கடந்த வாரம் இந்தியாவுடனான புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை அமெரிக்க காலநிலை தூதர் ஜான் கெர்ரி வெற்றிகரமாக அறிவித்தார். ஆனால் இந்தியா தனது நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைய என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பது குறித்த தெளிவு அதில் இல்லை.
கெர்ரி காலநிலை குறித்து அமெரிக்காவின் தலைமையை மீண்டும் உறுதிப்படுத்தும் ஒரு முயற்சியாக, சுற்றுச் சூழலுக்குப் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும் நிறுவனங்களை, மிகப்பெரிய கார்பன் குறைப்பு இலக்குகளை ஒப்புக் கொள்ள வைக்க முயற்சித்து வருகிறார்.
இருப்பினும், சர்ச்சைக்குரிய மற்ற விவகாரங்களிலிருந்து கால நிலை மாற்றத்தைத் தனிமைப்படுத்தும் இவரது முயற்சியை சீனா எதிர்த்தது. “பாலைவனமாக உள்ள சீன – அமெரிக்க உறவில் இந்தக் கால நிலை ஒத்துழைப்பு ஒரு ‘சோலை’-யாக இருக்கும் என்று அமெரிக்கா நம்புகிறது. ஆனால் ‘சோலை’ ‘பாலைவனத்தால்’ சூழப்பட்டிருந்தால், அந்தச் ‘சோலை’யும் விரைவில் பாலைவனமாகவே மாறும்” என நிதி அமைச்சர் வாங் யி, கெர்ரியிடம் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதன்முதலில் ஏப்ரல் மாதத்தில் காலநிலை நடவடிக்கை மற்றும் நிதி திரட்டல் உரையாடல் (CAFMD) தொடங்கப்பட்டது குறித்து இந்தியா மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இது, இந்தியா தனது 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்கை அடைய உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆனால், இந்தியா தனது கார்பன் உமிழ்வைத் தேவையான அளவுக்குக் குறைக்க எப்படித் திட்டமிட்டுள்ளது என்பது குறித்து இதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
நிகர பூஜ்ஜிய உமிழ்வு என்பது பசுமையில்ல வாயு உமிழ்வை முடிந்தவரை குறைத்து பின்னர், மரம் நடுதல் போன்ற நடவடிக்கைகளின் மூலம், வளிமண்டலத்தில் இருந்து மீதமுள்ள கார்பன் வெளியீட்டளவை உறிஞ்சுவதன் மூலம், உமிழ்வுகளைகச் சமநிலைப்படுத்துவதாகும்.
உலகின் மிகப்பெரிய கார்பன் உமிழும் நாடான சீனா, ஏற்கனவே 2060க்குள் கார்பன் சமநிலையை எட்டும் என்றும், அதன் உமிழ்வு 2030க்கு முன்பு உச்சத்தை எட்டும் என்றும் அறிவித்துள்ளது. இத்தகைய அறிவிப்புகளுக்கு மத்தியில், சீனா புதிய நிலக்கரி ஆலைகளை உருவாக்கியது விமர்சனத்துக்குள்ளானதும் குறிப்பிடத்தக்கது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய கார்பன் உமிழும் நாடான அமெரிக்கா, கார்பன் நிகர பூஜ்ஜிய இலக்கை அடைய 2050ஆம் ஆண்டை காலக்கெடுவாக நிர்ணயித்துள்ளது, மேலும் 2035ஆம் ஆண்டுக்குள் தனது மின் துறையை கார்பனற்றதாக மாற்றப்போவதாகவும் கூறியுள்ளது.
ஆனால் உலகின் மூன்றாவது பெரிய உமிழ்வைக் கொண்ட இந்தியா நிகர பூஜ்ஜிய இலக்கை எட்ட எந்தக் காலக் கெடுவையும் அறிவிக்கவில்லை. தவிர, பாரிஸ் ஒப்பந்தத்தின் படி, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை திருத்தப்பட்ட கார்பன் குறைப்பு இலக்குக்கான திட்டத்தையும் சமர்ப்பிக்கவில்லை.
ஒப்பந்தத்தில் பங்கேற்றுள்ள 191 நாடுகளில், இதுவரை 113 நாடுகள் மட்டுமே திருத்தப்பட்ட உறுதிமொழிகளை அறிவித்துள்ளன என்று ஐ நா தெரிவித்துள்ளது.
இதுவரை சமர்ப்பிக்கப்பட்ட காலநிலைத் திட்டங்களின் பகுப்பாய்வில், 2030ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வு 16% உயரும் என காட்டுகிறது. இது தொழில் புரட்சிக்கு முந்தைய நிலைகளை விட 2.7C (4.9F) வெப்பநிலை உயர்வுக்கு வழிவகுக்கும்.
பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் உலகளாவிய சராசரி வெப்பநிலை உயர்வை இரண்டு டிகிரிக்கு குறைவாக வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் ஆபத்தான காலநிலை மாற்றத்தைத் தவிர்க்கும் நோக்கில், தொழில் புரட்சிக்கு முந்தைய காலத்தை விட 1.5 டிகிரி உயர்வைப் பராமரிக்க முயற்சிக்கிறது.
ஏற்கனவே 1.1 டிகிரி வெப்பமடைந்துள்ளதாகவும், பாரிஸ் இலக்கு எட்டப்படுவதற்கு, 2030 ஆம் ஆண்டுக்குள், உலக கார்பன் உமிழ்வை 45% குறைக்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
காலநிலை மாற்றம் தொடர்பான அரசாங்கங்களுக்கிடையிலான குழுவின் (ஐபிசிசி) சமீபத்திய அறிக்கை, வெப்பநிலை அதிகரிப்பால் பூமியின் சில காலநிலை அமைப்புகள் ஏற்கனவே அபாயகட்டத்தை எட்டியிருக்கலாம் என்று எச்சரித்துள்ளது.
கிளாஸ்கோவில் நடைபெறவுள்ள முக்கியமான காலநிலை உச்சி மாநாடான COP26 க்கு முன், தேசியரீதியாக நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு, Nationally Determined Contribution (NDCs) எனப்படும் புதுப்பிக்கப்பட்ட திட்டங்களை உறுப்பு நாடுகள் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் அனைவரது கவனமும் இந்தியாவை நோக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் தனது டெல்லி வருகையின் போது, கெர்ரி இந்தப் பிரச்னையில் இந்தியாவின் மீதான சிறப்பு கவனத்தை, குறைந்தபட்சம், பொது வெளியில், வெளிப்படுத்தவில்லை. ஆனால் அவர் நிகர பூஜ்ஜிய இலக்கை வலியுறுத்தினார்.
“நண்பர்களே, புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், நிகர பூஜ்ஜிய இலக்கை எட்டத் தேவையான புதிய தொழில்நுட்பங்களை நாம் உருவாக்கி, செயல்படுத்தி, மேம்படுத்தவும் வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன்” என அவர் CAFMD துவக்க நிகழ்ச்சியில் கூறினார்.
அந்த நிகழ்ச்சியின் போது, இந்தியாவின் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், நிகர பூஜ்ஜிய இலக்கு குறித்தோ, அல்லது புதிய கார்பன் குறைப்பு இலக்கு குறித்தோ குறிப்பிடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
மாறாக, இந்தியாவின் தற்போதைய காலநிலைத் திட்டத்தை அவர் நியாயப்படுத்தினார். “இந்தியாவின் காலநிலை நடவடிக்கைகள் பல சுயாதீன மதிப்பீடுகளில் முன்னிலை பெற்றுள்ளன… இந்தியாவின் NDC இரண்டு டிகிரி செல்சியஸ் இணக்கமாக மதிப்பிடப்பட்டுள்ளது.” என்றார்.
2030க்குள் தன் கார்பன் உமிழ்வை 2005ல் இருந்ததை விட 33 – 35% வரை குறைக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது, எதார்த்தத்தில் இந்தியா அந்த இலக்கை கடக்கவிருப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
நாடுகள் அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளில், நாடுகளின் கார்பன் குறைப்பு உறுதிமொழிகளுக்கும் பாரிஸ் காலநிலை இலக்கை அடைய என்ன தேவையானதற்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.
எனவே குறுகிய கால இலக்காக, கூடுதல் கார்பன் குறைப்பும் நீண்ட கால இலக்காக, நிகர பூஜ்ஜிய உமிழ்வும் இருக்க வேண்டியது அவசியமாகிறது.
ஆனால் வளர்ந்த நாடுகளைப் போல அதிக கார்பன் குறைப்பு நடவடிக்கைகளை, இந்தியா போன்ற வளரும் நாடுகளிடம் எதிர்பார்க்கப்படக்கூடாது என்று இந்தியா தனது வாதத்தை முன்வைக்கிறது. ஏனெனில், இந்தியா இன்னும் வறுமையை எதிர்த்துப் போராடும் நாடாகவே இருப்பதாகவும், தன் எரிசக்தி தேவைக்கு புதைபடிவ எரிபொருட்களையே பெரிதும் நம்பியிருப்பதாகவும் கூறுகிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, குறிப்பாக சூரிய மின்சக்தித் துறையில் பெரிய அளவில் முன்னேறிச் செல்லும் அதே நேரத்தில், கொரோனாவுக்குப் பிந்தைய பொருளாதார மீட்சியின் ஒரு பகுதியாக, நிலக்கரி உற்பத்தியை கணிசமாக அதிகரிக்கும் திட்டங்களையும் இந்தியா அறிவித்துள்ளது.
“கால நிலை குறித்த கூட்டத்தில் ஜான் கெர்ரியைச் சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. காலநிலை நடவடிக்கை மற்றும் காலநிலை நீதி குறித்த விவாதங்களைத் தொடர்ந்தோம்” என்று கடந்த வாரம் திரு கெர்ரியைச் சந்தித்த பிறகு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ட்வீட் செய்தார்.
தனது பயணத்தின் முடிவில், கெர்ரி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த இந்தியாவின் சாதனையைப் பாராட்டினார், ஆனால் நிகர பூஜ்ஜிய இலக்கு மற்றும் உமிழ்வு – குறைப்பு இலக்கு ஆகியவற்றை எட்ட இந்தியா பூண்டுள்ள உறுதி குறித்து எங்கும் குறிப்பிடப்படவில்லை.
“COP26- கூட்டத்துக்கு செல்வதற்குள் ஏதோ ஒன்றை நிச்சயமாக இந்தியா அறிவிக்கும் என உறுதியாக, பல நாடுகளிடம் இருந்து இன்னும் அறிவிப்புகள் வெளியாகவில்லை. ஆக நான் கூடுதலாக திருத்தப்பட்ட இலக்குகளை பல இடங்களிலிருந்து எதிர்பார்க்கிறேன்” என்று அவர் கூறியதாக இந்திய செய்தித்தாள்கள் கூறுகின்றன.
கெர்ரி நினைத்ததை இந்தியா உண்மையிலேயே நிறைவேற்றினால், சீனா- அமெரிக்கா இடையே இந்த விவகாரத்தில் சுமுகப் போக்கு இல்லாத சூழலில், உலகளாவிய காலநிலை நடவடிக்கையில் மீண்டும் தலைமை வகிக்கும் முயற்சியில் அமெரிக்காவுக்கு அது உதவக்கூடும்.
ஆனால் இந்தியா அவ்வாறு செய்யாவிட்டால், சீனாவும் தன் ஒத்துழையாமையை வெளிப்படுத்தினால் என்ன ஆகும் என்கிற கேள்வி எழுகிறது.
தங்கள் இருவருக்கும் இடையே மோதல்கள் இருந்தாலும், வளர்ந்த நாடுகளை இந்த விஷயத்தில் எதிர்க்க இந்தியா, சீனா கைகோர்க்குமா என்றால் அதற்கு எளிதாக விடை கூற முடியாத நிலை தான் நிலவுகிறது.
(நன்றி BBC TAMIL)