தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம்: 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

சென்னை-”தமிழகத்தில் இன்று நடைபெறும் ‘மெகா’ முகாம்களில், 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும்,” என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில், தேசிய நலவாழ்வு குழும ஒப்பந்த ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு ஆணையை, அமைச்சர் சுப்பிரமணியன்நேற்று வழங்கினார். தொடர்ந்து, 2021 – 22ம் ஆண்டுக்கான பல் மருத்துவ பட்ட மேற்படிப்பு தரவரிசை பட்டியலையும் வெளியிட்டார்.

இதன்பின், அமைச்சர் அளித்த பேட்டி:மருத்துவ துறையில் ஒப்பந்த பணியாளர்களாக, ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்து வரும், 28 ஆயிரத்து 100 பேருக்கு 30 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது. அதன்படி, ஆண்டுக்கு 89 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும்.மேலும், 2021 – 22ம் ஆண்டிற்கான பல் மருத்துவ பட்ட மேற்படிப்பு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் தரவுகளின்படி 18 வயதை பூர்த்தி செய்த, 5 கோடியே 78 லட்சத்து 91 ஆயிரம் பேர் தடுப்பூசி போட தகுதியானவர்கள். அவர்களில், 62 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. அக்., இறுதிக்குள், 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் மெகா முகாம்களில் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும்.இவ்வாறு அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

dinamalar