ஹெலிகாப்டர் விபத்து
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய முப்படைக் குழு, அதன் முதற்கட்ட விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
புதுடெல்லி: கோவை மாவட்டம் சூலூரில் இருந்து, நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவ கல்லூரியில் நடக்க இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் கடந்த டிசம்பர் 8-ந் தேதி குன்னூரில் விபத்துக்குள்ளானது. இதில் 14 பேரும் பலியாகினர்.
பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணமா அல்லது சதிச் செயலா? என்ற சந்தேகம் எழுந்தது.
எனவே, இந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய விமானப்படை தளபதி மானவேந்திரா சிங் தலைமையிலான முப்படை அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது விசாரணையை நிறைவு செய்து சமீபத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது.
இந்த நிலையில், முப்படை குழு விசாரணை அறிக்கையின் முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
டிசம்பர் 8-ம்தேதி நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய முப்படைக் குழு, அதன் முதற்கட்ட விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில், ஹெலிகாப்டர் விபத்திற்கு இயந்திரக் கோளாறோ, நாசவேலையோ அல்லது கவனக்குறைவோ காரணம் அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம். எதிபாராத விதமாக ஏற்பட்ட திடீர் மேகக்கூட்டங்களுக்குள் ஹெலிகாப்டர் நுழைந்ததால் விபத்துக்குள்ளானது என்றும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விமானப்படை தனது அறிக்கையில் கூறி உள்ளது.