கான்பூர் ஐ.ஐ.டி.யில் படித்து வந்த மாணவி ஆபத்தை உணராமல் செல்பி எடுக்க முயன்றபோது கால் தவறி ஆற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம்
உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ.ஐ.டி.) புவி அறிவியல் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி செஜல் ஜெயின். இவர் தனது நண்பர்களுடன் நேற்று கங்கை தடுப்பனைக்கு சென்றுள்ளார். அங்கு, செஜல் ஜெயின் செல்பி எடுக்க முயன்றபோது கால் தவறி ஆற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த ஐஐடி மாணவி செஜல் ஜெயின்
இதுகுறித்து ஐ.ஐ.டி-கே செய்தித் தொடர்பாளர் கிரீஷ் பந்த் கூறுகையில், ” மாணவி உயிரிழந்தது குறித்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், செஜல் ஜெயின் உள்பட 7 பேர் கங்கை தடுப்பணைக்கு சென்றது தெரியவந்தது. இவர்கள் அங்குள்ள பாலத்தின் பாதுகாப்பு தடுப்பை கடந்து அணையின் கேட் வளைவில் நுழைந்துள்ளனர்.
அங்கு, செஜல் ஜெயின் தனியாக நின்றபடி செல்பி எடுக்க முயன்றதாக தெரிகிறது. அப்போது திடீரென செஜல் ஜெயின் கால் தவறி ஆற்றுக்குள் விழுந்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் குழுவினர் ஆற்றுக்குள் சுயநினைவற்று கிடந்த செஜல் ஜெயினை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, பரிசோதித்த மருத்துவர்கள் செஜல் ஜெயின் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் ” என்றார்.