தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு தற்போது அளிக்கப்பட்டுவரும் இட ஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும்?
தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் பெண்களுக்கு ஏற்கனவே 30 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இந்த நிலையில், செப்டம்பர் 13ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அரசுப் பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.
அரசு அலுவலகங்களில் பெண்கள் வேலை பார்க்கும் சதவீதத்தை இது அதிகரிக்கும் என்பதால் அவரது இந்த அறிவிப்பிற்கு பல தரப்பிலிருந்தும் வரவேற்புகள் வெளியாயின. இதற்கு முன்பாக, 1989ல் மு.கருணாநிதி தலைமையில் தி.மு.க. ஆட்சி இருந்தபோது, அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீதம் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இப்போது அந்த இட ஒதுக்கீடு மேலும் பத்து சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்குக் கொடுக்கப்படும் இட ஒதுக்கீடு, காலத்தின் கட்டாயம் என்கிறார் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி.
ஆனால், இந்த இடஒதுக்கீடு Horizantal முறையில் பின்பற்றப்படுவதால், பெரும் எண்ணிக்கையிலான இடங்கள் பெண்களுக்கே சென்றுவிடுகின்றன என்கிறார்கள் போட்டித் தேர்வு பயிற்சியாளர்கள். “தேர்வு முடிந்து தரவரிசைப்படி பட்டியலிடும்போது 40 சதவீதம் பெண்கள் வந்துவிட்டால், தனியாக பெண்களுக்கான தனி ஒதுக்கீட்டை அந்தப் பிரிவில் பின்பற்றக்கூடாது. ஆனால், அப்படி பெண்கள் 40 சதவீதத்தையும் தாண்டி தேர்ச்சிபெற்றாலும்கூட, தனியாக பெண்களுக்கான இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. இது ஆண்களின் வாய்ப்பை கடுமையாகப் பாதிக்கிறது” என்கிறார் டிஎன்பிஎஸ்சி பயிற்சியாளரான ஐயாசாமி.
டிஎன்பிஎஸ்சி காட்டும் புள்ளிவிவரங்களின்படி, குரூப் 1, குரூப் 2 போன்ற உயர்நிலைத் தேர்வுகளில் பெண்களின் தேர்ச்சி விகிதம் மிக அதிகமாக இருக்கிறது. குரூப் 4 போன்ற கீழ் நிலைத் தேர்வுகளில்தான் ஆண்கள் சற்று அதிக எண்ணிக்கையில் தேறுகிறார்கள். ஆகவே, மொத்த இடங்களில் ஆண்களுக்கு ஐம்பது சதவீதம், பெண்களுக்கு ஐம்பது சதவீதம் இடஒதுக்கீட்டை அளிக்கலாம் என்கிறார்கள் சில பயிற்சியாளர்கள்.
இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்ட மனித வள மேலாண்மைத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் அளிக்கப்பட்டிருக்கும் புள்ளிவிவரங்களின்படி பார்த்தாலும், 30 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட நிலையிலேயே 2019ல் டிஎன்பிஎஸ்சியின் எல்லா பிரிவுகளிலும் பெண்களே அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
ஆனால், இந்தக் கூற்றைப் புறக்கணிக்கிறார் கோ. கருணாநிதி. “முதன் முதலில் இட ஒதுக்கீடுவந்தபோது, தங்களுடைய வாய்ப்புகள் பறிபோகுமென்று உயர் ஜாதியினர் இதேபோன்ற வாதத்தைத்தான் வைத்தார்கள். அதேபோலத்தான் இன்று ஆண்கள் இதனை எதிர்க்கிறார்கள். தற்போது எந்தத் தேர்வை எடுத்துக்கொண்டாலும் பெண்கள்தான் அதிக மதிப்பெண்களைப் பெறுகிறார்கள். ஆகவே, அவர்கள்தான் கூடுதலான இடங்களைப் பிடிப்பார்கள். இதில் வருத்தப்பட ஒன்றுமில்லை” என்கிறார் அவர்.
1929 பிப்ரவரி செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநாடு நடந்தபோது, அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டுமென்றும் பள்ளிக்கூடங்களில் ஆசிரியைகளாக 100 சதவீதமும் பெண்களையே நியமிக்க வேண்டுமென்றும் பெரியார் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார்.
“அந்தத் தீர்மானத்தை நெருங்கும்வகையில் தமிழ்நாடு அரசு இப்போது அறிவித்திருக்கிறது. இதில் நாம் மகிழ்ச்சிதான் அடைய வேண்டும்” என்கிறார் கருணாநிதி. பள்ளி இறுதித் தேர்வுகள் முதல் அனைத்துத் தேர்வுகளிலும் மாணவிகள் அதிக மதிப்பெண்களைப் பெறுவதை அவர் சுட்டிக்காட்டுகிறார். மாணவிகள் அதிக மதிப்பெண்கள் வாங்கி, அதிக இடங்களைப் பிடிக்கிறார்கள் என்றால் அது அவர்களது உழைப்பாலும் புத்திசாலித்தனத்தாலும் வருகிறது. அதற்கு இடஒதுக்கீட்டை குறைசொல்லக்கூடாது என்கிறார் அவர்.
(நன்றி BBC TAMIL)