பெங்களூரு, கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டன. கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, கல்லூரிகள் திறக்கப்பட்டன. அதைத்தொடந்து 9 முதல் 12-ம் வகுப்பு வரையும், பின்னர் 6 முதல் 8-ம் வகுப்பு வரையும் திறக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதி முதல் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் கர்நாடகத்தில் வருகிற 8-ந் தேதி முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி. என்று சொல்லக்கூடிய மழலையர் பள்ளிகள் திறக்கப்படும் என்று கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மருத்துவ நிபுணர் குழு வழங்கிய ஆலோசனையை அடுத்து இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.
எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்பறைகளை தூய்மைபடுத்த வேண்டும், கிருமிநாசினி தெளித்து நோய் பரவுவதை தடுக்க வேண்டும், குழந்தைகள் பள்ளிக்கு வர பெற்றோரின் அனுமதி கட்டாயம் என்று அரசு கூறியுள்ளது.
கொரோனா பரவல் விகிதம் 2 சதவீதத்திற்கும் கீழ் இருக்கும் மாவட்டங்களில் மட்டுமே இந்த மழலையர் பள்ளிகளை திறக்க வேண்டும் என்றும், வகுப்புகளை அரை நாள் மட்டுமே நடத்த முடிக்க வேண்டும் என்றும் அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 20 மாதங்களுக்கு பிறகு இந்த மழலையர் பள்ளிகள் திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் கர்நாடகத்தில் அனைத்து வகையான வகுப்புகளும் திறக்கப்பட்டுவிட்டன.
maalaimalar