கிழக்கு லடாக் பகுதியில் உள்ள இந்திய – சீன எல்லையில் பதற்றத்தை தணிப்பது தொடர்பாக இருதரப்பு ராணுவமும் ஞாயிறன்று நடத்திய 13வது சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
இந்தியா மற்றும் சீன எல்லையாக இருக்கும் மெய்யான கட்டுப்பாட்டு கோட்டில் (Line of Actual Control) உரசல் உண்டாக வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்து படைகளை விலக்குவது தொடர்பாக இந்தியாவும் சீனாவும் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
டெப்சாங் சமவெளிகள், தெம்சோக் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பிரச்னைகள் தொடர்ந்து நீடித்தாலும் பேட்ரோலிங் பாய்ன்ட் -15 எனப்படும் இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ரோந்துப் பகுதியில் இருந்து இரண்டு நாடுகளும் தங்களது படைகளை விலக்கிக் கொள்வது குறித்து ஞாயிறன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை சுஷூல் – மோல்டோ எல்லைப் பகுதியில் நடந்தது.
இந்த பேச்சுவார்த்தையின்போது லடாக் பகுதியில் உள்ள மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு பொறுப்பாக இருக்கும் இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜி.கே மேனன் இந்திய ராணுவ குழுவுக்கு தலைமை வகித்தார்.
சீன ராணுவத்தின் ஷின்ஜியாங் ராணுவ மாவட்டத்தின் கமாண்டரான மேஜர் ஜெனரல் லியூ லின் சீன குழுக்கு தலைமை வகித்தார்.
அச்சுறுத்தும் குளிர்
இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்து உள்ளதால் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இருவருமே தற்போது கிழக்கு லடாக் பகுதியில் மேலும் சில மாதங்களைக் கழிக்க வேண்டி இருக்கும்.
இன்னும் சில நாட்களில் குளிர்காலம் தொடங்க உள்ளதால் அது அவர்களுக்கு இன்னும் கடுமையான சவாலாக இருக்கும்.
மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்து இந்திய பகுதியில் உள்ள பேட்ரோலிங் பாய்ண்ட்-15இல் சீன ராணுவத்தின் துருப்புகள் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டுகிறது.
டெப்சாங் சமவெளிப் பகுதியில் இருக்கும் ஐந்து பேட்ரோலிங் பாய்ண்ட் பகுதிகளை தாங்கள் அணுக சீன துருப்புகள் தடையாக உள்ளதாகவும் இந்திய ராணுவம் குற்றம்சாட்டுகிறது.
தெளலத் பேக் ஒல்டி ராணுவ தளத்துக்கு அருகில் டெப்சாங் சமவெளிஇருப்பதால் இது இந்தியாவுக்கு மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருக்கிறது.
ஜூன் 2020இல் இந்திய – சீன படைகள் கிழக்கு லடாக்கில் இருக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் மோதலில் ஈடுபட்ட பின்னர் இரு தரப்பு ராணுவங்களும் மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் படைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன.
ராணுவ தளவாடங்களின் எண்ணிக்கை இங்கு அதிகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றை அணுகுவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தி வருகின்றன.
மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு என்று இந்திய – சீன எல்லை அழைக்கப்பட்டாலும், இந்தக் கோட்டுக்கென சரியான வரையறை இல்லை. எல்லையில் அமைந்துள்ள சில பகுதிகளை இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடுகின்றன. இதனால் ஒரே நேரத்தில், ஒரே பகுதியில் இரு நாட்டு ராணுவங்களும் ரோந்து செல்லும் நிகழ்வுகளும் நடந்துள்ளன.
இந்திய ராணுவம் சொல்வதென்ன?
கிழக்கு லடாக் பகுதியில் உள்ள மெய்யான கட்டுப்பாட்டு கோடு மற்றும் பிற பகுதிகளில் இருக்கும் இரு தரப்பு பிரச்னைகளுக்கு தீர்வு காண இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்திய ராணுவம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “இருதரப்பும் ஒப்புக்கொண்டபடி நடக்காமல் ஜீனர் தாமாகவே எல்லைப் பகுதியில் இருக்கும் நிலவரத்தை மாற்ற முயற்சித்ததே மெய்யான கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள பதற்றத்துக்குக் காரணம்,” என குறிப்பிட்டுள்ளது.
எனவே மெய்யான கட்டுப்பாட்டு கோட்டின் மேற்குப் பகுதியில் மீண்டும் அமைதியை நிலைநாட்ட போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சீன தரப்பிடம் வலியுறுத்தப்பட்டது என இந்திய ராணுவத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“(கிழக்கு லடாக் தவிர) பிற பகுதிகளில் இரு தரப்பு பிரச்னைகளை கூடியவிரைவில் தீர்க்க வேண்டும் என்று துஷான்பெவில் சந்தித்த இருநாட்டு ராணுவ அமைச்சர்களும் ஒப்புக்கொண்ட போது வழங்கப்பட்ட வழிமுறைகளின்படி இது நிகழ வேண்டும்,” என்று இந்திய ராணுவம் தெரிவிக்கிறது.
“பிற பகுதிகளில் இருக்கும் பிரச்னைகளை முடிப்பதற்கான தீர்வு காணவும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காகவும் இந்திய தரப்பில் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. ஆனால் சீன தரப்பு அதை ஒப்புக்கொள்ளவில்லை; முன்னோக்கிச் செல்வதற்கான முன்மொழிவுகள் எதையும் வழங்கவில்லை. இதனால் பிற பகுதிகளில் இருக்கும் பிரச்னைகளுக்கு எந்தத் தீர்வும் காணப்படவில்லை,” என்று இந்திய ராணுவத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன பாதுகாப்பு அமைச்சகம் சொல்வதென்ன?
சீன பாதுகாப்பு அமைச்சகம் திங்களன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிக்கவும் சுலபமான சூழலை கொண்டு வரவும் சீன தரப்பில் பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. இருதரப்பு ராணுவத்தில் ஒட்டுமொத்த நலன்களையும் தொடர்வதற்கான சீனாவின் உண்மையான முயற்சிகள் அதில் வெளிப்பட்டன. ஆனால் இந்திய தரப்பு ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் சாத்தியப்படுத்த முடியாத கோரிக்கைகளை முன் வைத்தது,” என்று சீனா தெரிவிக்கிறது.
இப்போதைய சூழலைத் தவறாக மதிப்பிடாமல், இந்திய சீன எல்லைப் பகுதிகளில் கடினமான முயற்சிகளுக்குப் பின் கொண்டுவரப்பட்ட நிலையை இந்தியா தொடரும் என்று தாங்கள் நம்புவதாகவும் சீன பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
(நன்றி BBC TAMIL)