சீமான் Vs விடுதலைச் சிறுத்தைகள்: ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் குழந்தையா சீமான்? வி.சி.க. முன்வைக்கும் 3 குற்றச்சாட்டுகளின் பின்னணி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசுவின், அண்மைக்கால ட்விட்டர் பதிவுகளில் நாம் தமிழர் கட்சியின் மீதான விமர்சனம் வெளிப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆம் தேதி வன்னி அரசு வெளியிட்ட பதிவில், ` தேசிய இனங்கள் எழுச்சி பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவே மதவழிப்படுத்த பா.ஜ.க முனைகிறது. அதற்கு போலித் தமிழ்த்தேசியம் பேசுவோர் உதவுகிறார்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ”ஆரியர்கள் நம் நாட்டுக்கு வருவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சிறந்த நாகரிக வாழ்க்கையை மேற்கொண்டு, செம்மை நெறியில் ஒழுகி வந்த தமிழ்மக்களுக்கு இடைப்பட்ட காலத்தில் கொண்டு வந்து புகுத்தப்பட்ட இந்துமதம், எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல’ எனக் கூறி, ‘சீமான் வகையறாக்களுக்கு’ எனப் பதிவிட்டிருந்தார். கூடவே, 100 நாள் வேலைத் திட்டம் தொடர்பாக சீமான் கூறிய கருத்தை நிராகரிக்கும் வகையில் பல்வேறு காணொளிகளையும் வன்னி அரசு வெளியிட்டிருந்தார். இதற்கு நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளும் பதில் கொடுத்து வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ்ஸும் நாம் தமிழர் கட்சியும்

”சீமானுடன் அப்படியென்ன பிரச்னை?” என வன்னி அரசுவிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். “அவரது பேச்சுகள் அனைத்தும் தமிழ்த் தேசியத்துக்கு எதிராக உள்ளன. நாம் தமிழர் என்ற கட்சியைத் தொடங்கும்போது இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், கரு.பழனியப்பன் உள்ளிட்ட பலர் சீமானுடன் இருந்தனர். தற்போது அவர்கள் யாரும் இவருடன் இல்லை. அவருடன் அனைத்து மேடைகளிலும் நின்ற அமீர், அவரைவிட்டு விலகிவிட்டார். காரணம், `இஸ்லாமியர்கள் தமிழர்கள் இல்லை’ என்று சீமான் பேசிய பேச்சுதான்.

தொடக்கத்தில் கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன் ஆகியோருடன் பெரியாரிய மேடைகளில் அவர் இருந்தார். இப்போது அவர்களும் இவருடன் இல்லை. தமிழ்த்தேசிய தளத்தில் உள்ள பொழிலன், சுப.உதயகுமார் போன்றவர்களும் அவருடன் இல்லை. இதனைக் குறிப்பிடக் காரணம், ‘தமிழ்நாட்டில் நம்பிக்கையான அரசியலை முன்னெடுப்பார்’ என்ற அடிப்படையில்தான் சீமானுக்கு இவர்கள் ஆதரவு கொடுத்தனர். அவர் பேசும் அரசியல் என்பது இதற்கு முன்னர் நாங்களும் நெடுமாறன் போன்றவர்களும் பேசியவைதான்.

தனி நபர் என்ற அடிப்படையில் அவரோடு எங்களுக்கு எந்தவித முரண்பாடும் இல்லை. அவர் இயக்குநராக இருந்தபோது எனக்கும் நண்பர்தான். அவர் முன்னெடுக்கும் அரசியலுக்கும் எங்களுக்கும் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. சங்பரிவார் இயக்கங்களுக்கு துணை போகின்ற, ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு ஆள் பிடித்துவிடுகின்ற வேலையை நாம் தமிழர் கட்சி செய்கிறது என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது” என்கிறார்.

இந்துமயப்படுத்தும் வேலையா?

தொடர்ந்து பேசியவர், ” இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத் கூறும், ‘இந்து தமிழர்’ என்ற வார்த்தையை பெ.மணியரசனும் சீமானும் ஏற்றுக் கொள்கின்றனர். இதனை கருத்தியல்ரீதியாகப் பார்க்கிறோம். `தமிழ் இந்து’ எனக் கூறி மதத்துக்குள் மக்களைக் கொண்டு வரும் வேலையை இவர்கள் செய்கின்றனர். ஒருவர் இந்து என்பதை ஏற்றுக் கொண்டால், வருணாசிரமத்தையும் பெண் அடிமைத்தனத்தையும் சாதி அமைப்பு முறையையும் ஏற்றுக் கொண்டதாக அர்த்தம். இதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் தமிழ்நாட்டில் இந்துத்துவத்தை அவர்கள் கட்டமைக்கின்றனர்.

தமிழ்த்தேசியம் என்பது இந்திய தேசியத்திலிருந்து மாறுபட்டது. நான் `இந்து’ என பிரகடனப்படுத்துவதன் மூலம் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.கவை ஏற்றுக் கொண்டதாகத்தான் அர்த்தம். இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்திட்டத்தை பா.ஜ.க செயல்படுத்தத் துடிக்கிறது. அதனை செயல்படுத்துவதற்கு தேசிய இனங்களின் வளர்ச்சியும் எழுச்சியும் தடையாக உள்ளன. எனவே, அந்த தேசிய இனங்களை இந்துமயப்படுத்தும் வேலையை செய்கிறார்கள்.

உதாரணமாக, கர்நாடகாவில் ‘துளு நாடு’ கேட்டு கடுமையான போராட்டங்கள் நடந்தன. அம்மக்களை இந்துமயப்படுத்திவிட்டதால் தனி நாடு கோர முடியவில்லை. அசாம், நாகலாந்து, காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்றால், `நீங்கள் இந்தியாவில் இருந்து வந்திருக்கிறீர்களா?’ என்றுதான் கேட்பார்கள். இவ்வாறு தேசிய இனங்களின் வளர்ச்சி அதிகரிக்கும்போது இந்து நாட்டை உருவாக்க முடியாது. எனவே, தேசிய இனங்களை இந்துமயப்படுத்துவதற்கு தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க போன்ற கட்சிகளைப் போல நாம் தமிழர் கட்சியும் உள்ளது. இவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக செயல்படுகிறார்கள்” என்கிறார்.

வன்னி அரசுபா..நாம் தமிழர்.. என்ன ஒற்றுமை?

” தேர்தல் காலங்களில் மத்திய அரசை சீமான் கடுமையாக விமர்சிக்கத்தானே செய்கிறார்?” என்றோம். ” ஒரு படுகொலை நடந்தால் அதனை அனைவருமே கண்டிப்பார்கள். உ.பி சம்பவத்தை குஷ்புவும் கண்டிக்கிறார். நான் சொல்ல வருவது அடிப்படைக் கொள்கைகளை. அதில் இரண்டு விஷயங்களைப் பார்க்கிறேன். இந்து என ஒருவர் ஏற்றுக் கொண்டால் சாதி கட்டுமானத்தையும் இன்னொரு சாதியில் திருமணம் செய்யக் கூடாது என்பதையும் ஏற்றுக் கொண்டதாக அர்த்தம். அடுத்ததாக, தேசிய இனங்களின் அடையாளங்களை அழிப்பதற்கான வேலையை ஆர்.எஸ்.எஸ் செய்கிறது. இந்து என்பதை ஏற்றுக் கொண்டால், தமிழ்த் தேசியம் பேசுவதற்கான தகுதியை அவர்கள் இழந்துவிடுகிறார்கள். இந்தச் செயல்திட்டத்தை அம்பேத்கர், பெரியார் பார்வையில் நாங்கள் பார்க்கிறோம். ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் குழந்தையாக நாம் தமிழர் கட்சி உள்ளது. தமிழ்த்தேசியம் குறித்த எந்தப் பார்வையும் சீமானுக்கு இல்லை” என்கிறார்.

” இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளதா?” என்றோம். ”பா.ஜ.கவின் கே.டி.ராகவன் ஒரு சர்ச்சையில் சிக்கினார். அதனை சீமான் ஆதரித்துப் பேசினார். பொதுவாழ்க்கைக்கு வருகிறவர்கள், மற்றவர்களுக்கு ரோல்மாடலாக இருக்க வேண்டும். அரசியலுக்கு வரும் பெண்களை இவ்வாறு பயன்படுத்துவதை ஆதரிப்பது எந்தவகையில் சரியானது? 100 நாள் வேலைத் திட்டத்தை சீமானும் எதிர்க்கிறார், பா.ஜ.கவும் எதிர்க்கிறது. கழகங்கள் இல்லாத தமிழ்நாடு என பா.ஜ.கவும் சொல்கிறது, சீமானும் சொல்கிறார்.

இந்தியா முழுக்க மாநிலங்களில் வலுவாக உள்ள கட்சிகளை அழிப்பது பா.ஜ.கவின் நோக்கம். உதாரணமாக, பிகாரில் ராம்விலாஸ் பஸ்வான் கட்சியை நிதிஷ்குமாருடன் சேரவிடாமல் பிரித்துவிட்டனர். இன்று ராம்விலாஸ் பஸ்வான் கட்சியை இரண்டாக உடைத்துவிட்டனர். சமூகநீதிக் களத்தில் முக்கியமானவராக இருந்த நிதிஷ்குமார், `இதுதான் எனக்குக் கடைசி தேர்தல்’ எனக் கூறும் அளவுக்கு அந்தக் கட்சியையும் அழித்தனர். உ.பியில் சாதிரீதியாக மாயாவதியை பலவீனப்படுத்தினர்.

சீமான் நிரப்பப் போவதில்லை. ஆனால்…?

மாயாவதியின் வாக்குவங்கியே வால்மீகி சமுதாயம்தான். அந்த மக்களிடம் சென்ற நரேந்திர மோதி, ராமாயனத்தை எழுதிய சமுதாயம், இன்று புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் கூறி அவர்களின் வாக்கு வங்கியை வேட்டையாடினார். அதே வால்மீகி சமூகப் பெண் ஒருவர் ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டபோது, `தாக்கூர் சமுதாயத்தினர் இவ்வாறுதான் செய்வார்கள்’ எனப் பேசினர். ஒவ்வொரு மாநிலங்களிலும் மாநிலக் கட்சியின் வலிமையை குறைப்பது அவர்களின் இலக்காக உள்ளது.

வன்னி அரசுஅதன் ஒருபகுதியாக, அ.தி.மு.கவை அழித்து அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டே தி.மு.கவை எதிர்ப்பது, கழகங்கள் இல்லாத தமிழ்நாடு என்று சொல்லிக் கொண்டே ஒரு கட்சியோடு அவர்கள் கூட்டணி வைக்கின்றனர். இது ஓர் உக்தி. `இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ எனக் கூறி அ.தி.மு.கவை ஆதரித்த சீமான், தி.மு.கவை எதிர்த்தார். இரண்டு திராவிடக் கட்சிகளையும் அழிப்பதற்கு பா.ஜ.க எப்படி முயல்கிறதோ அதையே சீமானும் செய்கிறார்.

மாநிலக் கட்சிகளை அழித்தால் மட்டுமே பா.ஜ.க வளரும். இதன் அடிப்படையில் பா.ஜ.கவின் செயல்திட்டத்தை அவர் முன்னெடுக்கிறார். திராவிடக் கட்சிகளை ஒழித்துவிட்டால் அந்த இடத்தை சீமான் நிரப்பப் போவதில்லை. அந்தளவுக்கு அவரிடம் வலிமையில்லை. ஆனால், அவ்வாறு செய்வதன் மூலம் பா.ஜ.கவுக்கான வழியை திறந்துவிடும் வேலையை செய்கிறார்” என்கிறார்.

3 இலக்குகள் என்ன?

“ பெரியார் மீதான வெறுப்பை பா.ஜ.கவும் பேசுகிறது, ஆர்.எஸ்.எஸ்ஸும் பேசுகிறது. அதையேதான் சீமானும் பேசுகிறார். தமிழ்நாட்டில் அரை நூற்றாண்டு காலமாக, சமூக நீதியும் முற்போக்கும் பேசப்படுகிறது என்றால், அதற்கு பெரியார்தான் காரணம். அதனை உடைத்தால்தான் உள்ளே செல்ல முடியும் என பா.ஜ.க விரும்புகிறது. இந்துமயப்படுத்துவது, தேசிய இனங்களின் அடையாளத்தை அழிப்பது, மாநிலக் கட்சிகளை அழிப்பது என பா.ஜ.கவின் இந்த 3 நோக்கங்கள் நிறைவேறினால் இந்துமயப்படுத்துதல் எளிதாக நடக்கும்.

அதற்கு அரசியல்ரீதியாகவும் கொள்கைரீதியாகவும் நாம் தமிழர் கட்சி உடந்தையாக உள்ளது. தமிழ்த் தேசிய தளத்தில் புறக்கணிக்கக் கூடிய கட்சியாகவும் அக்கட்சி உள்ளது. தமிழ்த்தேசியம் பேசும் வி.சி.க உள்பட அனைத்துக் கட்சிகளோடு நாம் தமிழர் மோதலில் உள்ளது. இதன்மூலம் தமிழ்த்தேசியம் பேசும் குழுக்கள் வலிமையாக இருந்துவிடக் கூடாது என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். ஈழ விடுதலைப் போராட்டத்தில் கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக இயங்கும் கட்சிகளை அவதுறாகப் பேசுவதும் நடக்கிறது. இதனை முழுமையாக கூர்ந்து கவனித்தால் பா.ஜ.கவின் செல்லப் பிள்ளையாகவும் ஆர்.எஸ்.எஸ்ஸின் அடியாளாகவும் சீமான் இருக்கிறார் என்பது தெரியவரும்” என்கிறார் வன்னி அரசு.

திருமாவை விமர்சிக்கப் போவதில்லை

வி.சி.க முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். “ நாம் தமிழர் கட்சியைப் பற்றி வன்னி அரசு மட்டுமே விமர்சனம் செய்து பேசுகிறார். இந்த விவகாரத்தில் அவர் மட்டுமே தொடர்ச்சியான தாக்குதலை நடத்தி வருகிறார். இதுவரையில் நேரடியாக எந்த விமர்சனத்தையும் சீமான் மீது திருமாவளவன் முன்வைத்ததில்லை. எங்கள் தரப்பில் இருந்தும் வி.சி.க மீதோ, அக்கட்சியின் தலைவர் மீதோ எந்த விமர்சனமும் முன்வைக்கப்பட்டதில்லை. இனிமேலும் நாங்கள் விமர்சிக்கப் போவதில்லை” என்கிறார்.

சீமான்தொடர்ந்து பேசியவர், “ 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க அணியில் ராமதாஸ், வைகோ உள்ளிட்டவர்கள் இருந்தனர். அப்போது, பா.ஜ.க, தே.மு.தி.க, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளையும் மட்டும் எதிர்த்தோம். 2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மட்டும் எதிர்த்தோம். அவர்கள் போட்டியிட்ட 63 தொகுதிகளிலும் எதிர்த்தோம். ஈழ விடுதலை, மீத்தேன், அணுஉலை போராட்டம் என எந்த விவகாரத்திலும் நாங்கள் அவர்களோடு முரண்படவில்லை. மனு தர்மம் குறித்து தவறாகப் பேசியதாக திருமாவளவன் விமர்சிக்கப்பட்டபோது அவரை ஆதரித்த முதல் குரல் சீமானுடையது. அவரது அரசியல் கூட்டணி எங்களுக்கு முரணாக இருக்கலாம். சமூகத்தளத்தில் அவரது பங்கை மனதில் வைத்துத்தான் பார்க்கிறோம்” என்கிறோம்.

ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு நாங்கள்தான் முதல் எதிரி

”ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்திட்டத்தை நாம் தமிழர் முன்னெடுப்பதாகக் கூறுகிறார்களே?” என்றோம். “பா.ஜ.கவின் அஜெண்டா என்பது 2000 ஆம் ஆண்டுகளில் இருந்ததா? தி.மு.கவும் பா.ஜ.கவும் கூட்டணி வைப்பதாக இருந்தால், `கழகங்களை அழிக்க வேண்டும்’ என்ற அவர்களின் செயல்திட்டமும் மாறிவிடும். தமிழர்களாக ஒன்றிணைந்திருந்தால் இலங்கையில் பேரழிவு ஏற்பட்டிருக்காது என்ற படிப்பினையின் மூலம் நாங்கள் அரசியல் செய்கிறோம்.

இனியும் எங்கள் நோக்கம் மாறப் போவதில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒருவேளை பா.ஜ.க தோற்றுப் போனால், அவர்களால் எதையும் இங்கு அழிக்க முடியாது. அவர்களுக்கு தமிழ்நாட்டில் சொற்பமான எண்ணிக்கையில் மட்டுமே ஆதரவு உள்ளது. அவர்களுக்குத் திராவிடத்தை அழிக்கும் எண்ணம் எல்லாம் இல்லை.

மேலும், ‘தமிழ் இந்து’ என்ற வார்த்தையை மணியரசன் சொல்கிறார். அதற்கான விளக்கத்தையும் அவர் சொல்கிறார். அது அவருடைய விளக்கம். ‘வீரத்தமிழர் முன்னணி’ என்ற பண்பாட்டு இயக்கத்தைத் தொடங்கிய காலத்தில் இருந்து `இந்து’ என்ற வார்த்தையை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. திராவிடம் என்ற அடையாளத்தைப் போலவே ‘இந்து’ என்பதையும் நாங்கள் ஏற்கவில்லை. நாங்கள் சைவர்கள். சிவனையும் முருகனையும் வழிபட்டோம். அரசு கெஜட்டில் நாங்கள் இந்துவாக இருக்கிறோம். தமிழர்களுக்கென்று என்று ஒரு மதம் இருந்துள்ளது. அந்த மதத்தை நோக்கிச் செல்வதற்கான தேடலில் இருக்கிறோம். மணியரசனின் கருத்தை நாங்கள் ஏற்கவில்லை. ஆர்.எஸ்.எஸ் சிந்தாந்தத்திற்கு நாங்கள்தான் முழு முதல் எதிரி. வன்னி அரசுவுக்கு எங்கள் மீது என்ன கோபம் எனத் தெரியவில்லை” என்கிறார்.

சந்தேகங்கள் என்னென்ன?

”வி.சி.க, நாம் தமிழர் மோதலை எப்படிப் பார்ப்பது?” என மூத்த பத்திரிகையாளர் சிகாமணியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். “ திராவிடக் கட்சிகளை எதிர்ப்பது என்பதை முற்போக்கான ஒன்றாகப் பார்க்க முடியவில்லை. சீமான், மணியரசன் போன்றவர்கள் தி.மு.க எதிர்ப்பைத்தான் முன்வைக்கிறார்கள். அவர்கள் அ.தி.மு.கவுடன் சமரசத்துடன் செயல்படுகிறார்கள். இந்து என்ற வார்த்தையெல்லாம் நீண்ட காலத்துக்குப் பிறகுதான் தமிழ்நாட்டுக்குள் நுழைந்தது. அதற்கு முன்னால் சைவம், வைணவம் ஆகியவைதான் இருந்தன. அதற்கு முன்னர் இயற்கை வழிபாடு இருந்தது. இந்து தமிழர் என்ற வார்த்தையை பயன்படுத்துவதன் மூலம் இவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் நோக்கத்தை செயல்படுத்துகிறார்களோ என்ற சந்தேகம் உள்ளது” என்கிறார்.

மேலும், ” சீமானையும் மணியரசனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியாது. ஆனால், தி.மு.க எதிர்ப்பு விவகாரத்தில் இவர்கள் ஒரே தட்டில் வந்து நிற்கின்றனர். தமிழ் என்ற உணர்வை பெருமைக்காக செய்தால் பரவாயில்லை. பிற மொழி பேசுகிறவர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் என்பது இங்கு எடுபட்டதில்லை. தமிழ்நாட்டில் உணர்ச்சிகளைத் தூண்டக் கூடிய அரசியலுக்கு தொடக்கத்தில் இடமிருக்கும். நாளடைவில் அதன் முக்கியத்துவம் குறைந்துவிடும். 100 நாள் வேலைத்திட்டம் என்பது அடித்தட்டு மக்களின் நெருக்கடிகளைப் போக்க உதவுகிறது. அதற்கு எதிராக சீமான் பேசுவது என்பது சரியானதல்ல. சமூக நலன் சார்ந்த விஷயங்களில் இவர்கள் பிற்போக்காக இருப்பதையே காட்டுகிறது” என்கிறார்.

(நன்றி BBC TAMIL)