கொரோனா தடுப்பூசி
தடுப்பூசி போடாத நபர் அந்த கிராமத்துக்குள் நுழைந்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று அந்த கிராம பஞ்சாயத்து அறிவித்துள்ளது.
அவுரங்கபாத்: தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 155 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். மராட்டிய மாநிலத்தில்தான் ஒமைக்ரான் வைரஸ் அதிகளவில் உள்ளது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கு நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
நான்டெட் மாவட்டம் ஹிமயாத் நகர் தாலுகாவில் தெம்பூர்ணி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தான் தடுப்பூசி செலுத்தாதவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒமிக்ரான் வைரஸ்
தடுப்பூசி போடாத நபர் அந்த கிராமத்துக்குள் நுழைந்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று அந்த கிராம பஞ்சாயத்து அறிவித்துள்ளது. இந்த தடை குறித்து கிராம நுழைவு வாயிலில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெம்பூர்ணி பஞ்சாயத்து தலைவர் யசோதாபாய் பட்டீல் கூறியதாவது:-
தடுப்பூசி ஒரு டோஸ் கூட செலுத்தாத வியாபாரிகள், தொழிலாளர்கள் அல்லது வேறு எந்த நபரும் இந்த கிராமத்துக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எங்கள் கிராமத்தில் 100 சதவீத முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 2-வது டோஸ் கிட்டதட்ட 75 சதவீதம் பேர் செலுத்தி உள்ளனர். தொற்று நோய்களின் போது இத்தகைய நடவடிக்கைகள் அவசியமானது.
இவ்வாறு அவர் கூறினார்.