புதுடெல்லி:
கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய படைகள் தடுத்து நிறுத்தினர். இதில் இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.
சீன தரப்பில் 45 வீரர்கள் கொல்லப்பட்டனர் என ரஷ்யா ஊடகமான டாஸ் செய்தி வெளியிட்டது. சீனா இதை மறுத்தது. இதன்பின், கடந்த பிப்ரவரியில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர் என அதிகாரப்பூர்வ தகவலை சீன முதன் முறையாக ஒப்புக்கொண்டது. இதற்கு சான்றாக, எல்லையில் நடந்த மோதலில் உயிர்த்hதியாகம் செய்த 4 சீன ராணுவ வீரர்களுக்கு கவுரவ பட்டங்களும், முதல் தர தகுதி பாராட்டுகளும் வழங்கப்பட்டன.
இதையடுத்து அங்கு இந்தியாவும், சீனாவும் ஆயிரக்கணக்கில் படைகளை குவித்து கண்காணிப்பு பணிகளை பலப்படுத்தின. இதனால் எல்லையில் கடுமையான பதற்றம் தொடர்ந்து வருகிறது. எனினும் படைகளை திரும்பப்பெற்று அங்கு அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கு இரு நாடுகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் அடிக்கடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியா மற்றும் சீனா இடையிலான 15-வது சுற்று பேச்சுவார்த்தை வரும் 11-ம் தேதி நடைபெறும் என பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்காக இந்திய தரப்பிலுள்ள சுசுல்-மோல்டோ பகுதி சந்திப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.
Malaimalar