தமிழர் வரலாறு: கேரள, கர்நாடக பகுதிகளில் நடக்கவுள்ள தமிழ்நாடு அரசின் தொல்லியல் ஆய்வு

தமிழ்நாடு தொல்லியல் துறை தமிழ்நாட்டிற்கு வெளியில் வேறு மாநிலங்களில் உள்ள பாலூர், வேங்கி, தலக்காடு போன்ற இடங்களில் தொல்லியல் ஆய்வுகளை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின் தலக்காடு

தலக்காடு, கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து சுமார் 45 கி.மீ. தூரத்தில் காவிரியின் இடது கரையில் அமைந்திருக்கிறது. தற்போது பாலைவனத்தைப் போலக் காட்சியளிக்கும் தலக்காட்டில் ஒரு காலத்தில் 30க்கும் மேற்பட்ட கோயில்கள் இருந்தன. இவற்றில் பெரும்பகுதி தற்போது மணலில் மூழ்கிவிட்டன.

தலக்காடு கங்க வம்ச மன்னர்களின் தலைநகரமாக இருந்த பிரதேசம். 11ஆம் நூற்றாண்டுவாக்கில் மேலைக் கங்கர்கள் சோழர்களிடம் தோற்றுப்போயினர். அப்போதிலிருந்து இந்தப் பகுதி ராஜராஜபுரம் என்று அழைக்கப்பட்டது. இதற்கு ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு, ஹொய்சாள மன்னனான விஷ்ணுவர்தன சோழர்களை மைசூர் பிரதேசத்திலிருந்து விரட்டியடித்தான்.

இதற்குப் பிறகு தலக்காடு பகுதியில் ஏழு சிறு நகரங்களும் ஐந்து மடங்களும் ஸ்தாபிக்கப்பட்டன. காவிரியின் எதிர்ப்புறத்தில் மலிங்கி என்ற சிறு நகரம் இருந்தது. 14ஆம் நூற்றாண்டுவரை இந்தப் பகுதி ஹொய்சாளர்களிடம் இருந்தது. பிறகு விஜயநகரப் பேரரசிற்கு உட்பட்ட சிற்றரசர்கள் வசம் வந்தது. மைசூரை ஆண்ட உடையார்கள் 1630ல் இதனை கைப்பற்றினர். இப்படி அந்தப் பகுதி மைசூர் மன்னர்களால் கைப்பற்றப்பட்டது குறித்தும் அதனால் ஏற்பட்ட சாபம் குறித்தும் ஒரு கதை இப்பகுதியில் பேசப்படுகிறது.

தலக்காட்டின் சாபம்

ஸ்ரீரங்கப்பட்டினத்தில் விஜயநகரப் பேரரசின் பிரதிநிதியாக திருமலை ராயன் என்ற மன்னன் ஆண்டுவந்தார். அவருக்கு குணப்படுத்த முடியாத நோய் ஏற்படவே, தலக்காட்டில் இருந்த வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வேண்டிக்கொள்ள சென்றார்.

அவருடைய இரண்டாவது மனைவியான அலமேலம்மாள் ஸ்ரீரங்கப் பட்டனத்தில் இருந்தபடி, நாட்டை நிர்வாகம் செய்துவந்தாள். ஆனால், சீக்கிரத்திலேயே கணவன் இறக்கப்போகிறான் என்பது தெரியவந்தது. இதனால், ஆட்சிப் பொறுப்பை மைசூரை ஆண்ட உடையார்களிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு தலக்காட்டிற்குப் புறப்பட்டார் அலமேலம்மாள்.

ஆனால், ராணியிடம் இருந்த நகைகளைப் பறிக்க விரும்பிய மைசூர் மன்னன், அதனைப் பறிக்க ஒரு சிறிய படையை தலக்காட்டிற்கு அனுப்புகிறார். இதையடுத்து நகைகளோடு காவிரியாற்றிற்குள் இறங்கும் அலமேலம்மாள், நகைகளை நதிக்குள் தூக்கி எறிகிறார். தானும் அதில் மூழ்கி இறந்துபோகிறார்.

உயிர் பிரிவதற்கு முன்பாக ஒரு சாபமிடுகிறார். அந்த சாபம் இதுதான்:

“தலக்காடு மண்ணோடு மண்ணாகட்டும்,

மலிங்கி சுழலில் மூழ்கட்டும்,

மைசூர் அரசர்களுக்கு பிள்ளையில்லாமல் போகட்டும்”.

இதற்குப் பிறகு இரண்டு விசித்திர சம்பவங்கள் உண்மையிலேயே நடந்தன. ஒன்று, பல நூற்றாண்டுகளாக துடிப்பு மிக்க நகரமாக இருந்த தலக்காட்டில் பல மீட்டர் உயரத்திற்கு மணல் சேர ஆரம்பித்தது. அதற்குப் பிறகு, உடையார் வம்ச அரசர்களுக்கு பட்டத்திற்கு வரும் வகையில் குழந்தைகளே பிறக்கவில்லை. சமீபத்தில் இறந்த ஸ்ரீ கந்ததத்த உடையார் வரை வாரிசு இல்லாமலேயே இறந்தார்கள் (ஆனால், இப்போதைய மகாராஜாவுக்கு குழந்தை பிறந்திருக்கிறது).

17ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு இந்தப் பகுதியில் மணல் சேர்வது தொடர்ந்து அதிகரித்துவருகிறது. ஒவ்வோர் ஆண்டும் 9-10 அடி உயரத்திற்கு மணல் சேர்ந்து வருவதால், மக்கள் இந்தப் பகுதியைவிட்டு தொடர்ந்து வெளியேற வேண்டியிருக்கிறது.

முப்பதுக்கும் மேற்பட்ட கோயில்கள் மணலுக்கடியில் மூழ்கியிருக்கும் நிலையில், கீர்த்தி நாராயணா கோயில் மட்டும் அகழாய்வு செய்து மீட்கப்பட்டுள்ளது.

20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆனந்தேஸ்வரா மற்றும் கௌரி சங்கரா கோவில்கள் மீட்டெடுக்கப்பட்டன. பாதாளேஸ்வரா கோயிலின் சுற்றுச் சுவர்களில் சில கல்வெட்டுகள் தென்பட்டன. இதில் ஒரு கல்வெட்டு கங்கர்கள் காலத்தைச் சேர்ந்த கன்னடக் கல்வெட்டு. மற்ற கல்வெட்டுகள் தமிழில் இருந்தன. கௌரிசங்கரா கோயிலில் உள்ள கல்வெட்டு, அந்தக் கோயிலானது சிக்கதேவராய உடையார் காலத்தில் கட்டப்பட்டதைத் தெரிவிக்கிறது.

“கங்கர்கள் ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி வரை ஆட்சிசெய்தார்கள். கங்கர்கள் கால கல்வெட்டுகள் கிருஷ்ணகிரியில்கூட கிடைக்கின்றன. ஒரு காலத்தில் மாண்டியா பகுதி தமிழ்நாட்டைச் சேர்ந்த பகுதிதான். தலக்காட்டிற்கும் சோழர்களுக்கும் தொடர்பு இருக்கிறது. ஆகவே அப்பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்ய தமிழக தொல்லியல் துறை விரும்புகிறது” என்கிறார் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியரும் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையுடன் இணைந்து செயல்படுபவருமான பேராசிரியர் கே. ராஜன்.

பட்டனம் (முசிறி)

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு சிறிய கிராமம்தான் பட்டனம். இந்தப் பகுதியில் நீண்ட காலமாகவே, பல்வேறு பணிகளுக்காக நிலத்தைத் தொண்டும்போது மேலடுக்கிலேயே பெரிய அளவில் ஓடுகள் போன்றவை கிடைத்துவந்ததையடுத்து இந்தப் பகுதி ஒரு தொல்லியல் தளமாக அடையாளம் காணப்பட்டது.

இந்த இடத்தில் வரலாற்று ஆய்வுக்கான கேரளா கவுன்சில் (கேசிஎச்ஆர்) 2007ல் இருந்து 2020வரை பத்து முறை தொல்லியல் ஆய்வுகளை நடத்தியுள்ளது. பதினொன்றாவது ஆய்வு இந்த மாதத் துவக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கி.மு. ஆயிரமாவது ஆண்டிலிருந்து இந்த இடத்தில் மக்கள் வசித்ததற்கான தொல்லியல் பொருட்கள் இங்கிருந்து கிடைத்துள்ளது. கி.மு. 3 மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுவரை இந்தப் பகுதி மிகவும் துடிப்பு மிக்க பகுதியாக இருந்திருக்கிறது.

பாமா என்ற தனியார் அமைப்பு 2006 முதல் 2016 வரை பட்டினம் பகுதியில் ஆய்வு நடத்தியுள்ளது. இந்த ஆய்வில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டன. வீடுகளில் கூரை அமைக்க பயன்படுத்தப்பட்ட ஓடுகள் கிடைத்தன. சுமார் ஏழுரை கிலோ மிளகும் கிடைத்தது.

சுமார் பத்து ஓடுகளில் தமிழி எழுத்துகள் கிடைத்தன. ஒரு பானை ஓட்டில் ஊர் பா வே ஓ என்றும் ஒரு பானை ஓட்டில் அமண என்ற எழுத்துகளும் கிடைத்திருக்கின்றன.

சங்ககால சேர நாட்டு துறைமுகமான முசிறயின் ஒரு பகுதியாகவே பட்டணம் இருக்குமென தமிழக தொல்லியலாளர்கள் கருதுகின்றனர்.

“சங்க இலக்கியங்களில் வரும் பேரியாறு என்பது தற்போதைய பெரியாற்றைத்தான் குறிக்கிறது. ஆகவே இந்த இடம் தமிழ்நாட்டோடு தொடர்புடைய இடம்தான். தமிழர்களின் தொடர்புகள் எங்கெங்கு இருந்திருக்குமோ, அந்ததந்த இடங்களிலெல்லாம் அகழாய்வு செய்வது தமிழ்நாடு தொல்லியல் துறையின் நோக்கமாக இருக்கிறது” என்கிறார் கே. ராஜன்.

வேறு மாநிலங்களில் இருக்கும் தொல்லியல் களங்களில் அகழாய்வை மாநிலத் தொல்லியல் துறை நேரடியாக செய்யாது என்றே தெரிகிறது. அங்குள்ள தொல்லியல் சார்ந்த அமைப்புகள், பல்கலைக்கழக தொல்லியல் துறைகள் ஆகியவற்றுடன் இணைந்தே இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இதன் முடிவுகள் மாநிலத் தொல்லியல் துறையால் வெளியிடப்படும்.

(நன்றி BBC TAMIL)