புரியாத புதிர்: நீரில் மூழ்கிய பயிருக்கு நிவாரணம் கிடைப்பது எப்படி: முறையாக கணக்கெடுக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு

வாலாஜாபாத் : வடகிழக்கு பருவ மழைக்கு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சேதம் ஏற்பட்ட நெற்பயிர்களின் விபரங்களை கணக்கெடுத்து, வேளாண் துறை அரசிற்கு பரிந்துரை செய்துள்ளது. அந்த அறிக்கையின்படி எந்தவிதத்தில் நிவாரணம் கிடைக்கும் என்பது புரியாத புதிராக இருப்பதாக, விவசாயிகள் குமுறுகின்றனர்; முறையாக கணக்கெடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வடகிழக்கு பருவ மழை மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் சமீபத்தில் பெய்த பலத்த மழையால், காஞ்சிபுரம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தவிர, அந்தந்த பகுதி ஏரி, குளங்கள் நிரம்பி வெளியேறிய உபரி நீர், குடியிருப்பு, விளை நிலங்களை சூழ்ந்தது.இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2,887.43 ஏக்கர்; செங்கல்பட்டு மாவட்டத்தில், 2,368.73 ஏக்கர் என மொத்தம், 5,256.10 ஏக்கர் பரப்பில் நெற்பயிர் சேதம் ஏற்பட்டுஉள்ளது.

ரூ.300 கோடி

மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள் மற்றும் பயிர் சேதத்திற்கு, 300 கோடி ரூபாய் அரசு வழங்கும் என, முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்துள்ளார்.

மேலும் அவர், ‘அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை சொர்ணவாரி பயிர் மற்றும் முழுமையாக சேதமடைந்த இடங்களில், விவசாயிகளுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு 8,000 ரூபாய் வழங்கப்படும்.’நடப்பு சம்பா பருவத்தில் நடவு செய்து, நீரில் மூழ்கிய சேதமடைந்த பயிர்களை, மறு சாகுபடி செய்ய வசதியாக, ஏக்கருக்கு 2,443 ரூபாய் மதிப்பில் விதை, நுண்ணுாட்ட கலவை, யூரியா, டி.ஏ.பி., ஆகிய வேளாண் இடுப்பொருட்கள் வழங்கப்படும்’ எனவும் தெரிவித்தார். அரசின் இழப்பீடு விபரம், வேளாண் துறையின் கணக்கெடுப்பு அடிப்படையில் தான் வழங்கப்படும். ஆனால், அத்துறையினர் முறையாக கணக்கெடுக்காமல் அறிக்கை தருவதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எந்தளவு இழப்பீடு தொகை வழங்கப்படும் என்பது, புரியாத புதிராக இருப்பதாக, விவசாயிகள் குமுறுகின்றனர்.

தமிழ்நாடு விவசாய சங்க, காஞ்சிபுரம் மாவட்ட செயலர் கே.நேரு கூறியதாவது:முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள நிவாரணம், விவசாயிகளுக்கு போதாது. அதை உயர்த்தி தர வேண்டும்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை, வேளாண் துறையினர் முறையாக கணக்கெடுக்க வேண்டும். அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர் நிலங்கள்; நீரில் மூழ்கிய இளம் நெற்பயிர்; நெல் முதிர்வு பெறவிருக்கும் நிலையில் இருந்த நெற்பயிர் என, தரம்பிரித்து கணக்கெடுக்க வேண்டும். அதற்கு ஏற்ப நிவாரணம் வழங்க வேண்டும்.

35 சதவீதம்

உதாரணமாக, அறுவடைக்கு தயாராக இருந்த நெல்லுக்கு, ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய்; நீரில் மூழ்கி அழுகிய நெற்பயிருக்கு, ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய்; ஏக்கர் கரும்புக்கு 60 ஆயிரம் ரூபாய் என, பாதிப்புக்கு ஏற்ப நிவாரணம் வழங்க வேண்டும்.ஆனால் 35 சதவீதம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே நிவாரணம் என வேளாண் துறை கூறுவதால், சிறு, குறு விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுவர். அதனால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

மறு சாகுபடிக்கு உதவும்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இளம் பயிர்களுக்கு, மறு சாகுபடி செய்வதற்கு ஏற்ப, அரசு அறிவித்த வேளாண் இடுபொருட்களை வழங்க உள்ளோம். இது, அடுத்த பருவம் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு சவுகரியமாக இருக்கும். பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, காப்பீடு இழப்பீட்டுடன், வேளாண் இடு பொருட்களும் கிடைக்கும். பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு, வேளாண் இடுபொருட்கள் மட்டுமே கிடைக்கும்.-சுரேஷ்குமார், வேளாண் இணை இயக்குனர், செங்கல்பட்டு.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 35 ஆயிரம் ஏக்கர். செங்கல்பட்டு மாவட்டத்தில், 18 ஆயிரம் ஏக்கர் என, மொத்தம் 53 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது.

கண்காட்சி போதுமா?

குன்றத்துார், வரதராஜபுரம் பகுதியில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை, மத்திய குழுவினர், சமீபத்தில் ஆய்வு செய்தனர். புவனேஷ்வரி நகரில் வெள்ள தடுப்பு பணிகளைபார்வையிட்டனர். அதே பகுதியில் காஞ்சி புரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட வெள்ளம் பாதிப்பு குறித்த புகைப்பட காட்சிகளை பார்த்து, புறப்பட்டு சென்றனர். பயிர் சேத பாதிப்பு ஏற்பட்ட காஞ்சி புரம், செங்கல்பட்டு மாவட்ட வயல் பகுதிகளில் குழுவினர் நேரில் ஆய்வு செய்யவில்லை.எங்கு நடக்கிறது

 

குழப்பம்?

உதவி வேளாண் அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பர்.இவர்கள், 33 சதவீதத்திற்கு மேல் பாதிப்பு இருந்தால் மட்டுமே கிராமத்தில் முழு பாதிப்பு உள்ளது என கணக்கிடுவர். 33 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், பாதிப்பு இல்லை என, அறிக்கை கொடுப்பர்.பயிர் காப்பீடு செய்த விவசாயிகளின் சர்வே எண் என, அழைக்கப்படும் புல எண் அடிப்படையில், 5 மீட்டர் நீளம், 5 மீட்டர் அகலம் என, நிலப்பரப்பில் சோதனை அறுவடை செய்வர். இதில் 11 கிலோவிற்கு மேல் நெல் மகசூல் கிடைத்தால், மகசூல் பாதிப்பு இல்லை எனவும், அதற்கு குறைவாக இருந்தால், மகசூல் பாதிப்பு இருக்கிறது என, கணக்கீட்டு செய்து, இழப்பீடு வழங்குவதற்கு, வேளாண் துறையினர் பரிந்துரை செய்வர். இவ்வாறு கணக்கெடுக்கும்போது, நல்ல விளைச்சல் இருக்கும் நிலத்தை மட்டும் அரசு பரிந்துரைப்பதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்காத நிலை உள்ளது.

dinamalar