கொரோனா தடுப்பூசிகளை சந்தையில் விற்பனை செய்யலாம்: மத்திய அரசு அனுமதி

கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி

சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள், தடுப்பூசி தொடர்பாக தற்போது நடந்துகொண்டிருக்கும் மருத்துவ பரிசோதனைகள் தொடர்பான தரவைச் சமர்ப்பிக்க வேண்டும்.

புதுடெல்லி: இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த தடுப்பூசிகளை தற்போது அரசே நேரடியாக கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக செலுத்தி வருகிறது.

இந்நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகளை வெளிச் சந்தையில் விற்பனை செய்ய அனுமதி கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. மருந்து குறித்த பரிசோதனை தரவுகளும் சமர்ப்பிக்கப்பட்டன.

இவற்றை ஆராய்ந்த வல்லுநர் குழு, இரண்டு மருந்துகளையும் வெளிச்சந்தையில் விற்பனை செய்ய அனுமதிக்கலாம் என பரிந்துரை செய்தது. அதனையடுத்து, புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனை விதிகளின் கீழ் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) அனுமதி அளித்துள்ளது. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வயது வந்தோருக்கு மட்டும் தடுப்பூசிகளை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இரண்டு நிறுவனங்களும், தற்போது நடந்துகொண்டிருக்கும் மருத்துவ பரிசோதனைகள் தொடர்பான தரவைச் சமர்ப்பிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தியபின் ஏற்படும் பக்கவிளைவுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மருத்துவமனை மற்றும் கிளினிக்குகளின் மருந்து கடைகளில் இரண்டு தடுப்பூசி மருந்துகளும் விற்பனைக்கு வருகின்றன.

maalaimalar