வைகுண்ட ஏகாதசி: திருமலைக்கு நேரில் வரும் பக்தர்களுக்கு மட்டுமே அறைகள் வழங்கப்படும்

திருப்பதி

வைகுண்ட ஏகாதசியையொட்டி ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு நேரில் வரும் பக்தர்களுக்கு மட்டுமே அறைகள் வழங்கப்படும், என அதிகாரி தெரிவித்துள்ளார்.

திருமலை : திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி கூறியதாவது:-

திருமலையில் பக்தர்கள் தங்குவதற்கு 7 ஆயிரத்து 500 அறைகள் உள்ளன. தற்போது 1,300 அறைகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. இதனால் பக்தர்கள் திருப்பதியில் அறைகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வரவேற்பு மையம் 1-க்கு உட்பட்ட மங்கலம்பாய் காட்டேஜில் (எம்.பி.சி) உள்ள அறைகளின் எண்ணிக்கை-683. அதில் தற்போது 516 அறைகள் பக்தர்களுக்கு வழங்கப்படும். மீதமுள்ள 167 அறைகள் பழுதுப்பார்க்கப்படுகிறது.

வரவேற்பு மையம் 2 மற்றும் 3-க்கு உட்பட்ட பத்மாவதி விருந்தினர் மாளிகையில் 670 அறைகள் உள்ளன. அதில் பக்தர்களுக்காக 487 அறைகள் வழங்கப்படுகிறது. மீதி உள்ள 183 அறைகள் பழுதுப்பார்க்கப்படுகிறது. இதுதவிர 6 ஆயிரத்து 285 அறைகள் உள்ளன. அதில் தற்போது 4 ஆயிரத்து 814 பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. மீதி உள்ள 1,260 அறைகள் பழுதுப்பார்க்கப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி மாதம் 11-ந்தேதியில் இருந்து 14-ந்தேதி வரை திருமலையில் தங்கும் அறைகளின் முன்பதிவு ரத்து செய்யப்பட்டு, நேரில் வரும் பக்தர்களுக்கு மட்டுமே அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

மங்களம் பாய் காட்டேஜில் (எம்.பி.சி)-34, கவுஸ்தூபம் விடுதி, டிராவலர்ஸ் பங்களா காட்டேஜ் (டி.பி.சி) கவுண்ட்டர், அட்வான்ஸ் ரிசர்வ்வேஷன் (ஏ.ஆர்.பி) கவுண்ட்டர்களில் 11-ந்தேதி இரவு 12 மணியில் இருந்து 14-ந்தேதி இரவு 12 மணி வரை பக்தர்களுக்கு அறைகள் ஒதுக்கப்பட மாட்டாது.

ஜனவரி மாதம் 11-ந்தேதியில் இருந்து 14-ந்தேதி வரை காணிக்கையாளர்களுக்கு அறைகள் ஒதுக்கீடு சலுகை இருக்காது. வி.ஐ.பி. பக்தர்களுக்கு வெங்கடகலா நிலையம், ராமராஜ நிலையம், சீதா நிலையம், சன்னிதானம் மற்றும் கோவிந்தசாய் ஆகிய ஓய்வு இல்லங்களில் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு தரிசனம் செய்ய வரும் முக்கிய வி.ஐ.பி. பக்தர்களுக்கு சாமி தரிசன டிக்கெட்டுகள் மற்றும் அறைகள் வழங்கப்படும்.

திருமலையில் 6 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கவுண்ட்டர்கள் மூலம் சாதாரணப் பக்தர்களுக்கு அறைகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்