புதுடெல்லி:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரு வாரங்களாகிறது. இதனால் வெளிநாட்டினர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
உக்ரைனில் சிக்கித் தவித்த இந்தியர்களை அண்டை நாடுகளின் உதவிகளுடன் மத்திய அரசு மீட்டு வருகிறது. ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் இதுவரை 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.
உக்ரைனில் இருந்து சுமார் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உக்ரைன், ஹங்கேரி எல்லை வாயிலாக நாடு திரும்பினர்.
இந்நிலையில், ஹங்கேரி நாட்டின் பிரதமர் விக்டர் ஆர்பனுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் கலந்துரையாடினார்.
உக்ரைனில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற உதவியதற்காக ஹங்கேரி பிரதமருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
உக்ரைனில் இருந்து ஹங்கேரி வாயிலாக இந்தியா திரும்பியவர்களுக்கு ஹங்கேரி பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், உக்ரைனில் இருந்து பாதியிலேயே படிப்பை தொடரமுடியாமல் நாடு திரும்பிய இந்திய மாணவர்கள் விரும்பினால் ஹங்கேரியில் படிப்பை தொடரலாம் என தெரிவித்தார்.
Malaimalar