இலங்கையில் சடலமாக மீட்கப்பட்ட தமிழக மீனவர் – திருமணமாகி 40 நாட்களே ஆனவர்

இலங்கை கடல் பகுதியில் படகு கவிழ்ந்த சம்பவத்தில் மூழ்கிய தமிழக மீனவர் ராஜ்கிரணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அவருக்கு திருமணமாகி 40 நாட்களே ஆகிறது. இலங்கை கடல் பகுதியில் தமிழக மீனவர்களுக்கு என்ன நடந்தது?

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து நேற்று மீன் பிடிக்க சென்ற ராஜேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகு திங்கட்கிழமை இரவு இலங்கை கடல் பகுதியில் மூழ்கியது. இதில் படகில் இருந்த இரண்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டனர். மேலும் மூன்றாவது மீனவரான ராஜ்கிரண் கடலில் மூழ்கியபோதும், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இத்தகைய சூழலில் அங்குள்ள சமீபத்திய நிலவரத்தை தமிழ்நாட்டில் இருந்தும் இலங்கையில் இருந்தும் பிபிசி தமிழுக்காக செய்திகளை வழங்கும் நிருபர்கள் பிரபுராவ் ஆனந்தன், ரஞ்சன் அருண் பிரசாத் விசாரித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து திங்கள்கிழமை காலையில் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று 118 விசைப்படகுகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

இதில் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகில் ராஜ்கிரன், சுகந்தன், சேவியர் ஆகிய மூன்று மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

பிடிபட்ட தமிழக மீனவர்கள்

இவர்கள் இலங்கை கோவளம் கடற்பகுதியில் திங்கள்கிழமை இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. .அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்களை கைது செய்ய முயன்றனர்.

இதில் தமிழக மீன்பிடி விசைப்படகு இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் மீது மோதியதில் மீன்பிடி விசைப்படகு நடுக்கடலில் முழ்கியதாக அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் கூறுகின்றனர்.

இதையடுத்து கடலில் தத்தளித்த சுகந்தன், சேவியர் ஆகிய இருவரை இலங்கை கடற்படையினர் மீட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று முதலுதவி அளித்தனர். மீனவர்கள்; இருவருக்கும் உடலில் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் தொடர்ந்து சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டதாகவும் கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திருமணமாகி 40 நாட்களே ஆனவர்

தமிழக மீனவர்இதற்கிடையே, நடுக்கடலில் மாயமான மீனவர் ராஜ்கிரணை இலங்கை கடற்படையைச் சேர்ந்த ‘ஸ்கூபா டைவர்கள்’ கடலுக்கு அடியில் சென்று தொடர்ந்து தேடினர். ராஜ்கிரணுக்கு திருமணமாகி 40 நாட்களே ஆகின்றன.

கடந்த செவ்வாய்கிழமை காலையில் மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய இலங்கை ஃபைபர் படகு மீனவர் ஒருவர் கடலில் சட்டை ஒன்று மிதப்பதாக இலங்கை கடற்படையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து இலங்கை கடற்படை வீரர்கள் அந்த பகுதியில் தேடும் பணியை மேற்கொண்டனர். பின் முழ்கிய படகை கடற்படையினர் கடலில் இருந்து மீட்டு அதில் ராஜ்கிரண் உள்ளாரா என தேடினர். ஆனால், அவர் அதற்குள் இல்லை.

இலங்கை கடற்படை மீது குற்றச்சாட்டு

இலங்கை கடற்படையிடம் உள்ள மீனவர் சுகந்தன்இந்த சம்பவம் குறித்து விசைப்படகு உரிமையாளர் ராஜேஷ்குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், திங்கள்கிழமை காலை 3 மீனவர்ளுடன் எனது படகு மீன்பிடிக்க கடலுக்குள் சென்றது. இரவு 9 மணி அளவில் ராமேஸ்வரம் மீனவ சங்க தலைவர் கோட்டைப்பட்டிணம் மீன்துறை உதவி இயக்குநரிடம் எனது படகு நடுக்கடலில் இலங்கை கடற்படையினரால் மூழ்கடிக்கபட்டதாக தெரிவித்துள்ளார். பின்னர் மீன் வளத்துறை அதிகாரிகள் வாயிலாக எனக்கு தகவல் கிடைத்தது,” என்றார்.

உடனடியாக நான் எனது படகில் சென்றவர்களை தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால், முடியவில்லை. பின் என் படகுடன் மீன் பிடிக்க சென்ற சக மீனவர்களிடம் கேட்ட போது, கோடியாக்கரைக்கு வடக்கே 12 கடல் மைல் தூரத்தில் இந்திய கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் எனது படகையும் அதில் இருந்த 3 மீனவர்களையும் கைது செய்து இலங்கை கடற்பகுதிக்கு அழைத்துச் சென்றதாக தெரிவித்தனர்.

தமிழக கடற்பரப்பு மிகவும் குறுகிய கடற்பரப்பு. இங்கு கடல் வளம் மிகவும் குறைவாக உள்ளது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் டீசல் விலை உயர்வால் போதிய மீன் கிடைப்பதில்லை. இதனால் இந்திய – இலங்கை சர்வதேச கடல் எல்லைக்கு அருகாமையில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்கின்றனர்.

என்னுடைய படகும் நேற்று இப்படித்தான் சர்வதேச கடல் எல்லைக்கு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அதை இழுத்துச் சென்று எனது மீன்பிடி படகில் இருந்த மீனவர்களை சித்ரவதை செய்திருக்க வேண்டும். ராஜ்கிரனை அவர்கள் கொலைகூட செய்திருக்கலாம் என்றார் ராஜேஷ்.

நம்பிக்கையுடன் காத்திருக்கும் மனைவிஇலங்கை கடற்படையிடம் பிடிபட்டுள்ள

“ராஜ்கிரணை இலங்கை கடற்படை திட்டமிட்டே கொலை செய்து எனது படகை நடுக்கடலில் மூழ்கடித்துள்ளனர். இது மிகவும் கண்டனத்திற்குரியது. ராஜ்கிரனுக்கு திருமணமாகி 40 நாட்கள் மட்டுமே ஆகின்றன. அவரது மனைவி செய்வதறியாது மன வேதனையுடன் ராஜ்கிரண் திரும்பி வருவார் என கண்ணீருடன் காத்திருக்கிறார்,” என்றார் ராஜேஷ்.

“இலங்கை மீனவர்கள் எனது படகை மீட்க வேண்டும். அங்கு பிடிபட்டுள்ள இரண்டு மீனவர்களை மீட்க இந்திய அரசும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று ராஜேஷ் கேட்டுக் கொண்டார்.

“எனது விசைப்படகு புதிய படகு. அதை நம்பி நான் மற்றும் இந்த மூன்று குடும்பங்களும் உள்ளோம். தற்போது இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கையால் நாங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து நிற்கிறோம். தமிழக மீன்வளத் துறை புதிய படகு வாங்க நிதி உதவி செய்ய வேண்டும்,” என்றும் ராஜேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

நடுக்கடலில் என்ன நடந்தது?

திங்கள்கிழமை இரவு நடுக்கடலில் என்ன நடந்தது என்ன என்பது குறித்து இலங்கை கடற்படையின் ஊடக பேச்சாளர் கேப்டன் இந்திக்க டி சில்வாவிடம் இலங்கையில் உள்ள செய்தியாளர் ரஞ்சன் அருண்பிரசாத் கேட்டார்.

இலங்கை கடற்படைஅப்போது, “திங்கள்கிழமை இரவு இலங்கை கடல்; பகுதியான கோவளம் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த பகுதியில் இந்திய படகுகள் சில இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்து கொண்டிருந்தது,” என்று கூறினார்.

மேலும், இலங்கை கடற்படை வீரர்கள் இந்திய மீனவர்களை கைது செய்ய முற்பட்டனர். கைது நடவடிக்கைக்கு பயந்து இந்திய மீன்பிடி விசைப்படகுகள் நாளா புறமும் சிதறி ஓடின. அதில் கடல் சீற்றம் காரணமாக இந்திய மீன்பிடி படகு இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மீது மோதியது. இதனால் இந்திய விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியது.

உடனடியாக கடலில் மூழ்கிய மீனவர்களை மீட்கும் முயற்சியில் இலங்கை கடற்படை வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது இரண்டு மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்,” என்று இந்திக்க டி சில்வா கூறினார்.

‘இலங்கை கடற்படை எந்த சந்தர்ப்பத்திலும் இந்திய படகுகள் மீது மோதாது, அப்படி மோதுவதற்கு எங்களுக்கு விருப்பமும் இல்லை,” என்றும் இலங்கை கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

(நன்றி BBC TAMIL)