நித்யானந்த் ராய்
எஸ்.சி., எஸ்.டி. பிரிவைத்தவிர மற்ற பிரிவிற்கு சாதி அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை 2021 கணக்கெடுப்பு தொடர்பாக மத்திய அரசு அரசாணை வெளியிட்டது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த கணக்கெடுப்பில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவு மட்டும் சாதி அடிப்படையில் கணக்கெடுக்கப்படுகிறது. இதர பிரிவினர்கள் சாதி அடிப்படையில் கணக்கிடப்படுவதில்லை.
பெரும்பாலான அரசியல் கட்சிகள் மக்கள் தொகை கணக்கெடுப்பை ஓ.பி.சி. பிரிவில் சாதி அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்து உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த நிலையில் மக்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து கூறுகையில் ‘‘இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவைத் தவிர மற்ற பிரிவுகளில் சாதி அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தியதில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு அட்டவணை மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட வல்லுனர்கள் குழுவால் ஆலோசிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டவை.
2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந்தேதி அரசிதழில் ஆணை வெளியிடப்பட்டது. எனினும், கோரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.