நீட் தேர்வு அச்சம்: தற்கொலை செய்துகொண்ட வேலூர் கூலி தொழிலாளி மகள்

அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் காரணமாக தமிழ்நாட்டில் மேலும் ஒரு தற்கொலை மரணம் நிகழ்ந்துள்ளது.

கடந்த சனி மற்றும் ஞாயிறுக்கு இடைப்பட்ட இரவில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் மற்றும் திங்களன்று அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமொழி என்று மாணவி தற்கொலை செய்துகொண்ட கனிமொழி என்று மாணவி தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில், இன்று வேலூர் மாவட்டத்திலும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நீட் தேர்வு எழுதிய மாணவி செளந்தர்யா குறைந்த மதிப்பெண் பெற்று விடுவோம் என்ற அச்சத்தால் தற்கொலை செய்துகொன்டுள்ளார் என்று காவல்துறை தெரிவிக்கிறது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு – ருக்மணி தம்பதியரின் மகள் செளந்தர்யா.

17 வயதாகும் இவர் வேலூர் தோட்டப்பாளையம் அரசினர் பெண்கள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ளார். சௌந்தர்யா பன்னிரண்டாம் பொது தேர்வில் 600க்கு 510 மதிப்பெண்கள் பெற்றவர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை(செப்டம்பர் 12) அன்று காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் நீட் மருத்துவ நுழைவுத் எழுதியுள்ளார்.

தேர்வெழுதி மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில் நீட் தேர்வில் மதிப்பெண்‌ குறைவாக பெற்றுவிடுவோமோ என்ற அச்சத்தில் இருந்துள்ளார். சௌந்தர்யாவின் தந்தை மற்றும் தாய் இருவருமே விவசாய தினக்கூலி வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பொற்றோர் இருவருமே இன்று வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளனர். இதற்கிடையில் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றுவிடுவோம் என்ற அச்சத்தில் இருந்த மாணவி சௌந்தர்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தகவலறிந்து வந்த வேலூர் லத்தேரி காவல் நிலைய போலீசார் மாணவியின் உடலை மீட்டு, வேலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு செய்ய அனுப்பியுள்ளனர்.

(நன்றி BBC TAMIL)