பீஹாரில் கள்ளச்சாராயம் குடித்து 24 பேர் பலி

பாட்னா: பீஹாரில் கடந்த 2 நாட்களில் கோபால் கஞ்ச் மற்றும் மேற்கு சாம்ப்ரான் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 24 பேர் உயிரிழந்தனர். இந்த மாவட்டங்களில், மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கு சாம்பரான் மாவட்டத்தில், டெலுஹூயா கிராமத்தில் 8 பேரும், கோபால் கஞ்ச் மாவட்டத்தில் 16 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனை உறுதி செய்ய அதிகாரிகள், எதனால் உயிரிழந்தனர் என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

இன்னும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விஷத்தன்மை உடைய பொருளை அவர்கள் உண்டதாக போலீசார், முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், இறந்தவர்கள் அனைவரும் சாராயம் குடித்தனர் என கிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

முன்னதாக, கடந்த அக்.,28 ல், முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள ரூபாவுலி கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்தனர். 4 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பீஹாரில் பல மாவட்டங்களில், ஜன., முதல் அக்.,வரை கள்ளச்சாராயம் குடித்ததில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். பலரின் பார்வை பறிபோயுள்ளது.

dinamalar