4-வது மெகா தடுப்பூசி முகாம் எப்போது? அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

சென்னை :

சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, கடந்த 12-ந்தேதி தமிழகத்தில் 40 ஆயிரம் கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம் 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது. இதைத்தொடர்ந்து 16 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் இருந்ததை வைத்து, கடந்த 19-ந்தேதி 20 ஆயிரம் முகாம்கள் மூலம் 16 லட்சத்து 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

முதல்-அமைச்சர், பிரதமரிடம் தமிழகத்துக்கு வாரத்திற்கு 50 லட்சம் தடுப்பூசிகள் வேண்டும் என்று கடிதம் எழுதினார். மேலும் பாராளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலுவை, டெல்லிக்கு அனுப்பி மத்திய சுகாதாரத்துறை மந்திரியை சந்தித்து கொரோனா தடுப்பூசியின் தேவை குறித்து வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டார். அதன் விளைவாக தமிழகத்துக்கு 28 லட்சம் தடுப்பூசிகள் வந்தது.

இந்த தடுப்பூசிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு, நேற்று முன்தினம் 3-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 23 ஆயிரம் இடங்களில் நடைபெற்ற இந்த முகாமில், 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 24 லட்சத்து 93 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

தமிழகத்தில் தற்போது 3 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. நானும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளரும், மத்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் தடுப்பூசிகள் குறித்து பேச இருக்கிறோம். தமிழக முதல்-அமைச்சரின் கோரிக்கையான வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் என்ற இலக்கை மத்திய அரசு நிறைவேற்றுமானால், இந்த வாரமும் 4-வது மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்படும்.

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. 3 மெகா தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் சாரை, சாரையாய் வந்து தடுப்பூசிகள் போட்டுக்கொண்டு, அதை ஒரு தடுப்பூசி திருவிழாவாகவே நடத்தினர். 12 மணிக்கெல்லாம் நிர்ணயித்த இலக்கை கடந்து, தடுப்பூசிகள் போதவில்லை என்ற நிலைதான் ஏற்படுகிறது. யாரையும் கட்டாயப்படுத்தி தடுப்பூசிகள் போட சொல்லவில்லை. அப்படியே சொன்னாலும் அதில் தவறில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

(நன்றி Maalaimalar)