இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டுக்கு அங்கீகாரம் வழங்கிய பிரிட்டன் – ஆனாலும் தொடரும் குழப்பம்

இந்தியாவில் விரிவான பயன்பாட்டில் உள்ளது கோவிஷீல்டு கொரோனா வைரஸ் தடுப்பூசிImage caption: இந்தியாவில் விரிவான பயன்பாட்டில் உள்ளது கோவிஷீல்டு கொரோனா வைரஸ் தடுப்பூசி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளது பிரிட்டன் அரசு. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம்,

ஆஸ்ட்ராசெனிகா நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசி மருந்துதான் கோவிஷீல்டு.

இந்த தடுப்பூசிக்கு பிரிட்டன் அங்கீகாரம் மறுத்த விவகாரம், இந்தியாவில் கொந்தளிப்பை உருவாக்கியது.

இந்தியாவில் இதுவரை 721 மில்லியன் டோஸ்கள் அளவுக்கு கோவிஷீல்டு மருந்து பயனர்களுக்கு போடப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி போட்டுக் கொண்டு தங்களுடைய நாட்டுக்குள் வரும் பயணிகளை 10 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு வரும் 4ஆம் தேதி முதல் உட்படுத்தப்படுவார்கள் என்று பிரிட்டன் அரசு தெரிவித்தது.

ஆனால், இந்த நடவடிக்கை பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்றும் கோவிஷீல்டு இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் சுய தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசு கூறியது.

இந்த விவகாரம் குறித்து பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ்ஸுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியிருந்தார்.

இந்த விவகாரத்தில் இந்தியாவை பாரபட்சமாக நடத்தும் போக்கு தொடர்ந்தால் அதேபோல இந்தியாவும் எதிர்வினையாற்ற நேரிடும் என்று இந்தியா தெரிவித்தது. இந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளதாக பிரிட்டன் அரசு கூறியுள்ளது.

இது தொடர்பாக சமீபத்தில் வெளியிட்ட விதியிலும் அந்நாட்டு அரசு திருத்தம் செய்தது. அதே சமயம், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட வேண்டுமா என்பதை பிரிட்டன் அரசு தெளிவுபடுத்தவில்லை.

(நன்றி BBC TAMIL)