காங்கிரஸ் பாதயாத்திரையை நிறுத்தியது ஏன்?: சித்தராமையா விளக்கம்

சித்தராமையா

பாதயாத்திரையால் தான் கொரோனா பரவியது என்ற தவறான எண்ணம் மக்களிடம் வந்துவிடக்கூடாது என்ற காரணத்தினால் பாதயாத்திரையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என்று முடிவு எடுத்துள்ளோம்.

பெங்களூரு : மேகதாது திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி கடந்த 9-ந் தேதி மேகதாதுவில் பாதயாத்திரையை தொடங்கியது. 4 நாட்கள் முடிவடைந்த நிலையில் இந்த பாதயாத்திரை நேற்று முன்தினம் இரவு ராமநகரை அடைந்தது. நேற்று 5-வது நாள் பாதாயத்திரை தொடங்க இருந்தது. இந்த நிலையில் பாதயாத்திரைக்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து பாதயாத்திரையை தற்காலிகமாக நிறுத்துவதாக அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமர் மற்றும் சித்தராமையா கூட்டாக அறிவித்தனர். இதுகுறித்து சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மேகதாது திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி நாங்கள் கடந்த 9-ந் தேதி பாதயாத்திரையை தொடங்கிேனாம். 4 நாட்கள் பாதயாத்திரை நடத்தினோம். இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. எங்களுக்கும் பொறுப்பு உள்ளது. இந்த பாதிப்பு அதிகரித்ததற்கு காரணம் காங்கிரசார் அல்ல. பா.ஜனதாவினரே காரணம்.

கொரோனா 3-வது அலை தொடங்கிய நிலையிலும் முதல்-மந்திரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 6-ந் தேதி புதிய எம்.எல்.சி.க்கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இது விதிமுறை மீறல் இல்லையா?. அதில் முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள் கலந்து கொண்டனர். பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சுபாஷ் குத்தேதார், ரேணுகாச்சார்யா போன்றவர்கள் விதிமீறலில் ஈடுபட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?.

ஆனால் காங்கிரசார் மீது மட்டும் இந்த அரசு பொய் வழக்குகளை பதிவு செய்துள்ளது. நாங்கள் பாதயாத்திரை நடத்துவதாக அறிவித்தபோது கொரோனா 3-வது அலை தொடங்கி இருக்கவில்லை. இன்று (நேற்று) ராமநகரில் இருந்து 5-வது நாள் பாதயாத்திரையை தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் நாங்கள் அதை தொடங்கவில்லை.

எப்படியாவது செயல்பட்டு காங்கிரசின் பாதயாத்திரையை நிறுத்திவிட வேண்டும் என்று அரசு முயற்சி செய்தது. மொத்தத்தில் கொரோனா பரவல் விஷயத்தில் இந்த அரசு நியாயமான முறையில் நடந்து கொள்ளவில்லை. மக்களின் உடல் ஆரோக்கியத்தில் காங்கிரசுக்கும் அக்கறை உள்ளது. காங்கிரசின் பாதயாத்திரையால் தான் கொரோனா பரவியது என்ற தவறான எண்ணம் மக்களிடம் வந்துவிடக்கூடாது என்ற காரணத்தினால் பாதயாத்திரையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என்று முடிவு எடுத்துள்ளோம்.

கொரோனா 3-வது அலையின் தாக்கம் குறைந்த பிறகு, கட்டுப்பாடுகள் வாபஸ் பெற்ற பிறகு இந்த பாதயாத்திரையை மீண்டும் ராமநகரில் இருந்து தொடங்கி பெங்களூருவில் நிறைவு செய்வோம். இந்த பாதயாத்திரைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்த இந்த பகுதியின் எம்.பி.யாக இருக்கும் டி.கே.சுரேஷ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். கட்சி நிர்வாகிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தி பாதயாத்திரையை நிறுத்தும் முடிவை எடுத்துள்ளோம். எங்களுக்கு மக்களின் நலன் முக்கியம். இந்த பாதயாத்திரையில் பொதுமக்கள் தாமாக முன்வந்து கலந்து கொண்டனர்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.