சி. விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – முழு பின்னணி

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய 43 இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ”அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோர் மீதான வழக்குகளை விட இந்த வழக்கு சற்று மாறுபட்டது. இதில் விஜயபாஸ்கருக்கு சிக்கல் ஏற்படவே வாய்ப்பு அதிகம்,’ என்கிறார் `அறப்போர்’ இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேஷ்.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றை இலக்காக வைத்து இன்று காலை முதலே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இது தவிர, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, புதுக்கோட்டை, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் விஜயபாஸ்கருக்குத் தொடர்புடைய நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று (17 ஆம் தேதி) லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கரோடு சேர்த்து அவரது மனைவி ரம்யாவின் பெயரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.

ரூ.57 கோடியாக மாறிய 6 கோடி

லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை குறித்து, `அறப்போர்’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ‘‘வருமானத்துக்கு அதிகமாக விஜயபாஸ்கரும் அவரின் மனைவி ரம்யாவும் சொத்துக் குவித்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 2016 முதல் 2021 வரையில் சுகாதாரத்துறை அமைச்சராக அவர் இருந்த காலகட்டத்தில் இந்த சொத்துகளை குவித்ததாக வழக்கு பதிவாகியுள்ளது. இதில், 2016 ஆம் ஆண்டு 6 கோடி ரூபாய்க்கான சொத்துகளை அவர் வைத்திருந்ததாகவும் அந்தச் சொத்துகள் 57 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் எஃப்.ஐ.ஆரில் சொல்லப்பட்டுள்ளது,” என்கிறார்.

மேலும், ‘‘கடந்த 5 ஆண்டுகளில் 51 கோடி ரூபாய்க்கான சொத்துகளை சி.விஜயபாஸ்கர் சேர்த்துள்ளார். அதேநேரம், வருமான வரித்துறையில் தனக்கு 58 கோடி ரூபாய் வருமானம் வந்ததாக கணக்கு தாக்கல் செய்துள்ளார். அதேநேரம், தனக்கு 34 கோடி ரூபாய்க்கு செலவினங்கள் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அப்படியானால், செலவினங்கள் போக நிகர வருமானம் என்பது வெறும் 24 கோடி ரூபாய்தான் இருந்துள்ளது. இதனை வைத்துக் கொண்டு அவர் எப்படி 51 கோடி ரூபாய்க்கு சொத்துகளை வாங்கினார் என்பதுதான் இந்த வழக்கின் சாராம்சம். இந்த 27 கோடி ரூபாய் வித்தியாசம் காரணமாகத்தான் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது,” என்கிறார்.

சென்னை, காஞ்சிபுரம் சொத்துகள்விஜயபாஸ்கர் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

‘‘ராசி புளூ மெட்டல்ஸ், ஸ்ரீவாரி ஸ்டோன்ஸ் என விஜயபாஸ்கருக்குத் தொடர்புடைய பல நிறுவனங்கள் கணக்கு காட்டப்பட்டுள்ளன. இதில் ஒரு சில நிறுவனங்களில் அவர் பங்குதாரராக இருக்கிறார். சில நிறுவனங்களில் முதலீடு மட்டும் செய்துள்ளார். அவர் மனைவியும் வி.பி.எண்டர்பிரைசஸ் உள்பட சில நிறுவனங்களில் பங்குதாரராக இருந்துள்ளதாகச் சொல்லப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 7 டிப்பர் லாரிகள், பி.எம்.டபுள்யூ கார், ஜே.சி.பி, மிக்ஸர் வாகனம் என பலவகையான வாகனங்களை விஜயபாஸ்கர் வாங்கியுள்ளார். காஞ்சிபுரத்தில் 4 கோடி ரூபாய்க்கு விவசாய நிலம் ஒன்றையும் சென்னையில் பகீரதி அம்மன் சாலையில் 14 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கியுள்ளதும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது,” என்றார் ஜெயராம்,

தொடர்ந்து பேசுகையில், ‘‘அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான மற்ற வழக்குகளைவிட விஜயபாஸ்கர் மீதான வழக்கு சற்று மாறுபட்டது. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, அதிகமாக சொத்து சேர்த்தாலும் தனது வருமானத்தைக் குறைவாகக் காண்பித்திருந்தார். ஆனால், 58 கோடி ரூபாய்க்கு விஜயபாஸ்கர் வருமானத்தையும் காட்டியுள்ளார். முழுநேர அமைச்சராக இருந்தவருக்கு இவ்வளவு கோடிகள் எப்படி வந்தன? பத்து ஆண்டுகளுக்கு முன்பு இப்படியொரு வருமானம் அவருக்கு வரவில்லை.

விஜயபாஸ்கர் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகடந்த சில ஆண்டுகளாக வருமான வரித்துறையில் ஒவ்வோர் ஆண்டும் 10 முதல் 15 கோடி ரூபாய்க்கான வருமானக் கணக்கை அவர் தாக்கல் செய்துள்ளார். அந்தத் தொழில் சரியாக செய்யப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். மேலும், இவர் மீதான வழக்கு ஒன்றில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அவரது நிலத்தில் சட்டவிரோதமாக பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டதைக் கண்டுபிடித்தனர். சட்டவிரோத குவாரிகள் நடந்ததை ஏரியல் சர்வே மூலம் உறுதி செய்தனர். இதன்மூலம்தான் வருமானம் ஈட்டப்பட்டதா என்பதையும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும்” என்கிறார்.

முறைகேடுகளை மறைக்கவே ரெய்டு

விஜயபாஸ்கர் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைமுன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் நடந்து வரும் ரெய்டு குறித்து அ.தி.மு.கவின் தேர்தல் பிரிவு இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான

இன்பதுரையிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ‘‘தி.மு.க அமைச்சர்கள் 18 பேர் மீதான ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் தினசரி நடந்து கொண்டிருக்கிறது. தங்கள் மீதான தவறுகளை மறைப்பதற்காக அடுத்தவர் மீது புகார்களை வாரியிறைக்கின்றனர். உள்ளாட்சித் தேர்தலில் அவர்கள் செய்த முறைகேடுகளை மக்கள் மனதில் இருந்து மறைப்பதற்காக இந்த ரெய்டு நடத்தப்படுகிறது. இதனை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம்” என்கிறார்.

‘‘ விஜயபாஸ்கரின் வருமானம் உயர்ந்துள்ளதை எஃப்.ஐ.ஆரில் விரிவாக சுட்டிக் காட்டியுள்ளனரே?” என்றோம். ‘‘ இதில் உள்ள நுட்பங்கள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு வரும்போது எடுத்துரைப்போம். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், அ.தி.மு.கவின் பொன்விழா கொண்டாட்டத்துக்காக அ.தி.மு.க தொண்டர்கள் எழுச்சியோடு திரண்டிருப்பதை தி.மு.க தலைமை அதிர்ச்சியோடு கவனிக்கிறது. இதனை மக்கள் பார்வையில் இருந்து மறைக்க நினைக்கின்றனர். அதற்காகவே இப்படியொரு ரெய்டு நடத்தப்படுகிறது,” என்கிறார்.

ஆர்.எஸ்.பாரதியின் பதில் என்ன?

அ.தி.மு.கவின் குற்றச்சாட்டு தொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ‘‘சட்டமன்ற தேர்தலின்போது, `ஊழல் செய்த அ.தி.மு.க அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என தி.மு.க தலைவர் வாக்குறுதி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதியை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார்.

உள்ளாட்சித் தேர்தலின்போது இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டிருந்தால், `தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம்’ என்பதற்காக ரெய்டு நடத்துகின்றனர் எனப் புகார் கூறியிருப்பார்கள். அனைத்தும் சட்டப்படிதான் நடந்து கொண்டிருக்கிறது. கை புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. ஆட்சியில் இருந்தபோது அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள்,” என்கிறார்.

(நன்றி BBC TAMIL)