இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி எப்போது செலுத்திக்கொள்ள வேண்டும்?- வெளியான தகவல்
கோவிஷீல்டு, கோவேக்ஸின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளி குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி எப்போது செலுத்திக்கொள்ள வேண்டும்?- வெளியான தகவல்
புது டெல்லி: ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் முதல்கட்டமாக மருத்துவப்பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள், இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரும் ஜனவரி 10-ம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்நிலையில் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்துவதற்கான கால இடைவெளி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி, 2-வது தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 9 முதல் 12 மாதங்களுக்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தும் வகையில் கால இடைவெளியை நிர்ணயிக்க நோய்த்தடுப்பு பிரிவு மற்றும் நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (என்.டி.ஏ.ஜி.ஐ) நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பரவலாக செலுத்தப்படும் கோவிஷீல்டு, கோவேக்ஸின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான கால இடைவெளி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.