எதையும் எதிர்கொள்ள தயாராக இருப்போம்: ஒமைக்ரான் குறித்து எய்ம்ஸ் இயக்குநர் எச்சரிக்கை

பிரிட்டனில் ஒமைக்ரான் பாதிப்பு, கொரோனா தொற்று அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது என எய்ம்ஸ் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கொரோனா ஐரோப்பிய நாடுகளை உலுக்கத்தொடங்கியிருக்கிறது. இந்தியாவிலும் ஒமைக்ரான் கால் பதித்துவிட்டது.  ஒமைக்ரான் வேகமாக பரவினாலும் அதன் பாதிப்புகள் தீவிரமாக இருக்காது என்று நிபுணர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

எனினும்,  இங்கிலாந்து  உள்ளிட்ட நாடுகளில் வைரஸ் பரவலின் வேகம் மிக வேகமாக  இருக்கிறது. இதனால், இந்தியாவில் அதே வேகத்தில் பரவினால் நாளொன்றுக்கு 14 லட்சம் வரை பேர் பாதிக்கக்கூடும் என மருத்துவ வல்லுர்கள் கூறியதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், எய்ம்ஸ் இயக்குநர் மருத்துவர் ரன்தீப் குலேரியா நேற்று  பேட்டி அளிக்கையில் கூறியதாவது;- ‘பிரிட்டனில் ஒமைக்ரான் பாதிப்பு, கொரோனா தொற்று அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. நாம் எந்தச் சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். ஆனால், பிரிட்டனில் சூழலை மோசமான அளவுக்குச் செல்லாது என்று நம்புகிறேன்.

ஒமைக்ரான் வைரஸ் குறித்து அதிகமான புள்ளிவிவரங்கள் தேவைப்படுகிறது. உலகில் மற்றநாடுகளில் ஒமைக்ரான் பரவலையும் தொடர்ந்து நாம் கண்காணிப்பது அவசியம். எதற்கும் தயாாரக இருப்போம். அதேவேளையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும்” என்றார்