நரேந்திர மோதி: “எனது கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் படம் ஏன் இருக்க வேண்டும்?”

கோவிட் -19 சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோதியின் புகைப்படம் இருக்க வேண்டுமா இல்லையா என்ற சர்ச்சை தொடர்பான வழக்கை கேரள உயர் நீதிமன்றம் அடுத்த வாரம் விசாரிக்க உள்ளது.

பிரதமர் நரேந்திர மோதியின் புகைப்படம் இல்லாமல் புதிய சான்றிதழ் வேண்டும் என்று மனுதாரரான பீட்டர் எம் என்பவர் கூறுகிறார். தடுப்பூசி சான்றிதழில் உள்ள புகைப்படத்திற்கு எதிராக அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

“இது எனது அடிப்படை உரிமைகளை பறிக்கிறது,” என்று அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

62 வயதாகும் பீட்டர் எம், ஒரு தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் மற்றும் இந்தியாவின் எதிர்கட்சியான காங்கிரசின் உறுப்பினராவார்.

பிபிசி செய்திக்காக கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பீட்டரை அவரது வீட்டில் சந்தித்து பிபிசி பேசியது. அப்போது, “எனது சான்றிதழில் தனது படத்தை இடம்பெறச்செய்து, குடிமக்களின் தனியுரிமைக்குள் அவர் ஊடுருவுகிறார். இது அரசியலமைப்புக்கு எதிரானது. மதிப்புக்குரிய பிரதமர் இந்த தவறான, வெட்கப்பட வேண்டிய செயலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்.” என்று கூறுகிறார்.கொரோனா சான்றிதழ்

“இது ஜனநாயகத்திற்கு முற்றிலும் பொருத்தமில்லாதது; இதனால் தேசத்துக்கோ அல்லது தனி நபருக்கோ எந்த பயனும் இல்லை,” என்று அவர் கூறினார்.

சுகாதார அமைச்சகத்தின் வழியாக வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழில் தனிநபரின் தகவல்களை தவிர, பிரதமர் மோதியின் புகைப்படத்துடன் ஆங்கிலத்திலும் உள்ளூர் மொழியிலும் இரண்டு தகவல்கள் உள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், “தடுப்பூசி போட்ட பிறகும் கோவிட் அடிப்படையிலான வழிமுறைகளை பின்பற்ற மக்களை ஊக்குவிப்பதற்காக “பெரும் பொது நலனை” கருத்தில்கொண்டு சான்றிதழில் படமும் அறிக்கையும் சேர்க்கப்பட்டுள்ளது,” என்று கூறினார்.

கொரோனா சான்றிதழ்மோதியின் படம்: கேள்வி எழுப்பும் மனுதாரர்

ஆயினும், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், ‘இந்த விஷயம் குறித்து ஏற்கெனவே உறுதியாக உள்ளனர்’ என்றும் சான்றிதழில் உள்ள தகவல், ‘வெறும் பிரசங்கமே தவிர வேறு ஒன்றுமில்லை’ என மனுதாரரான பீட்டர் கூறுகிறார்.

“மோதி நமது முதல் பிரதமரும் அல்ல, இது இந்தியாவின் முதல் தடுப்பூசி திட்டமும் அல்ல. ஆனால், கொரோனாவுக்கு எதிரான பிரசாரம் மற்றும் தடுப்பூசி திட்டத்தை பார்க்கும் போது, இது ஒரு தனி மனிதனின் திட்டமாக காட்டப்பட்டுள்ளது; இது பிரதமரின் பிரசாரத்திற்கு கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளது,” என்கிறார் பீட்டர்.

இந்த விவகாரத்தில் பீட்டர் மிகவும் கவலையுடன் இருக்கிறார். அவர் ‘அரசு மருத்துவமனையில் இலவச தடுப்பூசி வழங்குவதன் காரணமாக, நீண்ட வரிசைகள் உள்ளன. இதன் காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் பணம் செலுத்தி அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.கொரோனா சான்றிதழ்

“ஒவ்வொரு டோஸ் போடுவதற்கு நான் ரூ .750 செலுத்தினேன், அப்படியெனில் எனது சான்றிதழில் மோதியின் புகைப்படம் ஏன் இருக்க வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

இது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் கேரள உயர் நீதிமன்றம் இரண்டு வார கால அவகாசம் அளித்துள்ளது.

தடுப்பூசி சான்றிதழில் உள்ள புகைப்படத்திற்கு எதிர்ப்பு

தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோதியின் புகைப்படத்தை அவரது அரசியல் போட்டியாளர்கள் பலர் எதிர்க்கின்றனர். மாநிலங்களை ஆளும் சில எதிர்கட்சியினர், அவரது புகைப்படத்தை மாற்றி தங்கள் முதல்வரின் புகைப்படத்தை வைத்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வாத்ரா, பிரதமர் மோதி ‘தனிப்பட்ட பிரசாரத்திற்காக’ தடுப்பூசியைப் பயன்படுத்துகிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, மக்களின் இறப்பு சான்றிதழிலும் பிரதமர் மோதி தனது புகைப்படத்தை வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “நான் உங்கள் ஆதரவாளர் அல்ல என்று வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு உங்களைப் பிடிக்கவில்லை, ஆனால் நான் இதை வைத்திருக்க வேண்டும். ஏன்? மக்களின் சுதந்திரம் எங்கே?”, என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“நீங்கள் கோவிட் சான்றிதழ்களில் உங்கள் புகைப்படத்தை கட்டாயமாக்கியுள்ளீர்கள். எனவே இப்போது இறப்பு சான்றிதழிலும் செய்யுங்கள்.”, என்று கூறினார்.

இந்த புகைப்படம் காரணமாக, சமீபத்தில் சர்வதேச அளவில் பயணம் செய்யும் இந்தியப் பயணிகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச செய்தி நிறுவனமான ‘வைஸ்’ (Vice) சமீபத்தில் ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் வெளிநாடுகளில் பிரதமர் மோதியின் முகம் தெரியாத குடியுரிமை அதிகாரிகள் பல இந்திய பயணிகளின் சான்றிதழ்கள் போலியானவை என்று குற்றம்சாட்டியதாக கூறப்பட்டது.

“இந்த விவகாரத்தை இப்படியே விட்டு விட்டால், பிரதமர் மோதி ‘அடுத்த கட்டமாக’ தனது புகைப்படங்களை எங்கள் குழந்தைகள் பள்ளி மற்றும் கல்லூரி மாற்றல் சான்றிதழ்களிலும் (டிரான்ஸ்பர் சர்டிஃபிகேட்) வைத்து விடுவார்”, என்று பீட்டர் கவலையுடன் கூறுகிறார்.

பிரதமர் மோதியின் படம், இடம்பெறுவதற்கு எந்த தேவை இல்லாத இடங்களில்கூட வைக்கப்படுவதாக பீட்டர் கவலைபப்டுகிறார்.

சமீபத்தில், உச்ச நீதிமன்றத்தின் ஆட்சேபனைகளுக்குப் பிறகு,பிரதமர் மோதியின் புகைப்படம் இடம்பெற்ற அரசு விளம்பரங்கள், உச்ச நீதிமன்றத்தின் அதிகாரபூர்வமான மின்னஞ்சலில் இருந்து நீக்கப்பட்டன.

புகைப்படம் நல்லதுதானேஆதரவாளர்கள் கருத்து

பிரதமர் மோதி தான் புகைப்படம் எடுக்கப்படுவதையும் செல்ஃபி எடுத்துக் கொள்வதிலும் ஆர்வம் மிக்கவர் என்பது அனைவரும் அறிந்ததே. சமூக ஊடகங்களில் ஏராளமான மக்கள் அவரைப் பின்தொடர்கின்றனர். மேலும் நாடு முழுவதும் நடக்கும் அவரது பேரணிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர்.

தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் புகைப்படம் இருப்பதில் எந்த தவறும் இல்லை என்றும், அவர் நாட்டில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட முகம் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

டிஜிட்டல் விளம்பரப் பலகைகள் முதல் சாலையோர விளம்பரங்கள் வரை மற்றும் அனைத்து நாளிதழ்களின் முழு பக்க விளம்பங்களிலும் பிரதமர் மோதி சிரித்துக் கொண்டே இருக்கிறார். இது தவிர, பெரும்பாலான அமைச்சகங்களின் விளம்பரங்கள் மற்றும் இணையதளங்களில் அவருடைய படம் வைக்கப்பட்டுள்ளது

மகிமைப்படுத்தும் அரசியல்

இதுபோல தமது சுயமான மிகை மதிப்பீடு செய்து கொண்ட தலைவர் ஒருவர் இந்தியாவில் இதுவரை இருந்ததில்லை என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

கடந்த காலங்களில் விமான நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், விருதுகள் மற்றும் நலத்திட்டங்களுக்கு காந்தி-நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் பெயர்களை சூட்டிக் கொண்டதாக காங்கிரஸ் கட்சியை பாரதிய ஜனதா கட்சி விமர்சித்தது.

தலித் மக்களின் ஆதர்ச தலைவராகவும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வராகவும் இருந்த மாயாவதி, தமது உருவச் சிலையை தாமே நிறுவியதற்காக பேர் போனவர். அதனால் அவர் பல விமர்சனங்களையும் எதிர்கொண்டார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா மலிவு விலை உணவகங்கள், மருந்துகள் மற்றும் உப்பு பாக்கெட்டுகளில் தமது படத்தை இடம்பெறச் செய்தார்.

பத்திரிகையாளரும், பிரதமர் மோதியின் சுயசரிதையை எழுதியவருமான நிலஞ்சன் முகோபாத்யாய, “பிரதமர் மோதி இந்த சுய பெருமையை வேறு நிலைக்கு கொண்டு சென்றுள்ளார்.”

“தனி நபரை விட அமைப்பு பெரியது என்று போதிக்கும் ஆர்எஸ்எஸ் உறுப்பினராக இருந்தவர் மோதி, ஆனால் அவரது வழிகாட்டுதலின் கீழ் அமைப்பை விட தனி நபர் பெரியவராக மாறி விட்டார்.”

“அவர் பேசுவதை நீங்கள் கேட்டால், எங்கள் அரசாங்கம் இதைச் செய்தது என்று அவர் ஒருபோதும் கூறியது இல்லை, மாறாக அவர் எனது அரசாங்கம் அல்லது மோதி அரசாங்கம் என்றே கூறுவார். பொது உரைகளின் போது அவர் ‘நான், என், என் வழியாக’ என்று அதிகம் பயன்படுத்துகிறார். பிப்ரவரியில், அவர் ஒரு மைதானத்திற்கு தனது பெயரையே வைத்தார் என்றார் முகோபாத்யாய.

அவர் மேலும் கூறுகையில், பிரதமர் மோதி பெருந்தொற்று காலத்தை ‘தமது பெருமையை பறைசாற்றிக் கொள்ள கிடைத்த மிகச்சிறந்த வாய்ப்பாகப் பயன்படுத்தியுள்ளார்.”, என்றார்.

“தடுப்பூசியே கோவிட் -19 க்கு எதிராக பாதுகாக்க ஒரே வழியாகும், மேலும் மோதியின் படத்தை சான்றிதழில் வைப்பதன் மூலம், அவர் தன்னை மக்களின் பாதுகாவலராக காட்ட விரும்புகிறார்.”

“தெய்வத்தின் மனித முகமாக தன்னைக் காட்ட மோதி விரும்புகிறார், அதன் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெற்றால் அது வாக்குகளாக மாறும்.”

இத்தகைய பிரசாரம் வாக்காளர்களை பாதிக்கிறதா?

உருவ பிம்ப நிபுணர் (Image Guru) திலீப் செரியன், “தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் புகைப்படம் ‘கட்சியின் பார்வைக்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஒரு சிறந்த கோட்டை வரைகிறது”, என்கிறார்.

அவர், ‘வாக்குகள் பெறுவதற்கு சான்றிதழ்கள் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றன.”

“இது ஒரு தேர்தல் ஆதாயமாகப் பார்க்கப்படுகிறது, ஆனால் தடுப்பூசி சான்றிதழ்கள், அரசாங்கத் திட்டங்களிலிருந்து வரும் ஆவணங்கள் என முடிந்தவரை பல வகையில் இது ஒரே செய்தியையே அளிக்கிறது.”

இன்று கட்சியின் அடையாளம் தனிநபருடன் தொடர்புடையதாக மாறியிருப்பதால் ‘முக அங்கீகாரம்’ ஒரு பெரிய இடம் வகிக்கிறது என்று செரியன் கூறுகிறார்.

“உங்கள் புகைப்படத்தை வைப்பதன் நோக்கம் தனிப்பட்ட வாக்காளர்களுக்கு உங்கள் அடையாளத்தை நினைவூட்டுவதாகும்.”

இப்போது, தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோதியின் படம் இருப்பதில் என்ன பிரச்னை என்று விளக்கும் பீட்டர், “மோதி ஒரு கட்சியை வழிநடத்தும் அரசியல்வாதி, அவர் தேர்தலில் போட்டியிடுகிறார், தனது எதிரிகளின் மீது அளவுக்கு அதிகமான தாக்கத்தை இதுபோன்ற செய்கை ஏற்படுத்தும். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.” என்கிறார்.

(நன்றி BBC TAMIL)