தமிழ்நாட்டில் நடந்து முடிந்த ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தமிழக ஆளுநர் ரவியை சந்தித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தலைவர்கள் இன்று புகார் மனுவை அளித்துள்ளனர்.
ஆனால், அது தொடர்பான எந்த தாக்கமுமின்றி, ஊரக உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெறும் முனைப்புடன் திமுக தயாராகி வருகிறது.
`தேர்தல் தள்ளிப் போனாலோ, திமுக மீது குற்றச்சாட்டுகள் அணிவகுத்தாலோ நகர்ப்புற உள்ளாட்சியில் ஆளும்கட்சிக்கு பாதிப்பு ஏற்படலாம். ஆனால், அதிமுகவில் நிலவும் குழப்பங்கள் காரணமாக அவர்கள் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை’ என்கிறார் மூத்த பத்திரிகையாளர் சிகாமணி. தி.மு.கவின் வெற்றி தொடருமா?
தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 93 சதவிகித வெற்றியை திமுக அணி பெற்றது. காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க ஆகிய கட்சிகளுக்கும் குறிப்பிடத்தக்க இடங்களில் வெற்றி பெற்றன. சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக, மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் படுதோல்வியை சந்தித்தது. அ.தி.மு.க அணியில் இருந்து விலகிய பா.ம.கவுக்கும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எப்போது?
ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றி என்பது ஆட்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் என தி.மு.கவினர் கொண்டாடி வருகின்றனர். உள்ளாட்சியில் முறைகேடுகளை அரங்கேற்றியே தி.மு.க வெற்றி பெற்றது என அ.தி.மு.க நிர்வாகிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். இதன் அடுத்தகட்டமாக, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் தி.மு.க ஈடுபட்டு வருகிறது. காரணம், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி வரக் கூடிய நான்கு மாதங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் மாநில தேர்தல் ஆணையம் உள்ளது.
இதுதொடர்பாக, திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, ` மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்துமாறு முதல்வர் தெரிவித்துள்ளார். அதற்கான ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கிவிட்டன. இதற்காக மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. மாநில தேர்தல் ஆணையம் சொல்லக் கூடிய தேதியில் தேர்தல் நடைபெறும்” என்றார்.
தொடர்ந்து பேசிய கே.என்.நேரு, “ ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொண்டதால்தான் ஒரு ஓட்டு, நான்கு ஓட்டுகள் வித்தியாசத்தில்கூட தி.மு.க வேட்பாளர்கள் தோற்றனர். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் உள்ளதுபோல அல்லாமல் தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது” என்றார்.
கமலின் நம்பிக்கை
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆயத்தப் பணிகளில் அ.தி.மு.க உள்பட அனைத்துக் கட்சிகளும் தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டன. இதற்காக வேட்பாளர்கள் தேர்வில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. பொதுவாக, கிராமப்புறங்களில் அ.தி.மு.கவுக்கு அதிக செல்வாக்கு எனக் கூறப்பட்டாலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அந்தப் பிம்பம் உடைந்துவிட்டதால், நகர்ப்புற உள்ளாட்சியில் அக்கட்சியின் நிர்வாகிகள் கூடுதல் கவனம் செலுத்த உள்ளனர். அதேநேரம், மக்கள் நீதி மய்யம், தே.மு.தி.க ஆகிய கட்சிகளுக்கு நகர்ப்புறங்களில் ஓரளவு செல்வாக்கு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்களும் கணிசமான இடங்களில் வெல்லும் முனைப்பில் உள்ளனர்.
“ நகர்ப்புறங்களில் எங்களுக்கு சற்று வலு இருக்கிறது. எனவே, நாங்கள் முழுமையாக போட்டியிடுவோம். அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களை கண்டறியுமாறு மாவட்ட நிர்வாகிகளிடம் கூறிவிட்டோம். அதனை எதிர்கொள்வதற்கான பணிகளில் இறங்கிவிட்டோம். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கிராமங்களில் மக்கள் நீதி மய்யத்தைக் கொண்டு செல்லும் பணி பிரதானமாக இருந்தது. அதனால் வெற்றியை நாங்கள் பெரிதாக எதிர்பார்க்கவில்லை” என்கிறார், மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ்.
தொடர்ந்து பேசியவர், “ நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் ஆளும்கட்சி முறைகேடுகளைச் செய்து வெற்றி பெறவே விரும்பும். அதனைக் காரணம் காட்டிக் கொண்டு அமைதியாக இருந்துவிட முடியாது. இதையும் தாண்டி ஆட்சி மீதான சலிப்பு மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். அது எங்களுக்கான வாய்ப்பைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு போராடுவோம். இன்றைக்கும் மின்வெட்டு தொடர்ந்து கொண்டிருக்கிறது, தவறு செய்யும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கொடுக்கிறார்கள். இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். எறும்பு ஊற கல்லும் தேயும் என்பார்கள். தேர்தல் களம் கடுமையாக இருப்பதை உணர்ந்துதான் போராடி வருகிறோம்” என்கிறார்.
மேலும், “ வெற்றி வாய்ப்பை இழக்கும் நேரங்களில் நாங்கள் சோர்வாக இருந்தாலும் அதுகுறித்த எந்தவிதக் கவலையும் இல்லாமல் கமல் உற்சாகமாக இருப்பார். `நாம் கொண்டுள்ள நோக்கத்தை நோக்கி பயணிப்போம், இதுபோன்ற சில இழப்புகளுக்காக தளர்ந்தால் எதுவும் செய்ய முடியாது’ என எங்கள் அனைவரையும் உற்சாகமூட்டக் கூடிய இடத்தில் அவர் இருக்கிறார். அதனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை வலுவாக எதிர்கொள்வோம்” என்கிறார்.
முறைகேடு செய்து தி.மு.க வெற்றி பெற்றதா?
”நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை அ.தி.மு.க எப்படி எதிர்கொள்ளப் போகிறது?” என அக்கட்சியின் மாநில செய்தித் தொடர்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வனிடம் பேசினோம். “ பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சித் தேர்தலில் மக்களிடம் சென்று, ஆளும்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததை எடுத்துக் கூறுவோம். தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு ஆட்சிப் பொறுப்புக்கு தி.மு.க வந்துள்ளது. பத்தாண்டுகளாக சிறப்பான ஆட்சியை செய்த எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள் என மக்களிடம் கோருவோம்” என்கிறார்.
”ஊரக உள்ளாட்சியில் அதிகாரிகள் நேர்மையாக நடந்து கொண்டதால்தான் இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்தது என கே.என்.நேரு சொல்கிறாரே?” என்றோம். “ இல்லை. ஊரக உள்ளாட்சியில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. அதுகுறித்து தொடர்ந்து பேசி வருகிறோம். வரக் கூடிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிகப்படியான இடங்களில் நாங்கள் வெல்வோம். அதில் மாற்றுக் கருத்தில்லை” என்கிறார்.
சட்டம் ஒழுங்கு பாதித்ததா?
“ எங்களின் 5 மாத உழைப்புக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை பார்க்கிறோம். நகர்ப்புற தேர்தலில் அனைத்து இடங்களிலும் உறுதியாக மக்கள் எங்களுக்கு வெற்றியை கொடுப்பார்கள். கிராமப்புறங்களில் அ.தி.மு.கவுக்கு செல்வாக்கு அதிகம் என்பார்கள். நகர்ப்புறங்களில் தி.மு.க வலுவாக இருக்கும் என்பார்கள். ஆனால், கொரோனா பேரிடரை எதிர்கொண்ட விதம், ஆவின் பால் விலை குறைப்பு, நகர்ப்புற பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணம் என தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். எனவே, நகர்ப்புற உள்ளாட்சியில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவோம்” என்கிறார், தி.மு.கவின் மாநில செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி.
”முறைகேடுகளை அரங்கேற்றித்தான் தி.மு.க வெற்றி பெற்றதாக அ.தி.மு.க சொல்கிறதே?” என்றோம். “நாங்கள் அவ்வாறு செய்தோம் என எந்த ஊடகங்களும் பேசவில்லை. ஒரு சில இடங்களில் தனிமனித தாக்குதல்கள் நடந்தன. மொத்த சட்டம் ஒழுங்கும் பாதிக்கும் அளவுக்கு எந்தப் பிரச்னையும் நடக்கவில்லை. மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் வெற்றுப் புலம்பலாகத்தான் இதைப் பார்க்கிறோம். எதிர்க்கட்சியாக இருந்தபோதுகூட கணிசமான இடங்களில் வென்றோம். இப்போது பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். நகர்ப்புற உள்ளாட்சியிலும் இது தொடரும்” என்கிறார்.
மேலும், “ நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சில கட்சிகள் வாக்குகளைப் பிரிக்கலாம். ஆனால், தி.மு.கவின் வெற்றியைப் பறிக்க முடியாது. அந்தக் கட்சிகளுக்கான வாக்குகள் என்பது தீர்மானிக்கப்பட்டவை. அதனை நம்பி சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெறவில்லை. இந்த முறையும் ஒவ்வொரு இடத்திலும் வெல்லக் கூடிய வேட்பாளர்களை களமிறக்குவது, ஆட்சியின் சாதனைகளை கூறி வாக்கு கேட்பது எனச் செயல்பட உள்ளோம்” என்கிறார்.
நகர்ப்புற தேர்தலில் யாருக்கு வெற்றி?
”நகர்ப்புற உள்ளாட்சியிலும் தி.மு.கவின் வெற்றி தொடருமா?” என மூத்த பத்திரிகையாளர் தி.சிகாமணியிடம் பேசினோம். “ எம்.ஜி.ஆர் காலத்தில் நகராட்சிகளில் அ.தி.மு.கவைவிட தி.மு.க அதிக இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது அ.தி.மு.கவில் நிலவும் குழப்பங்கள், வேறுபாடுகள் ஆகியவற்றின் காரணமாக அவர்கள் தேர்தலை சந்தித்து அதிகப்படியான வெற்றியை பெறுவார்கள் என நான் நம்பவில்லை” என்கிறார்.
தொடர்ந்து பேசிய சிகாமணி, “ ஊரக உள்ளாட்சியில் அ.தி.மு.கவுக்கு அதிக செல்வாக்கு உள்ளதாக பொதுவான மனநிலை ஒன்று உள்ளது. ஆனால், கடந்த அக்டோபர் மாதம் ஒன்பது மாவட்டங்களுக்கு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வழக்கத்துக்கு மாறாக அதிக இடங்களில் தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. சில இடங்களில் பத்து சதவிகிதம்கூட இல்லாத அளவுக்கு மாவட்ட கவுன்சிலர் இடங்களில் அ.தி.மு.க மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. ஒன்றிய கவுன்சிலர் இடங்களிலும் அவர்களால் பெரிதாக வெற்றி பெற முடியவில்லை. இங்கெல்லாம் நாங்கள் செல்வாக்கோடு இருக்கிறோம் என அ.தி.மு.கவினர் கூறிய இடங்கள்தான் இவை.
மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நகர்ப்புறங்களில் சற்று செல்வாக்கு உள்ளது என்பார்கள். அந்தக் கட்சியும் நிர்வாகிகள் வெளியேற்றத்தால் கலகலத்துப் போயுள்ளது. மற்றபடி, தே.மு.தி.க, பா.ம.க ஆகிய கட்சிகளுக்கு நகர்ப்புறங்களில் செல்வாக்கு இருப்பதாகக் கூறிவிட முடியாது. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு வரக் கூடிய உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சி வெற்றி பெறும் என்பது பொதுவான நடைமுறையாக உள்ளது.
தற்போது உடனடியாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் தி.மு.க அதிக இடங்களில் வெற்றி பெறும். அதுவே, தேர்தல் சற்று தள்ளிப் போனாலோ, தி.மு.க மீது குற்றச்சாட்டுகள் கிளம்பினாலோ ஆட்சிக்கு எதிரான மனநிலை உருவானால் தேர்தல் முடிவுகள் தி.மு.கவுக்கு பாதகமானதாக மாறலாம். தற்போதைய நிலையே தொடருமானால் தி.மு.க வெற்றி பெறும்” என்கிறார்.
சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.கவில் சீட் கிடைக்காத முக்கிய நிர்வாகிகள் பலரும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளை இலக்காக வைத்து காய்களை நகர்த்தத் தொடங்கிவிட்டனர். ‘தேர்தல் தேதி அறிவிக்கும்போது, சீட்டுகளைப் பெறுவதில் கடும் போட்டி நிலவும்’ என்கின்றனர் அக்கட்சிகளின் நிர்வாகிகள். மேலும், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பிரசாரத்துக்கு செல்லாமல் அமைச்சர்களை மட்டும் களமிறக்கிய முதலமைச்சர் ஸ்டாலின், ‘நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது பிரசாரம் செய்வார்’ என தி.மு.க நிர்வாகிகள் பேசி வருகின்றனர். இதனை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளில் அ.தி.மு.கவும் முனைப்பு காட்டி வருகிறது.
(நன்றி BBC TAMIL)