அரசு டாக்டர் இறந்தால் ரூ.1 கோடி ‘கார்பஸ் பண்ட்’ உருவாக்க அரசு முடிவு

சென்னை–பணியின் போது உயிர் இழக்கும் அரசு டாக்டர்களின் குடும்பத்தினருக்கு, 1 கோடி ரூபாய் கிடைக்க வழி செய்யும், நிதி மூலதனத்தை உருவாக்க தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

அரசு டாக்டர்களுக்கான சம்பளத்தை உயர்த்த வேண்டும். பணியின் போது உயிர்இழக்கும் அரசு டாக்டர்களின் குடும்பத்தினருக்கு, 1 கோடி ரூபாய் நிதி அளிக்கும் வகையில், ‘கார்பஸ் பண்ட்’ எனப்படும், நிதி மூலதன திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு, பல போராட்டங்களை நடத்தி வந்தது.இந்த போராட்ட குழுவினருடன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று முன்தினம் பேச்சு நடத்தினார். அதில், உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் பெருமாள் பிள்ளை கூறியதாவது:பணியின் போது உயிர்இழக்கும், அரசு டாக்டர்களின் குடும்பத்தினருக்கு, 1 கோடி ரூபாய் நிதி கிடைக்கும் வகையில், நிதி மூலதன திட்டத்தை செயல்படுத்தும் கோரிக்கையை, தமிழக அரசு ஏற்றுள்ளது. இதற்காக, அரசு டாக்டர்களின் மாத ஊதியத்தில், 500 ரூபாய் பிடித்தம் செய்யப்படும்.

மேலும், இந்த திட்டத்தை 2017 டிசம்பர் முதல் வாரத்தில் இருந்து செயல்படுத்தவும்; நிதி வழங்கப்படும் போது, வருமான வரி பிடித்தமின்றி முழுமையாக வழங்கவும் அரசு சம்மதித்துள்ளது. இதற்காக, தமிழக அரசுக்கு நன்றி.அடுத்த கட்டமாக ஊதிய உயர்வு பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண்பதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

dinamalar