கர்நாடகாவில் 15 அரசு அதிகாரிகள் வீடுகளில் சோதனை: பல கோடி ரூபாய் நகை, பணம் சிக்கியது 

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வந்த புகாரை தொடர்ந்து பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் 68 இடங்களில் உள்ள 15 அரசு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்களில் நேற்று ஊழல் தடுப்பு படையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

கர்நாடகாவில் 15 அரசு அதிகாரிகள் வீடுகளில் சோதனை: பல கோடி ரூபாய் நகை, பணம் சிக்கியது

வீட்டின் தண்ணீர் குழாயில் கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்த பணத்தை ஊழல் தடுப்பு படையினர் கைப்பற்றிய காட்சி.

பெங்களூரு : பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருக்கும் அரசு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படை போலீசார் சோதனை நடத்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது வழக்கம்.

சமீபத்தில் பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள அலுவலகத்தில் ஊழல் தடுப்பு படை போலீசார் சோதனை நடத்தி இருந்தனர்.

இதில், அரசு அதிகாரிகள் ரூ.134 கோடிக்கு முறைகேடு செய்திருப்பதற்கான ஆவணங்கள் போலீசாருக்கு கிடைத்தது. இந்த நிலையில், பெங்களூரு மாநகராட்சி, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பிற துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் தங்களது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக ஊழல் தடுப்பு படை போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தது. இதையடுத்து, புகார்கள் வந்த அதிகாரிகளை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் நேற்று காலையில் ஒரே நேரத்தில் 15 அரசு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்கள், அவர்களது உறவினர்களின் வீடுகளில் ஊழல் தடுப்பு படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். மாநிலம் முழுவதும் ஊழல் தடுப்பு படையின் 8 போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், 300 போலீஸ்காரர்கள் என ஒரே நேரத்தில் 410 போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

ஒட்டு மொத்தமாக 15 அதிகாரிகளுக்கு சொந்தமான 68 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு இருந்தது. பெங்களூரு மாநகராட்சியில் சாலை மற்றும் அடிப்படை வசதிகள் துறையில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் மாயண்ணா. இவரது தந்தை மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி இருந்தார். பணியின் போது அவர் மரணம் அடைந்ததால், 2002-ம் ஆண்டு ஜனவரி மாதம் பெங்களூரு மாநகராட்சியில் ஊழியராக மாயண்ணா பணியில் சேர்ந்தார்.

அதன்பிறகு, பல்வேறு பகுதிகளில் பணியாற்றி தற்போது மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் சாலை மற்றும் அடிப்படை வசதிகள் துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமான பெங்களூரு வீரபத்ரநகரில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படை துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிசங்கர் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையின் போது, அவரது வீட்டில் இருந்து பல லட்சம் ரூபாய் நகைகள், பணம் போலீசாருக்கு சிக்கியதாக தெரியவந்துள்ளது. மேலும் மாயண்ணாவுக்கு பெங்களூருவில் 6 வீட்டுமனைகள், 4 வீடுகள் இருப்பதற்கான சொத்து ஆவணங்களும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்திருப்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு மாநகராட்சியில் டி-குரூப் ஊழியராக இருந்து வருபவர் கிரி. இவருக்கு சொந்தமான வீடு பாகுலகுன்டே அருகே பி.டி.எஸ். லே-அவுட்டில் உள்ளது. அந்த வீட்டில் ஊழல் தடுப்பு படை போலீசார் நேற்று காலையில் சோதனை நடத்தினார்கள். டி-குரூப் ஊழியரான கிரி வீட்டை பார்த்து ஊழல் தடுப்பு படை போலீசாரே ஆச்சரியம் அடைந்தனர். ஏனெனில் அந்த வீடு அரண்மனை போல இருந்தது. அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பணம், தங்க நகைகள், முக்கிய ஆவணங்கள், சொத்து பத்திரங்கள் கிடைத்திருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுபோல், பெங்களூரு எலகங்காவில் அரசு ஆஸ்பத்திரியில் பிசியோதெரப்பிஸ்டாக உள்ள ராஜசேகர், பெங்களூரு சகாலா திட்டத்தில் முக்கிய அதிகாரியாக பணியாற்றும் நாகராஜ், நந்தினி பால் கூட்டமைப்பில் பொது மேலாளராக பணியாற்றும் கிருஷ்ணாரெட்டி, பெங்களூரு கட்டுமான பொருட்கள் தொடர்பான மையத்தின் மேலாளர் வாசுதேவ் ஆகிய 4 பேரின் வீடுகளிலும் நேற்று அதிகாலையில் இருந்து இரவு வரை ஊழல் தடுப்பு படை போலீசார் சோதனை நடத்தினார்கள்.

இந்த 4 அரசு அதிகாரிகளின் வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்கள், சொத்து பத்திரங்கள், நகை, பணம் சிக்கியது. அவர்களுக்கு சொந்தமான வங்கி லாக்கர்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த 4 அதிகாரிகளும் தங்களது வருமானத்தை காட்டிலும் அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் ஊழல் தடுப்பு படை போலீசாருக்கு கிடைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கதக் மாவட்டத்தில் வேளாண் துறையில் இணை இயக்குனராக பணியாற்றி வருபவர் ருத்ரேசப்பா. இவருக்கு சொந்தமான கதக், சிவமொக்கா, தாவணகெரேவில் உள்ள வீடு, அலுவலகங்கள் மற்றும் உறவினர் வீடுகளில் ஊழல் தடுப்பு படை போலீசார் நேற்று அதிகாலையில் இருந்து மாலை வரை சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது ருத்ரேசப்பாவுக்கு சொந்தமான வீட்டில் இருந்து மட்டும் 9 கிலோ 400 கிராம் தங்க நகைகள், ரூ.15 லட்சம் ரொக்கம் சிக்கியது. அவரிடம் 3 சொகுசு கார்கள், கதக், சிவமொக்கா, தாவணகெரேயில் சொந்தமான வீடுகள், விவசாய நிலங்கள் இருப்பதும் தெரியவந்தது. அதாவது 53 தங்க கட்டிகள், 14 தங்க நாணயங்கள், 25 தங்க சங்கிலிகள், தங்க மோதிரங்கள் உள்பட 9 கிலோ 400 கிராம் தங்க நகைகள் சிக்கி இருந்தது. அவற்றில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நெக்லசும் அடங்கும்.

சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம், நகை

ருத்ரேசப்பாவுக்கு சொந்தமான சொத்து ஆவணங்கள், பத்திரங்களை போலீசார் பரிசோதித்து வருகின்றனர். இதுதவிர வங்கி கணக்குகள், பினாமி பெயரில் ஏதேனும் சொத்து வாங்கி உள்ளாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்டமாக அதிகாரி ருத்ரேசப்பா தனது வருமானத்தை காட்டிலும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு சட்டவிரோதமாக சொத்து சேர்த்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுபோல், கலபுரகி மாவட்டம் ஜேவர்கியில் பொதுப்பணித்துறை ஜுனியர் என்ஜினீயராக இருந்து வருபவர் சாந்தனகவுடா பிராதார். இவர், ஆரம்பத்தில் பொதுப்பணித்துறையில் ஒப்பந்த ஊழியராக வேலைக்கு சேர்ந்திருந்தார். கடந்த 2002-ம் ஆண்டில் தான் பொதுப்பணித்துறையில் நிரந்தர பணியில் சேர்க்கப்பட்டு இருந்தார். இவருக்கு சொந்தமான கலபுரகி மாவட்டம் குப்பி காலனியில் உள்ள வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையின் போது சாந்தனகவுடா வீட்டில் இருந்து ரூ.54 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை ஊழல் தடுப்பு படை போலீசார் கைப்பற்றினர். சாந்தனகவுடா வீட்டில் கலபுரகி ஊழல் தடுப்பு படை போலீஸ் சூப்பிரண்டு மாயண்ணவர் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தி சொத்து பத்திரங்கள், ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றுள்ளனர். பெங்களூருவில் பல கோடி ரூபாய்க்கு சாந்தனகவுடாவுக்கு வீடு இருப்பதையும் போலீசார் கண்டித்துள்ளனர்.

இதுபோல், தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஜூனியர் என்ஜினீயராக இருக்கும் கே.எஸ்.லிங்கேவுடா, மண்டியா மாவட்டத்தில் எச்.எல்.பி.சி.யில் என்ஜினீயராக இருக்கும் சீனிவாஸ், பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புராவில் வருவாய்த்துறை இன்ஸ்பெக்டராக இருக்கும் லட்சுமி நரசிம்மய்யா, பெலகாவி மாவட்டம் பைலஒங்கலாவில் கூட்டுறவுத்துறை வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றும் ஏ.கே.மஸ்தி ஆகிய 4 பேரின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதுதவிர, பெலகாவியில் கோகாக் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் சதாசிவ், பெலகாவி மின்வாரியத்தில் சி-குரூப் ஊழியராக பணியாற்றும் நேதாஜி ஹீராஜி பட்டீல், பல்லாரி மாவட்டத்தில் சார் பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்ட சிவானந்த் ஆகிய 3 அரசு அதிகாரிகளின் வீடுகள், அவர்களது உறவினர்களின் வீடுகளிலும் நேற்று அதிகாலையில் இருந்து இரவு வரை சோதனை மேற்கொள்ளப்பட்டது.

பெங்களூருவில் மட்டும் 6 அரசு அதிகாரிகள் வீடுகளிலும், அவர்களது அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. ஒட்டு மொத்தமாக பெங்களூரு, பெங்களூரு புறநகர், பெலகாவி, கலபுரகி, மண்டியா, மங்களூரு, பல்லாரி என மாநிலம் முழுவதும் 68 இடங்களில் 15 அரசு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தி ஊழல் தடுப்பு படை போலீசார் அதிர்ச்சி கொடுத்திருந்தனர்.

இந்த சோதனையின் போது 15 அரசு அதிகாரிகளின் வீடுகளில் இருந்தும் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், பணம், சொகுசு கார்கள், வீட்டுமனைகள், விவசாய நிலங்களின் பத்திரங்கள், வீடுகளின் சொத்து பத்திரங்கள் கிடைத்திருப்பதாக ஊழல் தடுப்பு படை போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

15 அரசு அதிகாரிகளும் தங்களது வருமானத்தை காட்டிலும் பல கோடி ரூபாய்க்கு சொத்துகள் சேர்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் வீடுகளில் சிக்கிய ஆவணங்களை பரிசீலனை நடத்தி வருவதாகவும், அதன்பிறகு தான் வருமானத்திற்கு அதிகமாக எந்த அளவுக்கு சொத்து சோத்துள்ளனர் என்பது தெரியவரும் எனவும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சோதனைக்கு உள்ளான 15 அதிகாரிகளின் வங்கி கணக்குகள், பினாமி பெயரில் சொத்து சேர்த்துள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். 15 அரசு அதிகாரிகள் மீதும் ஊழல் தடுப்பு படை போலீசார் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கர்நாடகத்தில் அரசு அதிகாரிகளின் வீடுகளில் நடந்த இந்த சோதனை பரபரப்பையும், அதிகாரிகள் மத்தியில் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது..

maalaimalar