11 மாதங்களில் 35 போலீசார் தற்கொலை: முற்றுப்புள்ளி வைக்க கவுன்சிலிங் கட்டாயம்

மதுரை: இந்தாண்டு 11 மாதங்களில் தமிழக போலீஸ் துறையில் பல்வேறு காரணங்களுக்காக 35 போலீசார் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அடுத்தடுத்து தற்கொலை செய்வதை தடுக்க போலீசாருக்கு ‘கவுன்சிலிங்’ அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணி அழுத்தம், குடும்ப பிரச்னை, ஆன்லைன் விளையாட்டில் பண இழப்பு போன்ற காரணங்களால் போலீசார் தொடர்ந்து தற்கொலை செய்து வருகின்றனர். கடந்த 10 மாதங்களில் 30 பேரும், இம்மாதத்தில் நேற்று வரை 5 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பெரும்பாலும் குடும்ப பிரச்னையால்தான் இம்முடிவை எடுத்துள்ளனர். இதேபோல் உடல்நலம் பாதிப்பு, விபத்து போன்றவைகளிலும் போலீசார் இறந்து வருவது சக போலீசாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தாண்டு ஜன.,ல் 29 போலீசார், பிப்., ல் 22, மார்ச்சில் 27, ஏப்.,ல் 48, மே 83, ஜூன் 26, ஆக., 25, செப்., 35, அக்., ல்24 போலீசார் இறந்துள்ளனர். இதில் ஒரு போலீஸ்காரர் வீரமரணம் அடைந்தவர். கொலை 1, கொரோனா 80, மாரடைப்பு 48, மர்மசாவு 4, விபத்து 57, உடல்நலம் பாதிப்பு 112, புற்றுநோய் 20, பாம்பு கடிக்கு ஒருவர் என மொத்தம் 354 பேர் இறந்துள்ளனர்.

போலீஸ் அதிகாரி கூறுகையில், ”போலீசாரின் தற்கொலையை தடுக்க துறை சார்பில் 2 ஆண்டுகளாக மனநலம் தொடர்பான ‘கவுன்சிலிங்’ கொடுக்கப்பட்டு வருகிறது. அவர்களின் குடும்பத்தினருக்கும் கொடுக்கப்படுகிறது. இதன்மூலம் போலீசாரின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு, பணியில் கவனம் செலுத்த துவங்கினர். எனவே ‘கவுன்சிலிங்’ கொடுப்பதை இன்னும் தீவிரப்படுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும்” என்றார்.

dinamalar