சிவில் சர்வீஸஸ் தேர்வு; தமிழகத்தில் 38 பேர் மட்டுமே தேர்வு

கடந்த 2020க்கான, ‘சிவில் சர்வீசஸ்’ தேர்வில், தமிழகத்தில் இருந்து 38 பேர் மட்டுமே தேர்வாகி உள்ளனர். சில ஆண்டுகளாகவே, தமிழகத்தில் இருந்து சிவில் சர்வீசஸ் தேர்வில், தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இது குறித்து, சென்னையில் உள்ள சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி நிர்வாக பங்குதாரர் வைஷ்ணவி கூறியதாவது:ஒவ்வோர் ஆண்டும் இந்திய அளவில், சிவில் சர்வீசஸ் பணிக்கு ஏற்படும் காலி இடங்களை நிரப்ப தான், ‘யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்’ எனப்படும் மத்திய குடிமை பணிகள் தேர்வாணயம் தேர்வு நடத்துகிறது. சில ஆண்டுகளுக்கு முன் வரை, வட மாநிலங்களில் இருந்து, இந்த தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை குறைவு. அவர்களுக்கு இந்த தேர்வு மீது இருந்த ஆர்வக் குறைவே காரணம். தற்போது, நிலைமை மாறி விட்டது.’ஆன்லைன்’ வழி பயிற்சி வட மாநிலங்களைச் சேர்ந்த பலரும், ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். குஜராத்தில், அம்மாநில அரசே, இதற்கான பயிற்சி வகுப்புகளை பெரிய அளவில் நடத்துகிறது. தமிழகத்தில் தயாராவோர் எண்ணிக்கை குறைவில்லாமல் உள்ளது. இருந்தபோதும், சில ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையோடு ஒப்பிடுகையில், தற்போது சிறிது பின்தங்கி உள்ளது. முன்பு காலி இடங்களின் எண்ணிக்கை 1,000 என்ற நிலையில் இருந்தது. அதில், 80 – 90 பேர் வரை, தமிழகத்தில் இருந்து தேர்வாகினர். அதாவது, 8 — 9 சதவீதம். தற்போது காலி இடங்களின் எண்ணிக்கையும், 760 என்ற அளவில் சுருங்கி விட்டது.

தமிழகத்தில் தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது. 38 பேர் தான், 2020ம் ஆண்டுக்கான தேர்வில் தேர்வாகி உள்ளனர்; 5 சதவீதம் கூட வரவில்லை. இதற்கு முக்கியக்காரணமாக, கொரோனாவை தான் சொல்ல முடியும். இரண்டு ஆண்டுகளாக, எந்த பயிற்சி வகுப்பும் நேரடியாக நடத்தப்படவில்லை. ‘ஆன்லைன்’ வழியாக தான் நடத்தப்பட்டது. சிவில் சர்வீசஸ் பிரதானதேர்வுக்கு தயாராகும் போது, விடைகளை வேகமாக எழுத தயாராக வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்குள் சரியான விடை எழுத தெரிந்திருக்க வேண்டும். விடை தெரிந்திருந்தாலும், எழுத்துப் பயிற்சி இல்லாவிட்டால், குறிப்பிட்ட காலத்துக்குள் எழுதி முடிக்க முடியாது. அதனால், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சிறிது பின்னடைவை சந்தித்திருக்கக் கூடும். அதேபோல, நேர்முகத் தேர்விலும், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சிக்கல் இருந்திருக்கிறது. எந்தவொரு, ‘சப்ஜெட்’ பற்றியும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். அதே நேரம், நேர்முகத்தேர்வின்போது, தான் சொல்ல வரும் கருத்தை மிகத் தெளிவாகவும், ஆணித்தரமாகவும் சொல்லத் தெரிய வேண்டும். அதற்கு ஆங்கிலத்தில் புலமை கூடுதலாக இருக்க வேண்டும் என்பதில்லை. சொல்ல வரும் கருத்து தெளிவாக இருந்தால், தாய் மொழியான தமிழில் கூட கருத்தை சொல்லலாம்.

சமீப காலமாக, மொழி பிரச்னை இருப்பதில்லை. ஏனென்றால், நாம் சொல்லும் கருத்தை மொழிப் பெயர்த்து சொல்ல ஆட்கள் உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை, இதில் சிறிய சிக்கல் இருக்க தான் செய்கிறது. அச்சமின்றி பேசும் கலைஎன்ன தான், கருத்தை தமிழில் சொன்னாலும், மொழி பெயர்ப்பாளரிடம்குறை இருந்தாலும், சிக்கல் தான். அதே நேரம், வட மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு கூடுதல் வாய்ப்பாக இருப்பது, ஹிந்தி மொழி. அவர்கள் சரளமாக தன் கருத்தை, நேர்முக தேர்வு குழுவில் எடுத்து வைக்கும்போது, கூடுதல் மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது. இந்த சிக்கல்களாலும், நம்மவர்கள் பின்னடைவை சந்திக்கின்றனர். ‘நமக்கு எப்போதும் அடங்கி இருக்க வேண்டும். எதிலும் எதிர் கருத்துக் கூடாது’ என, நினைக்கும் பெற்றோர்களுக்கு மத்தியில் வளரும் பிள்ளைகளால், எந்தக் கருத்தையும் வலிமையாக எடுத்து வைத்து பேச முடியாத சூழல் உள்ளது.

எனவே, குழந்தைகள் சுதந்திரமாக பேசி வளர, பெற்றோர் அனுமதிக்க வேண்டும். எதிர் கருத்து என்றாலும், அதை மதித்து கேட்க வேண்டும். இப்படி செய்யும்போது, குழந்தைகள் தயக்கமில்லாமல், கருத்து — எதிர்கருத்து இரண்டையும் பேசி வளருவர். இப்படி வளரும் குழந்தை தான், எதிர்காலத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கும் தயாராகிறது என்ற எண்ணம், பெற்றோருக்கு இருக்க வேண்டும். அதேபோல, பள்ளிகளிலும், கல்லுாரிகளிலும் பேச்சு போட்டி, கட்டுரைப்போட்டி போன்றவற்றில் மாணவர்களை ஈடுபடுத்தி, அவர்களை வளர்க்க வேண்டும். முன்பு, பள்ளி, கல்லுாரிகளில் தலைப்பு ஒன்றை கொடுத்து, அதை வைத்து உடனடியாக, ஐந்து நிமிடம்அல்லது பத்து நிமிடம் பேசச் சொல்வர்; அதுவே போட்டியாகவும் இருக்கும். தலைப்பை கேட்ட மறு வினாடியே, அது தொடர்பான கருத்துக்களை சிந்தித்து, கோர்வையாக பேச வேண்டும்.

இப்படி பேசிப் பேசி பழகும்போது, எந்த தலைப்பின் மீதும் அச்சமின்றி பேசும் கலை கைவசப்பட்டு விடும். இப்படி பேசி பழக்கப்பட்டோர், நேர்முக தேர்வின் போது, ‘சப்ஜெக்ட்’ சொன்னதும், அது குறித்து தயக்கமின்றி கருத்துக்களை எடுத்து பேசுவர். இவற்றையெல்லாம் சரி செய்தால், சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை கட்டாயம் அதிகமாகும். இவ்வாறு வைஷ்ணவி கூறினார். போதுமான தரவுகள் இல்லை!-தமிழ் மாணவர்கள், எதிர்பார்க்கப்படும் அளவில் தேர்ச்சி பெறவில்லை என, பொதுப்படையாகச் சொல்ல முடியாது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும், சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத வேண்டும் என்ற உத்வேகம், சமீப காலமாக ஏற்பட்டிருக்கிறது.

அதற்காக, கடுமையான பயிற்சி எடுக்கின்றனர். பூர்வாங்க மற்றும் முக்கியதேர்வுகளில் பெரிய எண்ணிக்கையில், நம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்தாலும், நேர்முகத் தேர்வில் கோட்டை விட்டாலும் தேர்ச்சி இல்லை தான். என்ன தான் தகுதியுடைய மாணவராக இருந்தாலும், நேர்முக தேர்வில் கேட்கப்படும் எந்த கேள்விக்கும் சாதுரியமாக, செறிவான கருத்துக்களுடன், உடனடியாக பதிலளித்து பேச தெரிந்திருக்க வேண்டும். அந்தத் தேர்வில் நம் மாணவர்கள் தோல்வியடைவது, கூடுதலாக இருக்கிறது. அதற்கு, நம் மாணவர்கள் இன்னும் கூடுதலாக தயாராக வேண்டும். மற்றபடி, தேர்வாகும் தமிழக மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என, பொத்தாம் பொதுவாகச் சொல்ல முடியாது. காரணம், நம்மிடம் இருக்கும் தரவுகள் குறைவு. தமிழகத்தில் உள்ள தேர்வு மையங்களில், தேர்வு எழுதும் மாணவர்களில், எத்தனை பேர் தேர்ச்சி அடைந்திருக்கின்றனர் என்பதை வைத்து மட்டும், தேர்ச்சி கணக்கு சொல்லப்படுகிறது. தமிழகத்தில் இருந்து டில்லிக்கும், கர்நாடகாவின்பெங்களூருக்கும் சென்று பயிற்சி பெற்று, அங்கேயே தேர்வு எழுதி, தேர்ச்சி பெறும்போது, அவர்கள் அந்த மையத்தின் கணக்கில் சேர்க்கப்படுகின்றனர்.

அதாவது அவர்கள், டில்லி அல்லதுபெங்களூருவைச் சேர்ந்தவர்களாக கணக்கெடுக்கப்படுவதால், தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், தமிழக மாணவர்கள் என்ற, கணக்கில் வருவதில்லை. அதை முறையாக கணக்கெடுத்து, அவர்களும் தமிழக மாணவர்கள் என கணக்கிட்டால், தற்போதைய எண்ணிக்கை கூடுதலாகலாம். ஆனால், வெளி மாநிலங்களுக்குச் சென்று, தேர்வெழுதி தேர்ச்சி அடையும் தமிழக மாணவர்கள் குறித்த தரவுகள், நம்மிடம் முழுமையாக இல்லை. அந்த விபரம் முழுமையாக கிடைத்தால் தான், தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைகிறதாஎன்பது குறித்து, உறுதியாக கூற முடியும். இருந்தாலும், தமிழக மாணவர்கள், மற்ற மாணவர்களை விட கூடுதலாக உழைத்து, பயிற்சி எடுத்தால், அதிக எண்ணிக்கையில் தேர்வாக வாய்ப்புள்ளது

dinamalar