பாலியல் தொந்தரவு புகார்: தொடங்கிய இடத்துக்கே வந்த தமிழக பெண் எஸ்.பியின் வழக்கு

தமிழ்நாடு காவல்துறையில் பெண் எஸ்.பி ஒருவர் அளித்த பாலியல் சீண்டல் புகாரை தெலங்கானா மாநில காவல்துறை விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதன் மூலம் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி தன்னை பாலியல் ரீதியாக சீண்ட முயன்ற ஐஜிக்கு எதிராக அந்த பெண் காவல் கண்காணிப்பாளர் கொடுத்த புகார் மீண்டும் ஆரம்ப கட்டத்துக்கே வந்துள்ளது.

இது தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்ட ஐ.ஜி அந்தஸ்தில் உள்ள அதிகாரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மேல்முறையீடு செய்திருந்தார். பல்வேறு காரணங்களால் விசாரணைக்கு வராமல் இந்த மனு விசாரிக்கப்படாமல் இருந்தது.

முன்னதாக, தமிழ்நாட்டில் முன்பு ஆட்சியில் இருந்த அதிமுக அரசுக்கும் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததால் அவருக்கு எதிரான புகாரை விசாரித்தால் தமக்கு நியாயம் கிடைக்காது என பெண் எஸ்.பி செய்த முறையீட்டின் அடிப்படையிலேயே அந்த வழக்கை தெலங்கானாவுக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், தமது புகாரை தமிழ்நாடு காவல்துறையின் மாநில குற்றப்புலனாய்வுத்துறையே விசாரிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் பெண் எஸ்.பியும் தமது புகாரை தமிழ்நாட்டிலேயே விசாரிக்க தமக்கு ஆட்சேபம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். இந்த மூன்று மனுக்களையும் இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், பெண் எஸ்.பி.யின் பாலியல் புகாரை தமிழ்நாட்டிலேயே விசாரிக்கலாம் என்று கூறி, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது.

அந்த பெண் எஸ்.பி. கடைசியாக தமது புகார் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் முறையிட்டபோது, அவரது புகாரை தமிழக சிபிசிஐடி முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்தது. ஆனால், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு குற்றம்சாட்டப்பட்ட அதிகாரி, உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றிருந்ததால், அவரது புகார் விசாரிக்கப்படாமலேயே இருந்தது. தற்போதைய உச்ச நீதிமன்ற உத்தரவின் மூலம் சிபிசிஐடி முதல் தகவல் அறிக்கைக்கு பிந்தைய மேல் நடவடிக்கையை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன வழக்கு? ஏன் சர்ச்சை?

சம்பந்தப்பட்ட பெண் எஸ்.பி. தான் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியபோது, தமது துறையின் இணை இயக்குநராக இருந்த ஐ.ஜி அந்தஸ்தில் இருந்த அதிகாரி 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி தன்னை பாலியல் ரீதியாக சீண்ட முயன்றதாக குற்றம்சாட்டிதமது துறை இயக்குரிடம் எழுத்துபூர்வ புகார் அளித்திருந்தார்.

அந்த பெண் எஸ்.பி அடுத்த சில நாட்களில் வேறு துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டபோதும், அதே துறையில் குற்றம்சாட்டப்பட்ட அதிகாரி பணியில் தொடர்ந்தார்.

இதனால், தமது அதிகாரத்தை அவர் தவறாக பயன்படுத்தி அந்த அலுவலகத்தின் சிசிடிவி கேமரா உள்ளிட்ட தடயங்களை அழிக்கலாம் என்று அச்சம் தெரிவித்த பெண் எஸ்.பி, இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு குற்றம்சாட்டப்பட்ட அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிடுமாறு மனு தாக்கல் செய்தார்.

இதற்கிடையே, பெண் அதிகாரியின் புகாரை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறையில் டிஐஜி அந்தஸ்தில் இருந்த பெண் அதிகாரி தலைமையிலான குழுவை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் நியமித்தார். ஆனால், டிஐஜிக்கு மேல் ஐஜி ஆக உள்ள அதிகாரி மீதான புகாரை அவரது கீழ் உள்ள அதிகாரி விசாரித்தால் தமக்கு நியாயம் கிடைக்காது என்று மீண்டும் அந்த பெண் எஸ்.பி தமிழக காவல்துறை டிஜிபியிடம் முறையிட்டு மனு கொடுத்தார்.

இதையடுத்து, பெண் எஸ்.பி.யின் புகார் குறித்து விசாரிக்குமாறு கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் தலைமையிலான காவல்துறை விசாகா குழுவை அப்போதைய காவல்துறை தலைமை இயக்குநர் டி.கே. ராஜேந்திரன் கேட்டுக்கொண்டார். அந்த குழுவில் கூடுதல் டிஜிபி எஸ். அருணாசலம், டிஐஜி தேன்மொழி, ஓய்வு பெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை நிர்வாகி சரஸ்வதி, டிஜிபி அலுவலக நிர்வாக அதிகாரி ரமேஷ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

பெண் எஸ்பி எழுப்பிய சந்தேகம்

பாலியல் வழக்குஆனால், அந்த குழு, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய வழிகாட்டுதல்களின்படி முறையாக நியமிக்கப்படவில்லை என்றும் அதில் தன்னார்வ அமைப்பின் பிரதிநிதியை உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்றும் பெண் எஸ்.பி. கேட்டுக் கொண்டார். மேலும், டிஜிபி நியமித்த விசாகா குழுவில் அவரது அலுவலகத்திலேயே நிர்வாகியாக உள்ள ஒருவர், முன்னாள் காவல்துறை ஆய்வாளர், பாலியல் புகாருக்கு ஆளான பெண் எஸ்.பிக்கு மூத்த நிலையில் உள்ள டிஐஜி பதவி வகிக்கும் பெண் அதிகாரி உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

அந்த டிஐஜியும் குற்றம்சாட்டப்பட்ட ஐஜியும் ஏற்கெனவே மத்திய பணியில் பல வருடங்கள் பணியாற்றியவர்கள் என்றும் அந்த பெண் எஸ்.பி முறையிட்டு விசாகா குழு தலைவரிடம் மனு அளித்தார். தமது புகாரை ஐசிசி விசாரிக்கும் அதே சமயம், குற்றம்சாட்டப்பட்ட அதிகாரி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க ஏதுவாக இந்த வழக்கை காவல் நிலையத்திலும் பதிவு செய்ய அந்த பெண் அதிகாரி விருப்பம் தெரிவித்தார்.

இதையடுத்து இந்த விவகாரத்தை சிபிசிஐடி விசாரிக்க சீமா அகர்வால் தலைமையிலான குழு பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் சிபிஐசிஐடியும் பெண் எஸ்.பி அளித்த எழுத்துபூர்வ புகாரையே முதல் அறிக்கையாக 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி பதிவு செய்தது. ஆனால், அதற்கு மறுதினமே, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த குற்றம்சாட்டப்பட்ட ஐஜி, இந்த விவகாரத்தை விசாரிக்காமல் இருக்க தடை பெற்றார். தமது மனு மீதான விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்புத்துறை என்பது சுயாதீன அதிகாரம் பெற்ற தன்னிச்சையான அமைப்பு. அது தமிழ்நாடு காவல்துறையின் கீழ் செயல்படவில்லை. அதற்கென தனி அதிகாரி கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் இருக்கிறார். எனவே, எந்தவொரு பாலியல் புகாராக இருந்தாலும், அது லஞ்ச ஒழிப்புத்துறை மட்டத்திலேயே விசாரிக்கப்பட வேண்டும் என்று குற்றம்சாட்டப்பட்ட அதிகாரி கூறியிருந்தார்.

இதையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்யக் கோரி பெண் எஸ்.பி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து எஸ்.பி தாக்கல் செய்த மனு, ஐஜி தாக்கல் செய்த மனு, அவரை இடமாற்றம் செய்யக் கோரி பெண் எஸ்.பி தனியாக தாக்கல் செய்த மனுக்களை ஒரே விவகாரமாக இணைத்து நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் உத்தரவிட்டார்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் ஐஜியை பணியிட மாற்றம் செய்யக் கோரும் மனு அவரது காவல் பணி தொடர்புடையது என்றும், அவர் மீதான பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு தொடர்புடைய மனு அவரது தனி நடத்தை தொடர்பான விவகாரம் என்றும் அவற்றை ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்தக் கூடாது என்று முறையிட்டு நீதிபதிகள் வினீித் கோத்தாரி, அனிதா அடங்கிய அமர்வு முன்பு பெண் எஸ்.பி முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு இரு நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் இருந்தபோதே, ஒரு நபர் நீதிபதியான விமலா மனுதாரர் தரப்பு கருத்தைக் கேட்காமலேயே இந்த விவகாரத்தை விசாரிக்க தடை விதித்து உத்தரவிட்டார். அன்றைய தினம்தான் நீதிபதி விமலா பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இதற்கிடையே, லஞ்ச ஒழிப்புத்துறை விசாகா குழுவில் கூடுதல் டிஜிபி ஸ்ரீலக்ஷ்மி பிரசாத் தலைவராக சேர்க்கப்பட்டு பெண் எஸ்.பி.யின் வாக்குமூலம் கேட்டுப் பெறப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட ஐஜியிடமும் விசாரித்த ஸ்ரீலக்ஷ்மி பிரசாத், தங்களுடைய விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் அவரிடம் கேட்டுக் கொண்டார்.

இத்தகைய சூழலில் பெண் எஸ்.பி தமது புகாரை சிபிசிஐடி விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி புதிய மனுவை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

நீதிபதி கண்டிப்புடன் பிறப்பித்த உத்தரவு

பாலியல் வழக்குஇந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், ஸ்ரீலக்ஷ்மி பிரசாத் தலைமையிலான குழு, இரண்டு வாரங்களுக்குள் பெண் எஸ்.பியின் புகாரை விசாரித்து முடிக்க வேண்டும் என்று 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி உத்தரவிட்டார்.

மேலும் ஸ்ரீலக்ஷ்மி பிரசாத் குழுவும் சிபிசிஐடியும் ஒரே விவகாரத்தை தனித்தனியாக விசாரிக்க அனுமதிப்பதாகவும் நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவில் குறிப்பிட்டார்.

காவல்துறையில் உயரதிகாரிகள் மீது சுமத்தப்படும் பாலியல் புகார்கள் ஆபத்தான சமிக்ஞை ஆகும் என்றும் இதுபோன்ற நிலையை தவிர்க்க அனைத்து அரசு அலுவலகங்கள், காவல்துறை உயரதிகாரிகளின் அறைகளில் சிசிடிவி கேமராவை கட்டாயம் பொருத்த வேண்டும் என்றும் நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவில் குறிப்பிட்டார்.

பட்டியலிடப்படாத வழக்கில் உத்தரவு

இந்த உத்தரவு வந்த மறுதினமே, நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு ஒரு மனுவை தாக்கல் செய்த ஐஜி, சிபிசிஐடி வழக்கை விசாரிக்க தடை கோரினார்.

இதற்கிடையே, இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சி.வி. கார்த்திகேயன் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விசாரித்தது. அப்போது, ஒரு நபர் நீதிபதி பிறப்பித்த உத்தரவை அந்த வழக்கு பட்டியலிடப்படாத நீதிபதிகள் விசாரித்து தடை விதித்தது குறித்து நீதிபதிகள் ஆச்சரியம் தெரிவித்தனர்.மேலும், இந்த விவகாரத்தை அரிதானதாகக் கருதி, பெண் எஸ்பியின் புகாரை தெலங்கானா மாநில காவல்துறை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஐஜி மேல்முறையீடு செய்தார். தமிழக அரசும், தமது மாநிலத்துக்குள் நடந்ததாக கூறப்படும் சம்பவத்தை வேறு மாநில காவல்துறை விசாரிப்பது சரியாக இருக்காது என்று கூறி மனு தாக்கல் செய்தது. அதன் பிறகு பல்வேறு கட்டங்களில் தள்ளிப்போடப்பட்டு வந்த இந்த மனுக்கள் மீது இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

சுற்றி, சுற்றி நடந்தமேல் நடவடிக்கைகள்

பாலியல் வழக்குசம்பந்தப்பட்ட காவல்துறை பெண் எஸ்.பி 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனக்கு நேர்ந்ததாக கூறப்படும் பாலியல் சீண்டல் சம்பவத்தை எதிர்த்து புகார் கொடுத்த பிறகு அவர் லஞ்ச ஒழிப்புத்துறையில் இருந்து சென்ன நகர காவல்துறைக்கு மாற்றப்பட்டார். பிறகு அங்கிருந்தும் சமீபத்தில் வேறொரு துறைக்கு மாற்றப்பட்டார்.

குற்றம்சாட்டப்பட்ட ஐஜியை, 2019ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி இடமாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. அப்போது பெண் எஸ்.பியும் ஐஜியும் நீதிமன்றங்களில் பரஸ்பரம் மனுக்களை தாக்கல் செய்து கொண்டு முறையீடுகளை செய்தனர். இந்த நிலையில், தனது இடமாற்றல் உத்தரவு வந்த மூன்றரை மாதங்கள் கழித்து அந்த ஐஜி பொருளாதார குற்றங்கள் தடுப்புப்பிரிவுக்கு மாற்றப்பட்டார். பிறகு 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் தென் மண்டல ஐஜி ஆக நியமிக்கப்பட்டார்.

ஆனால், தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி வாக்குப்பதிவை வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் நடத்தும் நோக்கத்துடன், அப்போதைய ஆளும் அரசுக்கு நெருக்கமானவராக அறியப்பட்ட ஐஜியை தேர்தல் பணியுடன் தொடர்பில்லாத பணிக்கு மாற்ற ஆணையம் பரிந்துரைத்தது. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு காவல்துறை அதிரடிப்படை பிரிவு ஐஜி ஆக அந்த அதிகாரி நியமிக்கப்பட்டார்.

பெண் எஸ்.பி, காவல்துறை ஐஜி தொடர்புடைய விவகாரத்தில் காவல்துறை உயர் பொறுப்புகளில் இருந்த அப்போதைய டிஜிபி டி.கே. ராஜேந்திரன், 2019இல் ஓய்வு பெற்றார். அதன் பிறகு டிஜிபி ஆக பதவிக்கு வந்த திரிபாதி கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்று விட்டார்.

பெண் எஸ்பியின் புகாரை விசாரிக்க அரசு நியமித்த உள்ளுறை புகார் குழுவின் தலைவர் ஸ்ரீலக்ஷ்மி பிரசாதும் ஓய்வு பெற்று விட்டார். இத்தகைய சூழலில், சம்பந்தப்பட்ட பெண் எஸ்.பி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு நேர்ந்ததாக கூறப்படும் பாலியல் சீண்டல் சம்பவத்தில் புகார் கொடுக்க எங்கிருந்து புறப்பட்டாரோ அங்கேயே அவர் மீண்டும் திரும்பி வந்திருப்பதாகவே சமீபத்திய நிகழ்வு காட்டுகிறது.

மற்றொரு வழக்கு

இந்த பெண் எஸ்பியின் பாலியல் சீண்டல் புகார் நிலுவையில் இருந்தபோது, மற்றொரு மாவட்டத்தின் பெண் எஸ்.பியை சிறப்பு டிஜிபி ஆக இருந்த அதிகாரி பாலியல் சீண்டல் செய்ததாக ஒரு புகார் எழுந்தது. அந்த சம்பவமும் முந்தைய ஆட்சியில் நடந்தது. அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிறப்பு டிஜிபி, அவரது உத்தரவின்பேரில் சென்னை நோக்கி காரில் சென்ற பெண் எஸ்.பியை காவல்துறை அதிரடிப்படையினருடன் சென்று வழிமறித்த வேறொரு மாவட்ட எஸ்.பி ஆகியோரை மாநில அரசு பணி இடைநீக்கம் செய்திருக்கிறது. இவர்களுக்கு எதிரான வழக்கில், சமீபத்தில்தான் விழுப்புரம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

(நன்றி BBC TAMIL)