ஏர் இந்தியா விமான நிறுவனம் தனியார்மயமாக்கப்பட்டது உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகளை குறிப்பிட்டு பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி இந்தியா இதுவரை உறுதியான அரசாங்கத்தை கண்டதில்லை என்று கூறியுள்ளார்.இந்தியன் ஸ்பேஸ் அசோசியேசன் (ISpA) எனும் விண்வெளி துறைக்கான தனியார் நிறுவனங்களில் தொழில் அமைப்பை நேற்று காணொளிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்துப் பேசிய நரேந்திர மோதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பம் சார்ந்த தொழிலில் இருக்கும் கார்ப்பரேட் நிறுவங்களின் கூட்டமைப்பாக இந்தியன் ஸ்பேஸ் அசோசியேசன் உருவாக்கப்பட்டுள்ளது.
நரேந்திர மோதி உரையின் 10 முக்கியப் புள்ளிகளைப் பார்ப்போம்.
- சுரங்கம், நிலக்கரி, பாதுகாப்பு, விண்வெளி ஆகிய துறைகள் தனியார் முதலீட்டாளர்களுக்கும் திறந்துவிடப்பட்டுள்ளது. அரசின் இருப்பு தேவையில்லாத பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு திறந்துவிடும் கொள்கை முடிவில் தமது அரசு தெளிவாக இருக்கிறது என்று நரேந்திர மோதி பேசினார்.
- பல்வேறு துறைகளைத் தனியார் முதலீட்டுக்குத் திறந்து விடுவது குறித்து பேசிய நரேந்திர மோதி, தேசிய நலன் மற்றும் தொழில்துறை சார்ந்த வெவ்வேறு பங்காளர்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்ட ஒழுங்காற்று நடவடிக்கைக்கான சூழலை தமது அரசு எடுத்துள்ளது என்று கூறினார்.
- இழப்பில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்க வேண்டும் என்று இந்திய அரசு நீண்ட நாட்களாக எடுத்த முயற்சி வெற்றி அடைந்துள்ளது குறித்துப் பேசிய நரேந்திர மோதி, இது தமது அரசின் அர்ப்பணிப்பு மற்றும் தீவிரத்தைக் காட்டுவதாகத் குறிப்பிட்டுள்ளார்.
- இந்தியாவின் திறன்கள் உலகின் வேறு எந்த நாட்டையும் விட சிறிதளவும் குறையவில்லை எனும் நம்பிக்கையே இருபத்தியோராம் நூற்றாண்டுக்கான சீர்திருத்தங்களுக்கு உத்வேகமாக இருக்கிறது என்று நரேந்திர மோதி குறிப்பிட்டார்.
- விண்வெளித் துறை என்பது ஒரு காலத்தில் அரசு துறையாக மட்டுமே கருதப்பட்டு வந்தது. ஆனால் அந்த எண்ணத்தை மாற்றுவதற்காக தமது அரசாங்கம் செயல்பட்டுள்ளது என்று நரேந்திர மோதி பேசினார்.
- அதீதமான அளவில் அறிவியல் புதுமைகள் நிகழ்த்தப்பட வேண்டுமானால் அரசு அதை இயலச் செய்யும் பங்கை ஆற்ற வேண்டுமே ஒழிய கையாள்பவராக இருக்கக் கூடாது. அதனால்தான் பாதுகாப்பு முதல் விண்வெளி துறை வரை என தமது நிபுணத்துவம் அனைத்தையும் அரசு பகிர்ந்து கொள்கிறது என்று நரேந்திர மோதி குறிப்பிட்டார்.
- தனியார் துறையின் புதுமைகளை ஊக்குவித்தல், அரசு இயலச் செய்பவராகப் பங்காற்றுதல், இளைஞர்களை வருங்காலத்திற்காக உருவாக்குதல், சாமானிய மக்களின் வளர்ச்சிக்காக உதவுதல் ஆகிய நான்கு தூண்களின் அடிப்படையிலேயே விண்வெளித் துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று நரேந்திர மோதி தெரிவித்தார்.
- விண்வெளியை யார் ஆள்வது என்ற போட்டி இருபதாம் நூற்றாண்டில் பிரிவை உண்டாக்கியது, ஆனால் இருபத்தி ஓராம் நூற்றாண்டில் விண்வெளித் துறையை உலகை ஒருங்கிணைக்கும் துறையாக மாற்றுவதில் இந்தியா முக்கியப் பங்காற்றும் என்று நரேந்திர மோதி குறிப்பிட்டார்.
- இணையதள இணைப்பு செயற்கைக்கோள் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றுக்கு அடிப்படையாக இருக்கும் விண்வெளித்துறை இந்தியாவில் 130 கோடி மக்களின் வளர்ச்சிக்கும் ஒரு முக்கியமான வழியாக உள்ளது என்று நரேந்திர மோதி குறிப்பிட்டார்.
- தொழில்நுட்ப வளர்ச்சியை அனைவருக்கும் சென்று சேர்ப்பதன் முக்கியத்துவம் குறித்துப் பேசிய நரேந்திர மோதி வறியவர்களிலும் வறிய மக்கள் இணையதளத்தை பயன்படுத்த முடியும் என்ற நிலையை இந்தியாவில் உருவாக்கியதால்தான், இந்தியா உலகின் முன்னணி டிஜிட்டல் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது என்று கூறினார் நரேந்திர மோதி.
- நரேந்திர மோதி இந்த உரையாற்றிய நேற்றைய தினம் சர்வதேச பெண் குழந்தைகள் நாளாகவும் அனுசரிக்கப்பட்டது. வரும் காலங்களில் பெண்கள் விண்வெளி துறையில் முக்கிய பங்காற்றுவார்கள் என்றும், 2047ஆம் ஆண்டு இந்தியா தனது 100ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் பொழுது இந்தியாவின் பயணத்தை தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றுபவர்களாக பெண்கள் இருப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
(நன்றி BBC TAMIL)