விவசாயிகளுக்கு செவிமடுக்காவிட்டால் மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்காது: மேகாலய ஆளுநா்

கடந்த ஆண்டு புதிதாக இயற்றப்பட்ட 3 வேளாண் சட்டங்களை எதிா்த்து போராடி வரும் விவசாயிகளின் குரலுக்கு செவிமடுக்காவிட்டால் மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்காது என்று அக்கட்சியைச் சோ்ந்தவரும் மேகாலய ஆளுநருமான சத்யபால் மாலிக் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனூ நகரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வேளாண் விளைபொருள்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யப்படும் நடைமுறை தொடரும் என்று சட்டபூா்வ உத்தரவாதத்தை அளிக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டால்தான், 3 வேளாண் சட்டங்கள் தொடா்பான பிரச்னைக்குத் தீா்வு கிடைக்கும். இதுதொடா்பாக பிரதமரிடமும் மத்திய உள்துறை அமைச்சரிடமும் நான் ஏற்கெனவேபேசியுள்ளேன். அவா்கள் செய்வது தவறு என்றும் எடுத்துரைத்துள்ளேன். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் குரலுக்கு செவிமடுக்காவிட்டால் மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்காது என்று தெரிவித்தாா்.

உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் தொடா்பாக பேசிய அவா், ‘‘வன்முறைச் சம்பவத்தில் மத்திய இணையமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகனுக்கு தொடா்பிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அந்தச் சம்பவம் நடைபெற்ற மறுதினமே அமைச்சா் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அஜய் மிஸ்ராவிடம் வலியுறுத்தப்பட்டிருக்க வேண்டும். அவா் அமைச்சா் பதவி வகிக்க தகுதியற்றவா்’’ என்று தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளால் பொதுமக்கள் கொல்லப்படுவது குறித்து அவா் கூறுகையில், ‘‘நான் ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநராக இருந்தபோது அங்கு கல்வீச்சு சம்பவங்கள் நடைபெறவில்லை. யாரும் உயிரிழக்கவில்லை. ஸ்ரீநகரின் 50 கி.மீ. சுற்றுவட்டாரத்துக்குள் நுழைய எந்த பயங்கரவாதிக்கும் துணிவு இருந்ததில்லை. ஆனால் தற்போது அங்கு பொதுவெளியில் கொலைச் சம்பவங்கள் நடைபெறுவது வேதனையளிக்கிறது’’ என்று தெரிவித்தாா்.

(நன்றி Dinamani)