. நீதித்துறைக்குள் வர பெண்கள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்பதே முக்கியம்,” என்கிறார் சினேகா கலிதா.
“ஒரு சுதந்திரமான தேசம்தான் நமது எதிர்பார்ப்பு என்றால், நீதித்துறையில் பாலின சமத்துவம் இருக்க வேண்டும்,” என்கிறார் அவர். “மேல் நீதிமன்றங்களில் அதிக பெண் நீதிபதிகள் இருந்தால், அவர்கள் நீதித்துறையில் பணியாற்ற பல பெண்களை ஈர்ப்பார்கள். ஒரு அமர்வில் பாலின சமத்துவம் இருக்கும்போது, அந்த சமூகத்துக்கும் அதிக பலன்கள் கிடைக்கும் என்கிறார் சினேகா கலிதா.
(நன்றி BBC TAMIL)