பருவநிலை மாற்றம்: இந்தியாவால் நிலக்கரியின்றி ஏன் வாழ முடியாது?

உலக அளவில் அதிகம் மரபுசார் எரிபொருளை எரித்து நச்சுக் காற்றை வெளியிடும் மூன்றாவது பெரிய நாடான இந்தியா, இப்போது நிலக்கரியைத் தான் அதிகம் நம்பி இருக்கிறது. உலக நாடுகள் நிலக்கரி பயன்பாட்டைக் குறைக்க அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கும் போது, நிலக்கரியை கைவிடுவது, அதிவேகமாக வளர்ந்து வரும் நாடான இந்தியாவுக்கு எவ்வளவு எளிதாக இருக்கும்?

கடந்த 2006ஆம் ஆண்டு ஷொனக் என்கிற இளம் வணிகரிடம் பேசினேன். அந்த உரையாடலில் இந்தியாவின் பருவநிலை மாற்றம் தொடர்பான சவால்கள் எதிரொலித்தன.

“மேற்குலகம் கடந்த பல தசாப்தங்களாக பூமியை மாசுபடுத்திவிட்டு, அதன் பலன்களையும் அனுபவித்துவிட்டு, இப்போது ஏன் இந்தியர்கள் தங்களின் கார்பன் உமிழ்வைக் குறைத்துக் கொள்ளுமாறு கூறப்படுகிறார்கள்?” என்று கேட்டார்.

மும்பையைச் சேர்ந்த அவர் ஒரு ஷூ ஆலையை நடத்தி வந்தார். அவ்வாலையில் இருந்து நச்சுக் காற்று வெளியேற்றப்படுவதை அவரே ஒப்புக் கொண்டார்.

“நான் அந்தக் காலணிகளை பிரிட்டன் மற்றும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறேன். மேற்குலகம் தன் கார்ப்ன் உமிழ்வை வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது போல… இப்போது நாம் ஏன் நிறுத்த வேண்டும்?” என குழப்பத்தோடு கேள்வி எழுப்புகிறார்.

அதன் பிறகு எவ்வளவோ மாற்ற்றங்கள் நிகழ்ந்துவிட்டன, இருப்பினும் உலக அளவில் உமிழ்வுகள் தொடர்ந்து அதிகரித்தன. அதே காலகட்டத்தில் இந்தியாவின் மக்கள் தொகையும் அதிகரித்தது, அதன் பொருளாதாரமும் வளர்ந்தது.

கார்பன் உமிழ்வைக் குறைக்குமாறு மேற்குலகம் இந்தியாவை வலியுறுத்தும் போது, அதன் கவனம் இந்தியா நிலக்கரியைச் சார்ந்து இருப்பதன் மீது இருக்கிறது. நிலக்கரி தான் இந்தியாவின் 70 சதவீத எரிசக்தி உற்பத்திக்கு மூலாதாரமாக இருக்கிறது.

உள்ளூர் சமூகங்களின் ஓர் உயிர்நாடி

இந்தியாவில் 40 லட்சம் பேர் நிலக்கரியைச் சார்ந்து வாழ்கிறார்கள்ஒடிசாவின் தால்சர் மாவட்டத்தில் உள்ள ஒரு சுரங்கத்தில் சூரிய உதயத்திற்கு முன்பே பிரகாசமாக அலங்கரிக்கப்பட்ட லாரிகளில் நிலக்கரி குவிந்து கிடக்கின்றன. அருகில், நாடு முழுவதும் நிலக்கரியை எடுத்துச் செல்லும் ரயில் கடந்து செல்கிறது.

இளஞ்சிவப்பு புடவைகளை அணிந்திருக்கும் பெண்கள் நிலக்கரி கட்டிகளை வெறும் கைகளால் சேகரித்து, அதை கூடைகளில் இட்டு நிரப்பி, துல்லியத்துடன் தலையில் வைத்து எடுத்துச் செல்கின்றனர். மிதிவண்டிகளில் செல்லும் ஆண்கள் நிலக்கரி கொண்ட பெரிய பைகளை கைப்பிடியில் மாட்டி பாரத்தை சமன் செய்கிறார்கள்.

ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிட்டியூஷனின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவின் நிலக்கரித் தொழிலில் சுமார் 40 லட்சம் மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை செய்கின்றனர். நிலக்கரி இருப்புக்களில் பெரும்பாலானவை இந்தியாவின் கிழக்குப் பகுதியில், நிலக்கரி பெல்ட் என்று அழைக்கப்படும் ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலங்களில் உள்ளன.

இந்தப் பகுதிகளில், நிலக்கரியும் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிக்கிறது. இது இந்தியாவின் மிக ஏழ்மையான சில உள்ளூர் சமூகங்களின் உயிர்நாடியாகும்.

“நிலக்கரி இல்லாமல் இந்தியா வாழ முடியாது” என்று ஒடிசாவில் சுரங்கத் தொழிலாளர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத் தலைவர் சுதர்சன் மொஹந்தி கூறினார்.

நாட்டில் உள்ள மற்றவர்களைப் போலவே, நிலக்கரியிலிருந்து தூய்மையான எரிசக்தி வளங்களுக்கு மாறுவதற்கான சரியான சிந்தனை, திட்டம் தேவை என வாதிட்டார் சுதர்சன் மொஹந்தி.

ஒரு திறந்தவெளி சுரங்கத்தின் விளிம்பில் நாங்கள் பேசும்போது, ​​சுரங்கங்களுக்கு வழி வகுப்பதற்காக பல தசாப்தங்களுக்கு முன் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்த ஏராளமான குடும்பங்களைப் பற்றி அவர் என்னிடம் கூறுகிறார்.

இந்த சுரங்கங்கள் படிப்படியாக செயல்பாட்டிலிருந்து அகற்றப்பட்டால், அதே மக்கள் மீண்டும் இழக்கும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றார். “சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தால் இந்தியா நிலக்கரி உற்பத்தியை நிறுத்தினால், நாங்கள் எப்படி எங்கள் வாழ்வாதாரத்தை பராமரிக்க முடியும்?” என கேள்வி எழுப்புகிறார்.

தொலைவில், கீழே உள்ள சாம்பல் பள்ளத்தாக்கின் மறுபக்கத்தில், வனப்பகுதியை அதிகரிக்க நடப்பட்ட பசுமையான மரங்களால் மூடப்பட்ட ஒரு மலைப்பகுதியை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

“நாம் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகளையும் நிர்வகிக்க முயற்சி செய்யலாம், ஆனால் நிலக்கரி உற்பத்தி விஷயத்தில் சமரசம் செய்வது சாத்தியமில்லை,” என சுதர்சன் மொஹந்தி கூறினார்.

சுத்தமான ஆற்றலுக்கான சந்தை

நிலக்கரி சுரங்கம்கடந்த தசாப்த காலத்தில், இந்தியாவின் நிலக்கரி நுகர்வு கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. இந்தியா தொடர்ந்து அதிக அளவு நிலக்கரியை இறக்குமதி செய்கிறது, மேலும் வரும் ஆண்டுகளில் டஜன் கணக்கிலான புதிய சுரங்கங்களைத் திறக்க திட்டமிட்டுள்ளது.

ஆனால் ஒரு சராசரி இந்தியர் இப்போதும், ஒரு பிரிட்டன் நாட்டவரை விடவோ, ஒரு அமெரிக்கரை விடவோ மிகக் குறைந்த அளவிலான மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவும் தூய்மையான ஆற்றலை நோக்கி மாறிக் கொண்டிருக்கிறது, 2030ஆம் ஆண்டுக்குள் தன் நிறுவப்பட்ட மின்சாரத் திட்டங்கள் மூலம் 40 சதவீத அளவுக்கு மரபுசாரா மின்சாரத்தைப் பெற இலக்கு வைத்துள்ளது இந்தியா.

டெல்லியில் உள்ள ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சிலைச் சேர்ந்தவர் மற்றும் ஒரு முன்னணி காலநிலை சிந்தனைக் குழுவைச் சேர்ந்தவருமான அருணபா கோஷ், நாடு இந்த திசையில் முன்னேறியுள்ளது என்று கூறினார்.

டெல்லி மெட்ரோ அமைப்பு போன்ற உதாரணங்களை அவர் மேற்கோள் காட்டுகிறார், அவ்வமைப்பு, இப்போது அதன் தினசரி மின் தேவையில் 60 சதவீதத்துக்கும் அதிகமான மின்சாரம் சூரிய சக்தியில் இயங்குகிறது.

ஆனால் இந்தியாவில் இது போன்ற மரபுசாரா மின்சார திட்டங்களை அதிகரிக்க, பெரிய அளவில் வெளி முதலீடுகள் தேவைப்படுகிறது என கோஷ் கூறினார்.

“இது இலவசப் பணத்தைப் பற்றியது அல்ல. மரபுசாரா ஆற்றல் முதலீடுகளுக்கான உலகின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது, சர்வதேச முதலீட்டாளர்கள் வந்து தங்கள் பணத்தை இந்தியாவில் முதலீடு செய்து நல்ல வருமானத்தைப் பெற வேண்டும்.” என்கிறார் அவர்.

விருப்பமில்லை

நிலக்கரி சுரங்கம்130 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையுடன் இருக்கும் இந்தியாவின் எரிசக்தித் தேவை அடுத்த 20 ஆண்டுகளில் வேறு எந்த நாட்டையும் விட அதிகமாக உயருமென சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மின்சார தேவைகளைப் பூர்த்தி செய்ய, ஒடிசாவில் உள்ள சமூகங்கள், நிலக்கரியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதில் உள்ள சவால்களை நமக்கு நினைவூட்டுகின்றன.

ஜமுனா முண்டா பல்வேறு வேலைகளைச் செய்து பிழைத்து வரும் ஒரு தொழிலாளி, இன்னும் இந்தியாவில் மின்சாரம் கிடைக்காத பல்லாயிரக் கணக்கானவர்களில் இவரும் ஒருவர். அவர் தன் உணவை சூடாக்க சுரங்கத்திலிருந்து எடுத்து வந்த நிலக்கரியைப் பயன்படுத்துகிறார்.

“நிலக்கரி இல்லையென்றால், எங்களால் சமைக்க முடியாது. இரவில், நாங்கள் அதை எரித்து வீட்டிலேயே வைத்திருக்கிறோம், அதனால் எங்களுக்கும் சிறிது வெளிச்சம் இருக்கிறது” என்று கூறி அவர் தன் உணவை தீவிரமாக கிளறினார்.

“இது தீங்கு விளைவிக்கும் என்றால், அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? நிலக்கரியைப் பயன்படுத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.”

சோலார் எரிசக்தி போன்ற மாற்று ஆதாரங்களில் நாடு ஏற்கனவே பெரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டுவதை, இந்தியாவில் உள்ள பலர் உடன்படுவதில்லை.

அப்படி இருந்தால் கூட இந்தியா நிலக்கரியை அதிகம் நம்பி இருக்கும் காரணத்தால், நிலக்கரி இல்லாத எதிர்காலம் வெகு தொலைவில் இருக்கிறது.

ஜமுனாவிடம் பேசும் போது, ஷொனக் உடனான எனது உரையாடலை – மிகவும் வித்தியாசமான முறையில் நினைவூட்டியது. மேலும் நிலக்கரி உடனான தொடர்பை இந்தியா துண்டிப்பது எவ்வளவு சிக்கலானது என்றும் தோன்றியது.

ஆற்றல் தேவை அதிகமுள்ள இந்நாட்டில், முன்னேற்றம் பெரும்பாலும் ஒரு சில இழப்புகளோடு வருகிறது.

(நன்றி BBC TAMIL)