கொல்கத்தா:
மேற்கு வங்காள முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, உத்தர பிரதேச மாநிலத்தில் பிரசாரம் செய்துவிட்டு, கொல்கத்தாவுக்கு திரும்பியபோது அவர் பயணம் செய்த விமானம் திடீரென கடுமையாக குலுங்கியது. இதில், மம்தாவுக்கு உள்காயம் ஏற்பட்டது.
எனினும், விமானி சாமர்த்தியமாக விமானத்தை செலுத்தி, கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினார். இது குறித்து விரிவான அறிக்கை கேட்டு, மத்திய விமான போக்குவரத்து இயக்குனரகத்துக்கு, மேற்கு வங்காள அரசு கடிதம் அனுப்பியது.
இந்நிலையில், சம்பவம் நடந்து 2 நாட்கள் கழித்து முதல்வர் மம்தா பானர்ஜி
கூறியதாவது:-
நான் பயணித்த விமானத்தின் எதிரே மற்றொரு விமானம், திடீரென்று வந்தது. அடுத்த 10 வினாடிகள் இதே நிலை தொடர்ந்திருந்தால் இரண்டு விமானங்களும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டிருக்கும். ஆனால் விமானியின் சாதுர்யத்தால்தான் நான் உயிர் பிழைத்தேன். விமானம் 6,000 அடி கீழே இறங்கியது. இதனால் எனக்கு காயம் ஏற்பட்டது. இன்னும் வலி இருக்கிறது. சம்பவம் தொடர்பாக இதுவரை ஏடிசி மற்றும் டிஜிசிஏவிடம் இருந்து எந்த அறிக்கையும் வரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Malaimalar