ஆற்றில் சென்ற படகு திடீரென தீப்பிடித்தது -40 பயணிகள் உயிரிழப்பு

தீப்பற்றி எரியும் படகு

வங்காளதேசத்தில் படகு விபத்தில் சிக்கிய சுமார் 150 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டாக்கா: வங்காளதேசத்தின் தெற்கு பகுதியில் உள்ள சுகந்தா ஆற்றில் சென்றுகொண்டிருந்த மிகப்பெரிய பயணிகள் படகு இன்று அதிகாலையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. டாக்காவில் இருந்து பார்குணா நோக்கி சென்ற அந்த படகின், என்ஜின் பகுதியில் முதலில் தீப்பற்றியதாக தெரிகிறது. பின்னர் படகின் மற்ற பகுதிகளுக்கும் தீ பரவியது. இதனால் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் தீயில் சிக்கிக்கொண்டனர். பலர் உயிர்பிழைப்பதற்காக தண்ணீரில் குதித்து நீந்தி கரையேறி உள்ளனர்.

விபத்து பற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 40 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 40 பேரில் பெரும்பாலானோர் தீயில் சிக்கி இறந்துள்ளனர். சிலர் ஆற்றில் குதித்ததால் நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.

சுமார் 150 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் பலரைக் காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. படகில் மொத்தம் 800 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.